கூன் விழும் அபாயத்தில் குழந்தைகள்!

By ஆர்.என்.சர்மா

சீனாவின் ஆரம்பப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கூட மாணவர்களில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு முதுகுத் தண்டுவடம் இயல்பைவிட சிறிதளவு வளையத் தொடங்கியிருக்கிறது. இந்த அறிகுறி பெண் குழந்தைகளுக்கு அதிகமிருக்கிறது. மாணவர்களிடையே மருத்துவ நிபுணர்கள் நடத்திய தொடர் சோதனைகளில் கிடைத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், சீன நாட்டின் அரசு இதழான ‘குளோபல் டைம்ஸ்’ தெரிவிக்கும் இந்தச் செய்தி சீனாவுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் ஒரு எச்சரிக்கை மணி!

சீனக் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் நோயில் மூன்றாவது இடத்தை இந்த முதுகுத் தண்டுவட வளைவு நோய் பிடித்திருக்கிறது. நொறுக்குத்தீனி என்று அழைக்கப்படும் சக்கை உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தொந்தி, கிட்டப் பார்வை ஆகிய கோளாறுகளுக்கு அடுத்த இடத்தை முதுகுத் தண்டுவட பாதிப்பு பிடித்துவிட்டது. இதற்குக் காரணம் அன்றாடம் பள்ளிக்கூடங்களுக்கு அதிக பாடப்புத்தகங்களையும் நோட்டுகளையும் உணவு, குடிநீர் ஆகியவற்றையும் வேறு கல்விச் சாதனங்களையும் சுமந்து செல்வதுதான் என்று வலைதளங்களில் குழந்தைகளின் பெற்றோர்கள் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வருகின்றனர்.

வடக்கு சீனாவின் ஹெபேய் மாநிலத்தின் ஹெங்ஷு என்ற நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு ஸ்கோலியோசிஸ் என்ற முதுகுத் தண்டுவடப் பிரச்சினை இருப்பதை முதலில் கவனித்தனர். அந்த மாணவி பள்ளிக்கூட வகுப்பறையில் தொடர்ந்து அமரும் விதம் காரணமாக அப்படி ஏற்பட்டிருக்கும் என்று டாக்டர்கள் கருதினர். இந்தக் குறையைச் சரிசெய்யாவிட்டால் நாளடைவில் அந்த மாணவிக்கு, தோளின் ஒரு பக்கம் உயர்ந்தும் இன்னொரு பக்கம் சரிந்தும் காணப்படும். கால்களின் நீளமும் சமமாக இருக்காமல் ஒரு கால் சில அங்குலம் நீண்டும் இன்னொரு கால் குறுகியும் வளைந்துவிடும். உடலில் வேறு குறைகளும் ஏற்படும். அவற்றின் விளைவாகத் துணை விளைவுகளும் அதிகரிக்கும்.

இந்தத் தகவல் வெளிவந்தவுடன் சீன நாட்டின் ட்விட்டர் என்று கருதப்படும் வெய்போவில் ஏராளமானோர் இதுகுறித்த பல காரணங்களைத் தெரிவித்தனர். சீனர்கள் முந்தைய தலைமுறையைப் போல குள்ளமாக இருப்பதில்லை. ஆனால், அவர்களுடைய உயரத்துக்கு ஏற்றபடி பள்ளிக்கூடங்களில் மேஜை, நாற்காலிகளின் உயரமும் உயர்த்தப்படுவதில்லை. இதனால் மேஜைக்கேற்ப குழந்தைகள் முதுகை வளைத்துக்கொண்டு உட்காருகிறார்கள், எழுதுகிறார்கள், படிக்கிறார்கள். இப்படி அன்றாடம் பல மணி நேரம் செயற்கையாக உடலை வளைப்பதால் முதுகுத் தண்டுவடமும் இயல்புக்கு மாறாக நடுநிலையிலிருந்து சற்றே வளைந்துவிடுகிறது. இதுவே பல நோய்களுக்கும் காரணமாகிறது. தண்டுவடம் வளைவிலும் சில வகைகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணமும் இருக்கிறது.

இப்படித் தண்டுவடம் வளையாமல் இருக்க வேண்டும் என்றால் முதலில் பள்ளிக்கூடப் புத்தகங்களின் சுமையைக் குறைக்க வேண்டும். முதுகில் சுமக்கும் வழக்கத்தை விட வேண்டும். பள்ளிக்கூடங்களிலும் வீடுகளிலும் குழந்தைகள் பெரியவர்களின் உயரங்களுக்கேற்ற இருக்கைகளைப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளை முதுகை நேராக வைத்திருக்கும் வகையில் யோகாசனங்களைச் செய்யச் சொல்ல வேண்டும். உடல் பயிற்சிகளும் கைகொடுக்கும். முதுகு கூன் போடக்கூடாது என்பதைக் கற்றுத்தர வேண்டும் என்று பலரும் யோசனை கூறியுள்ளனர். கூடைப்பந்து விளையாட்டு, நீச்சல், பார் கம்பிகளில் தொங்கிப் பயிற்சி எடுப்பது போன்ற உடல் பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர்.

இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பள்ளிக்கூடப் புத்தகங்களின் சுமை குறித்துப் பல முறை விவாதிக்கப்பட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆர்.கே.லட்சுமண் இதை அரசுகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். எல்லா பாடப்புத்தகங்களையும் நோட்டுகளையும் பள்ளிக்கு எடுத்துவரத் தேவையில்லாமல் செய்ய வேண்டும் என்றொரு யோசனை கூறப்பட்டது. மாணவர்கள் பள்ளிக்கூடத்திலேயே இவற்றில் பாதியை வைக்க இடம் தர வேண்டும் என்று கூட யோசனை கூறப்பட்டது. வகுப்பறைகளே இல்லாத பள்ளிக்கூடங்கள் அதிகமிருக்கும் நாட்டில் இதற்கெல்லாம் வழியேது?

பாடத்திட்டம் மட்டுமல்லாமல் புத்தகப் பைகளும் குழந்தைகளுக்குக் கூடுதல் சுமையாக மாறிக் கொண்டிருப்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE