கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்த இளைஞர் ஒருவருக்கு, ஜப்பான் அரசு அனுப்பி வைத்துள்ள உணவு பொருட்கள்தான் தற்போது ட்ரெண்டிங்காக உள்ளது.
வல்லரசு நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஜப்பானில், நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை அந்த நாட்டில் 17,78,827 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அந்த இளைஞரை ஆச்சர்யப்படுத்தும் விதமாக ஜப்பான் அரசு ஒரு மாத சாப்பாட்டுக்குத் தேவையான உணவு பொருட்களை அனுப்பிவைத்துள்ளது. டப்பா டப்பாவாக நூடுல்ஸ்கள், கிலோ கணக்கில் அரிசி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள், விதவிதமான குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்களை அரசு அனுப்பி வைத்துள்ளது. தற்போது இதுதான் ட்ரெண்டிங்.
இந்த உணவுப் பொருட்களின் படங்களை அந்த இளைஞர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர பார்த்த அனைவரும் ஆச்சர்யப்பட்டுள்ளனர். அந்த இளைஞரோ, தான் வீட்டுத் தனிமையில் இருப்பதால் தனது உடல் நலத்தை தினந்தோறும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தொலைபேசி வாயிலாக விசாரித்து வருவதாகவும், நான் தனிமையாக இருப்பதால் உணவு அனுப்பலாமா என்று கேட்டதாகவும், அதற்கு நான் சம்மதித்ததாகவும், அதன் பின்னர் உணவுப் பொருட்களை அனுப்பிவைத்ததாகவும், அதே நேரத்தில் கரோனா நோயாளிகளுக்கு இப்படி உணவு அனுப்பப்படுகிறதா என்பது தனக்கு தெரியவில்லை என்றும் நிஜமாகவே அந்த பார்சல் தன்னை ஆச்சர்யப்படுத்திவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் அரசுக்கு பாராட்டுகள் தெரிவித்து வரும் நெட்டிசன்கள், தங்கள் நாடுகளும் இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.