ஒமைக்ரானை எதிர்கொள்ள பிரத்யேகத் தடுப்பூசி: மார்ச் முதல் கிடைக்கும் என ஃபைஸர் நிறுவனம் தகவல்

By காமதேனு

உலகமெங்கும் ஒமைக்ரான் பரவல் மிக வேகமாக அதிகரித்துவரும் நிலையில், அதற்கென பிரத்யேகமாக மறுவடிவமைக்கப்பட்ட தடுப்பூசி மார்ச் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஃபைஸர் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆல்பர்ட் போர்லா கூறியிருக்கிறார்.

இதுகுறித்து சிஎன்பிசி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், அவர் பல முக்கியத் தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்.

ஃபைஸர் நிறுவனமும் அதன் கூட்டு நிறுவனமான பயோஎன்டெக் எஸ்இ நிறுவனமும் இணைந்து இந்தப் பணிகளில் இறங்கியிருக்கின்றன. ஒமைக்ரானுக்கான பிரத்யேகத் தடுப்பூசி தயாரிப்புடன், முந்தைய இரு தடுப்பூசிகளின் செயல் திறனும், ஒமைக்ரானை எதிர்கொள்ளும் செயல்திறனும் உள்ளடக்கிய தடுப்பூசியை உருவாக்குவதிலும் இந்நிறுவனங்கள் களமிறங்குகின்றன.

“இது நிச்சயம் சாத்தியமாகக்கூடியது என நினைக்கிறேன். அதிகச் செயல்திறன் கொண்ட தடுப்பூசிகளைத் தயாரிப்பதில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம்” என்று அந்தப் பேட்டியில் ஆல்பர்ட் போர்லா தெரிவித்திருக்கிறார்.

மறுவடிவமைக்கப்பட்ட தடுப்பூசிக்கான அங்கீகாரம் கோரி அமெரிக்காவின் சுகாதாரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பிக்கப்படும் என்றும், அதிக அளவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறனுடன் பணிகள் தொடங்கும்; இதனால், இதற்கான மாற்றுத் திட்டங்கள் தொடங்குவதில் பிரச்சினை இருக்காது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE