இந்தோனேசியாவில் இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர். 1.5 லட்சம் பேர் கரோனா தொற்றால் உயிரிழந்திருக்கின்றனர். ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் இந்த எண்ணிக்கை மிக அதிகம். அத்துடன், ஒமைக்ரான் தொற்றும் அந்நாட்டில் அதிகரித்துவருகிறது. இந்தோனேசியாவில் கடந்த மாதம் ஒமைக்ரான் தொற்று முதன்முதலாகக் கண்டறியப்பட்ட நிலையில், இன்றைய தேதிக்கு 150-க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள்.
இந்தச் சூழலில், அந்நாட்டில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள், நாளை முதல் தொடங்கவிருக்கின்றன. ஆனால், அதற்குக் கட்டணம் விதிக்கப்பட்டிருப்பதுதான் சர்ச்சையாகியிருக்கிறது.
இதுவரை பூஸ்டர் டோஸ்களுக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்படவில்லை. எனினும், அஸ்ட்ராஜெனிகா பூஸ்டருக்கு 2.75 டாலரும், ஃபைஸர் பூஸ்டருக்கு 23 டாலரும் செலுத்த வேண்டியிருக்கும் என்கிறார்கள். இன்றைய தேதியில் ஒரு அமெரிக்க டாலர், 14,304 ருபியாவுக்கு (இந்தோனேசிய கரன்ஸி) சமம். அரசு மருத்துவமனைகளிலேயே இந்த நிலைமை என்றால், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் அதிகமாகவே இருக்கும். தனியார் மருத்துவமனைகளில் 70 டாலர் முதல் 140 டாலர் வரை பூஸ்டர் டோஸுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்கிறார்கள்.
ஏற்கெனவே, தடுப்பூசி செலுத்துவதிலும் தடுமாறிக்கொண்டிருக்கும் தேசம் இந்தோனேசியா. கடந்த ஆண்டு ஜனவரி 13 முதல் அந்நாட்டில் தடுப்பூசிகள் செலுத்தப்படும் நிலையில், இன்றுவரை 11.7 கோடி பேருக்குத்தான் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இந்தோனேசியாவின் மக்கள்தொகை 27 கோடி ஆகும்.
இந்தோனேசியா போன்ற நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் மாடர்னா, ஃபைஸர் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதில் சிக்கல்களை எதிர்கொண்டன. தற்போது, பூஸ்டர் டோஸ்களிலும் அதே சிக்கல் நீடிக்கிறது. சில நாட்களுக்கு முன்னர், பூஸ்டர் டோஸ் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட இந்தோனேசிய சுகாதாரத் துறை அமைச்சர் புதி குணாடி சாதிக்கின், 23 கோடி பூஸ்டர் டோஸ்கள் தேவை என்றும், அதில் பாதிதான் தற்போது கையிருப்பில் உள்ளது என்றும் குறிப்பிட்டார். கூடுதலாக பூஸ்டர் டோஸ்களை இந்தோனேசியா கொள்முதல் செய்யுமா என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.
முதியோருக்கும், கட்டணம் செலுத்த வசதி இல்லாதவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் இலவசமாகச் செலுத்தப்படும் என்று இந்தோனேசிய சுகாதாரத் துறை கூறியிருக்கிறது. எனினும், இலவசமாக பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள என்ன தகுதி என்பது குறித்தும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.