வணிகக் கூட்டாளிகளாகும் இந்தியா - பிரிட்டன்!

By ஆர்.என்.சர்மா

பிரிட்டன், இந்தியா இடையில் தடையற்ற வர்த்தக உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருதரப்பு வர்த்தகம் பல மடங்கு பெருகும் என்று பிரிட்டன் தரப்பில் உற்சாகம் காட்டப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிரிட்டனின் பொருளாதாரம் மீட்சி பெற, இந்தியாவுடனான வர்த்தக உறவு பெரிதும் கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு பிரிட்டிஷ் அரசியல், தொழில்துறை வட்டாரங்களில் அதிகமாகவே இருக்கிறது.

கடந்த எழுபது ஆண்டுகளில் படிப்படியான பொருளாதார வளர்ச்சி பெற்ற இந்தியா இப்போது உலக நாடுகள் அனைத்துமே, வாய்ப்புக்காக ஏங்கும் பெரிய வர்த்தகச் சந்தையாகத் திகழ்கிறது. இந்திய மக்கள்தொகை 140 கோடிக்கும் மேல் என்பதுடன் மிகப் பெரிய அளவு மத்திய தர வர்க்கம் உருவாகிறது என்பதும் அந்த வர்க்கத்தினர் நுகர்வுக் கலாச்சாரத்தை மேலும் மேலும் வளர்த்துக்கொள்கின்றனர் என்பதும் பல நாடுகளை ஈர்க்கும் விஷயங்கள். அத்துடன் தொழில், வர்த்தகத் துறைகளில் இந்தியா அடைந்து வரும் முன்னேற்றமும் உலகத்தால் மிக கவனமாகப் பார்க்கப்படுகிறது.

அதிக மக்கள்தொகையுடன் ஏராளமான சமூக - அரசியல் பின்னடைவுகளுடன் இருந்த இந்தியா, முதலில் ஐந்தாண்டு திட்டங்கள் காரணமாகவும் பிறகு தாராளப் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவும் மிகப் பெரிய தொழில் பேட்டையாகவும் சந்தையாகவும் வேளாண் உற்பத்திக் களஞ்சியமாகவும் விளங்குகிறது. மருத்துவத் துறைக் கட்டமைப்புகள் போதிய அளவு வலுப்பெறாமல் இருந்தாலும் மருந்து மாத்திரை உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளுக்கு இணையாக வளர்ந்து வருகிறது. கோவிட் பெருந்தொற்றுக்குத் தடுப்பூசிகளைத் தயாரித்ததிலும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததிலும் இந்தியாவின் அபாரத் திறமை உலக அரங்கில் பாராட்டப்பட்டது. தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா பெற்றுள்ள வளர்ச்சியும் அயல்பணி ஒப்படைப்பில் தொடங்கிய அதன் பயணம் இப்போது செமி கண்டக்டர் தயாரிப்பில் தனிக் கவனம் செலுத்தும் அளவுக்கு வளர்ந்திருப்பதும் பெரிய முன்னேற்றம் என்பதை உலகம் அங்கீகரித்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் கவனம் செலுத்திய இந்தியா இப்போது ஐரோப்பிய நாடுகள் உள்பட பலவற்றுக்கு மிகக் குறைந்த செலவில் செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும் சேவையைச் செய்து தருகிறது. அதன் நானோ ஆராய்ச்சிகளும் புதுப்பிக்கப்படக்கூடிய ஆற்றல்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கப் போகும் அடுத்த கட்டமும் இந்தியாவுடன் உறவு கொண்டால் நமக்கும் நிச்சயம் பலன் கிடைக்கும் என்ற பேராவலை எல்லா நாடுகளிலும் வளர்த்திருக்கின்றன.

இந்தச் சூழலில், இந்திய நாட்டைத் தன்னுடைய உள்ளங்கையைப் போல நன்கு அறிந்து வைத்திருக்கும் பிரிட்டன், நம்முடன் வாணிபக் கூட்டாளியாகச் சேர காத்திருக்கிறது. இந்தக் கூட்டு பிரிட்டனின் அனைத்துப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும் என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பு. இதன் மூலம் பிரிட்டனின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி, தனி நபர் வருமானம், நிறுவனங்களின் லாபம், சமூகத்தில் வேலைவாய்ப்பு ஆகிய அனைத்தும் உயரும் என்று கணித்திருக்கிறார்கள்.

பிரிட்டனின் முக்கியத் தொழில்களான கார் உள்ளிட்ட மோட்டார் வாகன உற்பத்தி, ஸ்காட்லாந்தின் மதுபானத் தயாரிப்பு ஆலைகள், பிரிட்டிஷ் நிதித் துறை அளிக்கும் நவீன சேவைத் தொழில்நுட்பங்கள் ஆகியவை இந்தியாவால் மிகவும் விரும்பி ஏற்கப்படும் என்ற நம்பிக்கை பிரிட்டிஷ்காரர்களுக்கு இருக்கிறது. அது மட்டுமல்லாமல், பிரிட்டனில் சென்று குடியேறிய இந்திய வம்சாவளியினர் தொழிலதிபர்களாகவும் நிதி ஆலோசகர்களாகவும் மருத்துவர்-பொறியியலாளர்-கணக்குத் தணிக்கையாளர் என்று சுயதொழிலில் கோலோச்சுபவர்களாகவும் உற்பத்தியாளர்களாகவும் வியாபாரிகளாகவும் நன்கு பெயரெடுத்துள்ளனர். அத்துடன் அரசியலிலும் ஈடுபட்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திலும் அமைச்சரவைகளிலும் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தத் தொடங்கியுள்ளனர். எனவே இந்த உறவு மேலும் வலுப்படத்தான் செய்யும் என்ற நம்பிக்கை இருதரப்பிலும் இருக்கிறது.

2050-வது ஆண்டு வாக்கில் இந்தியாதான் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இருக்கப் போகிறது என்று உலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. அப்போது இந்தியாவில் மத்தியதர வர்க்கத்தில் 25 கோடிக்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்திருந்தால்கூட பிரிட்டனுக்கு இவ்வளவு பெரிய சந்தை கிடைக்காது. இந்தியா மட்டுமின்றி கனடா, மெக்ஸிகோ, வளைகுடா நாடுகளுடனும் வர்த்தக உறவை வலுப்படுத்த பிரிட்டன் இலக்கு நிர்ணயித்திருக்கிறது.

பிரிட்டனில் தயாராகும் ஸ்காட்ச் விஸ்கி மீது 150 சதவீதமும் கார்கள் மீது 125 சதவீதமும் இந்தியாவில் காப்பு வரி விதிக்கப்படுகிறது. இதனால் இந்தியச் சந்தையில் போட்டியிடுவது பிரிட்டனுக்கு எளிதாக இல்லை. வரியற்ற வர்த்தக உடன்பாடு ஏற்பட்டுவிட்டால் அதனால் வெகு எளிதாக இவ்விரண்டையும் விற்க முடியும். இந்தியாவில் மதுபான நுகர்வு அதிகமாகி இந்திய நகர்ப்புறங்கள் மதுலோகமாகவே மாறிக்கொண்டிருக்கின்றன. பிரிட்டனில் தயாராகும் பொருட்கள் மீதான காப்பு வரிகள் விலக்கிக்கொள்ளப்படுவதுடன் அளவுக் கட்டுப்பாடு, தரக்கட்டுப்பாடு போன்றவையும் நீக்கப்படும் வாய்ப்புகளால் அதிகப் பொருட்களை, அதிக அளவில் பிரிட்டனால் இந்தியாவுக்கு விற்க முடியும். அரசியல் ரீதியாக இரண்டு நாடுகளுக்கும் கருத்து வேறுபாடுகளோ பகையோ கிடையாது. மேலும் பிரிட்டனுடன் இந்தியா உறவு கொள்ளக் கூடாது என்று தடுப்பார் எவருமில்லை.

2019-ல் இந்தியாவிலிருந்து கிடைத்த முதலீட்டால், பிரிட்டனின் வெஸ்ட் மிட்லேண்ட் பகுதியில் மட்டும் முப்பதாயிரம் பேருக்கும் மேல் நேரடி வேலைவாய்ப்பு பெற்று நன்கு சம்பாதிக்கின்றனர். மோட்டார் வாகனங்கள் மட்டுமின்றி உதிரி பாகங்களையும் விற்பதன் மூலம் இங்கிலாந்தின் வடக்குப் பகுதி முப்பது கோடி பில்லியன் பவுன்களுக்கும் மேல் சம்பாதித்துவிட முடியும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியப் பிரதமர் மோடி

2022-ல் மட்டும் (நடப்பு ஆண்டு) 175 கிகா வாட் மின்சாரத்தை மரபு சாராத வகையில் புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து தயாரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு பிரிட்டனால் மிகப் பெரிய அளவில் உதவ முடியும். காற்றிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான டர்பன்களை பிரிட்டனால் இந்தியாவுக்கு அதிக அளவில் வழங்க முடியும். இவ்வாறு துறை வாரியாக இந்தியாவுடனான வர்த்தக உடன்பாடு எந்த அளவுக்கு வருமானத்தையும் வேலைவாய்ப்புகளையும் லாபத்தையும் தரக்கூடும் என்று பிரிட்டன் கணக்கிட்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.

இந்தியத் தரப்பில் வர்த்தகத் துறைக்கு ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமை வகிப்பார். பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நல்ல நட்புறவில் இருக்கிறார். இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக உடன்பாட்டை இறுதி செய்துவிட வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார். இந்தியாவுக்கும் நன்கு பழகிய பிரிட்டிஷ்காரர்கள் மூலமான வர்த்தக உறவு நிறைவேற்ற எளிதாகவே இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பு. விரைவில் இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று தெரிகிறது. இந்தியத் தொழிலதிபர்கள் பலர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று பிரிட்டனில்தான் குடும்பங்களுடன் வசிக்கின்றனர். அவர்களுடைய செல்வாக்கும் இருதரப்பு உறவு வலுப்பட நிச்சயம் உதவி செய்யும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE