ஆயுதம் தயாரிக்கவல்ல அரிய கனிமங்கள்: சீனாவுக்கு ‘செக்’ வைக்கும் அமெரிக்கா!

By ஆர்.என்.சர்மா

முதலாளித்துவ நாடான அமெரிக்கா, உற்பத்திச் செலவைக் குறைத்து விற்பனை விலையை உயர்த்தி லாபம் சம்பாதிப்பதைத் தவிர வேறு எதிலுமே இத்தனை ஆண்டுகளாக அதிக அக்கறை செலுத்தியதில்லை. இந்நிலையில் முதல் முறையாக எந்தத் துறைகளையெல்லாம் சீனா வளைத்துப்போட்டிருக்கிறது என்று பார்த்து அதிர்ந்துபோயிருக்கிறது அமெரிக்கா. இதைத் தடுப்பதற்கு என்ன வழி என்று கையைப் பிசைந்துகொண்டிருந்த அமெரிக்கா, இதற்காகவே ஒரு சட்டத்தை உருவாக்கும் பணியில் இறங்கியிருக்கிறது.

ஆம்! ஆயுதங்களையும் ராணுவ சாதனங்களையும் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அரிய கனிமங்களை 2026-ம் ஆண்டு முதல் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவிடமிருந்து வாங்கத் தடை விதிக்கும் சட்டத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கிறது..

இதில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் இரண்டு. முதலாவது, குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி என இரண்டு கட்சிகளுமே இதை இணைந்து தயாரிக்கின்றன. ஆயுதம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்தக் கட்டுப்பாடு; வேறு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் சீனாவிடமிருந்து இறக்குமதி செய்துகொள்ளத் தடையில்லை என்பது இரண்டாவது அம்சம்.

பின்னணி என்ன?

இந்த அரிய கனிமங்கள் அமெரிக்காவிலேயே தாராளமாகக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை அகழ்ந்தெடுப்பதும் தூய்மைப்படுத்துவதும் சவாலான விஷயங்கள். அந்தப் பணிகளின்போது நிலம், நீர், காற்று மூன்றுமே பெருமளவு அசுத்தப்படும். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதை சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்பதாலும், சீனா அவற்றை மிகவும் மலிவாக, எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஏற்றுமதி செய்து வந்ததாலும் அமெரிக்க அரசு அதைப் பற்றி இதுவரை கவலைப்பட்டதில்லை.

சமீபத்தில், துறைவாரியாக எந்தெந்த தொழில்கள் எல்லாம் முழுக்க முழுக்க சீன இறக்குமதிகளையே நம்பியிருக்கின்றன என்று பார்த்த அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனுக்குப் பேரதிர்ச்சி, இந்த அரிய கனிம வளம் தொடர்பாக ஏற்பட்டது. அதன் அவசர அறிக்கையை அடுத்தே இந்த மசோதா சூடாகத் தயாராகிக்கொண்டிருக்கிறது. அர்கான்சாஸ் மாநில குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாம் காட்டன், அரிசோனா மாநில ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் கெல்லி இணைந்து இந்த மசோதாவைத் தயாரிக்கின்றனர்.

அமெரிக்க ஒப்பந்ததாரர்களிடம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டாலர்களைக் கொடுத்து போர் விமானங்கள், ஏவுகணைகள், அதி நவீன போர்க் கருவிகளை பென்டகன் வாங்குகிறது. அந்த ஒப்பந்ததாரர்களோ சீனாவிடம் அரிய கனிமவளங்களை வாங்கி இவற்றைத் தயாரிக்கின்றனர். இரு நாடுகளுக்கும் இடையில் உறவு சுமுகமாக இல்லை. அத்துடன் எதிர்காலத்தில் தனது தேவைகளைத் தானே பூர்த்தி செய்துகொள்வது நல்லது என்ற எண்ணம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

கனிமங்களிலிருந்து ஆயுதங்கள்

அரிய கனிம வளங்களிலிருந்து 17 வகையான உலோகத் தொகுப்புகள் தயாரிக்கப்படுகின்றன. மின்சார வாகனங்கள், ஆயுதங்கள், மின்னணு சாதனங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் காந்தம் இவற்றிலிருந்துதான் தயாராகிறது. இரண்டாவது உலகப் போர் சமயத்தில் அமெரிக்கா இந்தத் தொழில்துறையை உருவாக்கியது. அமெரிக்க விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இந்தத் துறையை வெகுவாக நவீனப்படுத்திவிட்டனர். ராணுவத் தேவைக்கு மட்டுமல்லாமல் வேறு பல துறைகளுக்கும் இவை அவசியமானவையாகிவிட்டன.

சீனா இந்தத் துறையில் காலடி எடுத்து வைத்து கடந்த முப்பதாண்டுகளில் பிறர் அறியாதபடிக்கு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது. எந்த அளவுக்கு என்றால், இப்போது அமெரிக்காவில் ஒரேயொரு அரிய கனிமவளச் சுரங்கம்தான் செயல்பாட்டில் இருக்கிறது. அங்கு வெட்டியெடுக்கப்படும் கனிமத்தைக் கொண்டு உலோகம் தயாரிக்கும் பிரிவு ஒன்றுகூட அமெரிக்காவில் செயல்படவில்லை. இப்போது தனது அரிய கனிமவள இறக்குமதியில் 80 சதவீதத்துக்காக சீனாவைத்தான் நம்பியிருக்கிறது அமெரிக்கா. இந்தத் துறையில் பல்வேறு சாதனங்களைத் தயாரிக்கும் தனது நிறுவனங்கள் அனைத்தையும் ஒரே அமைப்பாக இணைத்துவிட்டது சீனா. இதனால் உலக நாடுகள் அனைத்தின் தேவைகளையும் நிறைவேற்றவோ, நிராகரிக்கவோ சீனாவால் முடியும். நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள அரிய கனிமவள சுரங்கங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும் சீன அரசு புதிதாக முடிவு செய்திருக்கிறது.

கடந்த காலங்களில் அரிய கனிம வளம் கிடைப்பது அரிதாக இருந்தபோது உலக வர்த்தக அமைப்பு மூலம் அமெரிக்காவே தலையிட்டு, தேவைப்படும் நாடுகளுக்கு சீனம் அதிகம் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. அப்போதுகூட தன்னுடைய நாட்டில் இதைத் தயாரிக்க முடியும் என்பதையே மறந்த நிலையில் இருந்தது. இப்போது அரிய கனிம வளம் மட்டுமல்ல, அமெரிக்காவின் ஆயுதத் தயாரிப்பு மற்றும் நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தேவைப்படும் அனைத்து மூலப் பொருள்களையும் துணைப் பொருள்களையும் பட்டியலாகத் தயாரித்துத் தருமாறு பென்டகன் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய அரிய மூலப் பொருள்களைப் போதிய அளவு கையிருப்பில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. கையிருப்புக்கான மூலப் பொருள் சீனாவிடமிருந்துதான் அடுத்த சில ஆண்டுகளுக்கு இறக்கமதி செய்யப்படவிருக்கிறது என்பதுதான் இதில் வினோதம்.

தன்னை மிஞ்சிய வல்லரசு இல்லை என்று இறுமாப்பில் மிதந்த அமெரிக்கா, பல வழிகளிலும் சீனா தன்னைச் சுற்றிவளைத்திருப்பதை மிகத் தாமதமாகத்தான் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE