2022-ம்ஆண்டில், கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான யுத்தம், பருவநிலை மாற்றம், குவாட், புதிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயலாற்றும் எனும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது அமெரிக்கா. அத்துடன் இந்திய எல்லையில் சீனா அத்துமீறிவரும் நிலையில், இந்தியாவுக்குத் துணை நிற்பதாகவும் அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்புப் பிரிவின் செயலாளர் ஜென் ஸாக்கி நேற்று (ஜன.10) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 2022-ம் ஆண்டில் இந்தியாவுடனான அமெரிக்க உறவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அப்போது, “கடந்த செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகையில் இந்தியப் பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்துப் பேசினார். அப்போது அமெரிக்க – இந்திய உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவது குறித்துப் பேசப்பட்டது. இருதரப்பு உறவு குறித்து தங்கள் ஒருங்கிணைந்த பார்வையை அவர்கள் பகிர்ந்துகொண்டனர். இரண்டு நாடுகளும் இந்த ஆண்டு நெருக்கமாக இணைந்து தொடர்ந்து பணியாற்றும்” என்று கூறினார்.
மேலும், “கோவிட் 19பெருந்தொற்று, பருவநிலை மாற்றத்துக்கு முகங்கொடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை அதிகரிப்பது, ‘குவாட்’ கூட்டணி அமைப்பின் வாயிலாக இரு நாடுகளும் இணைந்து செயலாற்றுவது, வர்த்தகம், இணையம், புதிதாக உருவாகிவரும் தொழில்நுட்பங்கள் போன்ற பல்வேறு முன்னெடுப்புகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் என நீங்கள் எதிர்பார்க்கலாம்” என்று ஸாக்கி கூறினார்.
“இந்தியாவுடன் வழக்கம்போல தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது, அதற்கு அடிகோலிடுகின்ற ஜனநாயக விழுமியங்கள் குறித்த பார்வையைப் பகிர்ந்துகொள்வது ஆகிய விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல் குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ஸாக்கி, “நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்துவருகிறோம். எல்லைத் தகராறுகள் குறித்த பேச்சுவார்த்தைக்கும், அமைதியான தீர்வு எட்டப்படுவதற்கும் நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம். உலகமெங்கும் சீனாவின் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பதில் தெளிவான கண்ணோட்டம் கொண்டிருக்கிறோம். அது சீர்குலைக்கக்கூடியது என நம்புகிறோம். அத்துடன், தனது அண்டை நாடுகளைச் சீனா அச்சுறுத்திவருவது குறித்தும் கவலை கொண்டிருக்கிறோம். இவ்விஷயத்தில் எங்களது நட்பு நாடுகளுக்குத் துணை நிற்பதைத் தொடர்வோம்” என்று குறிப்பிட்டார்.