உலகை உலுக்கிய டோங்கா எரிமலை உமிழ்வு!

By முகமது ஹுசைன்

எரிமலை உமிழ்வுகள் நமக்குப் புதிதல்ல என்றாலும், பொங்கலுக்கு மறுநாள், டோங்காவுக்கு அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை உமிழ்வை அப்படி சாதாரணமாகக் கடந்து சென்றுவிட முடியாது. கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளில், இதுவே பெரியது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வெடிப்பின்போது சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்கள், சாம்பல், நீராவி உள்ளிட்டவை சுமார் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு உமிழப்பட்டன. டோங்காடாபு முழுவதும் அடர்த்தியான சாம்பல் போர்வையால் மூடப்பட்டது. சாம்பல் மேகங்கள் பிற்பகல் வானத்தைக் கருமையால் மூடின.

கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால், பசிபிக் கடலில் சுனாமியும் ஏற்பட்டது. இந்த எரிமலை வெடிப்பும் சுனாமியும் டோங்காவின் பிரதான தீவான டோங்காடாபுவின் மேற்குக் கடற்கரையில் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தின. இந்த சுனாமி அலைகள் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை, பெரு, நியூசிலாந்து, ஜப்பான் உட்பட ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலும் பதிவு செய்யப்பட்டன.

டோங்கா எங்குள்ளது?

ஃபிஜிக்குக் கிழக்கே 800 கிலோமீட்டர் தொலைவிலும், நியூசிலாந்திலிருந்து 2,380 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள தீவுக்கூட்டமே டோங்கா. 170-க்கும் மேற்பட்ட தென் பசிபிக் தீவுகளைக் கொண்ட டோங்கா, ஒரு பாலினேசிய நாடு. சுமார் 1 லட்சம் மக்கள் அங்கே வசிக்கின்றனர்.

வெடித்த எரிமலை எங்கே உள்ளது?

டோங்காவில் வெடித்த எரிமலையின் பெயர் ஹங்கா-டோங்கா-ஹங்கா-ஹா'பாய். அந்த எரிமலை டோங்காவின் ஃபோனுவாஃபோ தீவிலிருந்து தென்கிழக்கே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில், இரண்டு சிறிய தீவுகளுக்கு இடையே கடலுக்கு அடியில் அமைந்துள்ளது. சுமார் 2,000 மீட்டர் உயரம்கொண்ட எரிமலையின் மேல் நுனி, சுமார் 100 மீட்டர் அளவுக்குக் கடல் மட்டத்திலிருந்து வெளியே தெரியும்படி இருக்கிறது.

முந்தைய வெடிப்புகள்

கடந்த சில தசாப்தங்களாக இந்த எரிமலை தொடர்ந்து வெடித்துவருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 2009-ல் நிகழ்ந்த வெடிப்பால், நீராவியும் சாம்பலும் காற்றில் உமிழப்பட்டன. கடல்நீரின் மேலே புதிய நிலப்பரப்பும் உருவானது. 2015 ஜனவரியில் ஏற்பட்ட வெடிப்பால், இரண்டு கிலோமீட்டர் அகலம் கொண்ட ஒரு புதிய தீவே உருவானது. இந்தப் புதிய தீவு, ஹங்கா-டோங்கா, ஹங்கா-ஹாபாய் ஆகிய தீவுகளையும் இணைத்தது.

மிக சமீபத்திய வெடிப்பு, டிசம்பர் 2021-ல் நிகழ்ந்தது. வாயு, நீராவி, சாம்பல் ஆகியவற்றை உள்ளடக்கிய புழுதி காற்றில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவுக்குப் பரவியது. ஜனவரி 14-ல் அந்த எரிமலை மீண்டும் வெடித்தது. ஆனால், ஜனவரி 15-ல் ஏற்பட்டது இதுவரை இல்லாத அளவு பெரியதாக இருந்தது. பசிபிக் கடல் முழுவதும் சுனாமி அலைகளைத் தூண்டிய அந்த வெடிப்பு, உலகம் முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சுனாமி எங்கே தாக்கியது?

இந்த எரிமலை வெடிப்பால், சனிக்கிழமையன்று டோங்காவின் மிகப்பெரிய தீவான டோங்காடாபுவில் சுனாமி ஏற்பட்டது. நுகுஅலோபா நகருக்கு அருகில் 1.2 மீட்டர் (சுமார் 4 அடி) உயரத்துக்கு அலைகள் எழுந்து, கடலோரச் சாலைகளில் பாய்ந்தன. இதில் உடைமைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து, ஃபிஜி, சமோவா, வனுவாடு உள்ளிட்ட பசிபிக் தீவு நாடுகளில் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. பெரிய அலைகள் கடற்கரையைத் தாக்கியதால், ஃபிஜியின் தலைநகர் சுவாவில் உள்ள உயரமான பகுதிகளுக்கு மக்கள் தப்பிச் சென்றனர்.

நியூசிலாந்து, ஜப்பான், பெருவின் சில பகுதிகள், அமெரிக்கா, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகியவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கைகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. ஜப்பானில், வடகிழக்கு மாகாணமான இவாட்டில் 2.7 மீட்டர் உயர அலைகள் ஏற்பட்டன. இது தவிர, பல சிறிய சுனாமிகள் பல இடங்களில் பதிவாகியுள்ளன. இந்த எரிமலை வெடிப்பால், அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் 3 முதல் 4 அடி உயரம்கொண்ட அலைகள் ஏற்பட்டன. கலிபோர்னியா, அலாஸ்கா, ஹவாய் ஆகிய இடங்களிலும் சுனாமி அலைகள் உணரப்பட்டன.

சாம்பல் மேகத்தின் தாக்கம்

எரிமலை உமிழ்வால் ஏற்பட்ட சாம்பல் மேகம் டோங்காவை முற்றிலும் மூடியது. மதிய வானம் இருட்டாகி, இரவு போல தோற்றமளித்தது. எரிமலைப் புழுதியின் அடர்த்தியான நுரை நுகுஅலோபா நகரைப் போர்த்திக்கொண்டது. இந்தச் சாம்பல் மேகம், டோங்காவின் காற்று, நீரில் பாதிப்பை ஏற்படுத்தியது. குடிநீர் விநியோகம் வெகுவாக மாசுபட்டது.

மேற்கு நோக்கி நகர்ந்த இந்தச் சாம்பல் மேகம், ஞாயிறு அன்று ஃபிஜி, வனுவாட்டு, நியூ கலிடோனியா ஆகிய நாடுகளுக்குச் சென்றது. திங்கள்கிழமைக்குள் இது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தை அடைந்தது. சாம்பல் மேகம் காரணமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி ஆகிய நாடுகளிலிருந்து டோங்காவுக்குச் செல்லும் பல விமானங்கள் ஒத்திவைக்கப்பட்டன.

அழிவின் அளவு?

1991-ல், பிலிப்பைன்ஸில் உள்ள பினாடுபோ மலையில் ஏற்பட்ட வெடிப்புக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய எரிமலை வெடிப்பு இது என்று ஆரம்பகட்டத் தரவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த வெடிப்பின் அளவு, பக்கவாட்டுப் பரவல் போன்றவற்றால், பினாடுபோ எரிமலை உமிழ்வைவிட இது மிகப்பெரியதாக இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எரிமலை வெடிப்பு, அதன் பின்னர் ஏற்பட்ட சுனாமியைத் தொடர்ந்து டோங்காவின் நுகுஅலோபாவில் வாழ்ந்த ஒரு பிரிட்டிஷ் நாட்டவர் உட்பட இருவர் உயிரிழந்தனர். சுனாமி அலைகள் நுகுஅலோபாவில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தின. கரையோரத்திலிருந்த படகுகளும், பெரும் பாறைகளும் அந்தப் பெரும் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டன. கடலோரத்திலிருந்த கடைகள் முற்றிலும் சேதமடைந்தன. கடலுக்கு அடியில் நிறுவப்பட்டிருந்த முக்கியத் தகவல் தொடர்பு கேபிளும் பாதிப்புக்குள்ளானது.

இன்னும் சிறிது காலத்துக்கு, டோங்காவைச் சுற்றி அமில மழை பெய்யவும் சாத்தியம் இருக்கிறது என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர். அமில மழை பொழிவு ஏற்பட்டால், பரவலான பயிர் சேதம் ஏற்படும். சாமை, சோளம், வாழைப்பழங்கள், தோட்டக் காய்கறிகள் போன்ற டோங்கா நாட்டின் பிரதான உணவுப் பயிர்களையும் அது பாதிக்கும்.

பவளப் பாறைகள்

இந்த எரிமலை வெடிப்பதற்கு முன்பே, அங்கே இருந்த பவளப் பாறைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தன. இந்நிலையில், எரிமலை சாம்பல் வீழ்வு அங்கே உள்ள பவளப்பாறைகளைத் துரிதமாகச் சேதப்படுத்தும். ஹங்கா டோங்காவில் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பவளப் பாறைகளின் பெரும்பாலான பகுதிகள், எரிமலைச் சாம்பலின் படிவுகளால் புதைக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. முக்கியமாக, இந்த எரிமலை உமிழ்வு கடல்நீரில் அதிக அளவு இரும்புத்தாதுவை வெளியிடுவதால், அது நீல-பச்சைப் பாசிகள், கடற்பாசிகள் ஆகியவற்றின் வளர்ச்சியை அதிகரிக்கும். இது அந்தப் பவளப் பாறைகளை மேலும் சிதைக்கும்.

அழிவின் மொழி

கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட எரிமலை வெடிப்புக்குப் பிறகு, பல எரிமலை நிபுணர்களும் புவியியலாளர்களும் டோங்காவின் நெருக்கடி நிலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று எச்சரித்துள்ளனர். இத்தகைய வெடிப்புகள் மேலும் தொடரும் என்பதே அவர்களின் கணிப்பு. அந்த வெடிப்புகள் எப்போது, எத்தனை, அல்லது எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை அவர்களால் கணிக்க முடியாது என்று அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையிலும். டோங்கா நாட்டைச் சேர்ந்த மக்கள் நம் எல்லோரையும் போல, நம்பிக்கையுடன் இருக்க முயற்சி செய்கிறார்கள். பேரிடர்கள் ஏற்படுத்தும் அழிவுகளும் அதனால் ஏற்படும் இன்னல்களும் வேதனைகளும் பேசும் மொழி மட்டுமல்ல; அதை எதிர்கொள்ளும் மனிதர்களின் முயற்சியும் உலகெங்கும் ஒன்றாகவே இருக்கிறது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE