உலகை அலறவைக்கும் ஒமைக்ரான்!

By காமதேனு

ஒமைக்ரான் திரிபின் பரவலால் கரோனா தொற்றுகள் அதிகரித்திருக்கும் நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் திணறிவருகின்றன. அமெரிக்கர்கள் சோர்ந்துவிட்டதாகவும், மன உளைச்சலுக்குள்ளாகியிருப்பதாகவும் அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் வாக்குமூலமே தந்திருப்பது பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது. அதிபராகப் பொறுப்பேற்று ஓராண்டு ஆன நிலையில், நேற்று (ஜன.19) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது அரசு சிறப்பாகச் செயல்பட்டதாகக் கூறினார். அதேவேளையில், கரோனா பரவல் அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவில் 95 லட்சம் குழந்தைகளுக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. சராசரி தொற்றுகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 8 லட்சத்தைத் தொட்டிருக்கிறது. இதையடுத்து, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியிருக்கிறது. 40 கோடி ‘என்-95’ முகக்கவசங்களை (அறுவை சிகிச்சைக்குரியது அல்ல) இலவசமாக வழங்க ஜோ பைடன் அரசு உத்தரவிட்டிருக்கிறது.

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 2,04,854 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. நியூசிலாந்தில் ஒமைக்ரான் தொற்றால் சமூகப் பரவல் ஏற்பட்டால், மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அந்நாட்டுப் பிரதமர் ஜெஸிந்தா ஆர்டர்ன் கூறியிருக்கிறார். ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் 33,899 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. 698 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஒமைக்ரான் தொற்றால் ஐரோப்பாவிலும் கரோனா பரவல் கடுமையாக அதிகரித்திருக்கிறது. ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,12,323 பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. பிரான்ஸில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. டென்மார்க்கில் புதிதாக 38,759 பேர் கரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள். கடந்த இரண்டு வாரங்களை ஒப்பிட 37 சதவீதம் அதிகம்.

மலேசியாவில் அடுத்த மாதம் முதல் 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்த முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE