ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் நேற்று (ஜன.17) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 26 பேர் உயிரிழந்தனர். 5.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில், மேற்குப் பகுதியில் உள்ள பத்கீஸ் மாகாணத்தின் காதிஸ் மாவட்டத்தில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 2 மணி நேரம் கழித்து 4.6 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அல் ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் ஐந்து பெண்கள், நான்கு குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழந்திருப்பதாக பத்கீஸ் மாகாணத்தின் செய்தித் தொடர்பாளர் பாஸ் முகமது சர்வாரி தெரிவித்திருக்கிறார். கட்டிடங்களின் மேற்கூரைகள் இடிந்துவிழுந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
இந்நிலநடுக்கத்தால், முகுர் மாவட்டத்திலும் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். எனினும், அம்மாவட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.
2021 ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் கடும் சிரமத்தை எதிர்கொண்டிருக்கின்றனர். அடிப்படைவாதிகளான தாலிபான்களின் ஆட்சி அமைந்துவிட்டதால், இதுவரை அந்நாட்டுக்கு அளித்துவந்த நிதியுதவிகளை மேற்கத்திய நாடுகள் நிறுத்திவிட்டன. இதனால், கல்வி, மருத்துவம் என அடிப்படைக் கட்டமைப்புகளில் நிதி கிடைக்காமலும், வேலைவாய்ப்புகளை இழந்ததாலும் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள் ஆப்கானியர்கள். கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கும் மாவட்டங்களில் காதிஸ் மாவட்டமும் ஒன்று ஆகும். இந்நிலையில், நிலநடுக்கத்தால் ஏற்பட சேதங்கள் ஆப்கானியர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தும் எனக் கருதப்படுகிறது.
யூரேஷிய மற்றும் இந்திய டெக்டோனிக் தட்டுகள் இணையும் பகுதியில் அமைந்திருக்கும் இந்து குஷ் மலைப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. 2015-ல் இந்து குஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 280 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது!