குழப்பங்களுக்கு மத்தியில் இராக் நாடாளுமன்ற அவைத் தலைவர் தேர்வு!

By காமதேனு

இராக் நாடாளுமன்றத்தின் புதிய அவைத் தலைவராக, சன்னி பிரிவைச் சேர்ந்த முகமது அல்- ஹல்பவுசி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 329 உறுப்பினர்களைக் கொண்ட இராக் நாடாளுமன்றத்தில் அவருக்கு ஆதரவாக 200 வாக்குகள் கிடைத்தன.

எனினும், ஷியா பிரிவு அரசியல் கட்சிகள் அவரது நியமனத்தை ஏற்கவில்லை. இம்முடிவை எடுத்து உச்ச நீதிமன்றத்தை அணுகப்போவதாக அக்கட்சிகள் கூறியிருக்கின்றன.

2021 அக்டோபர் 10-ல் தேர்தல் நடந்த நிலையில், 3 மாதங்களுக்குப் பின்னர் நேற்று (ஜன.9) நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது.

யாருக்குப் பெரும்பான்மை என்பது தொடர்பாக இரண்டு ஷியா பிரிவு அரசியல் கூட்டணிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால், நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கூச்சலும் குழப்பமும் நிலவின. இந்தக் குழப்பங்களுக்கிடையே, தற்காலிக அவைத் தலைவர் மஹ்மூத் அல் மஷாதானிக்குத் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் மயக்கமடைந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், சில மணி நேரத்தில் உடல்நலம் தேறியதால் அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு அரசியல் கூட்டணியான ‘ஃபடா மற்றும் ஸ்டேட் ஆஃப் லா’ கூட்டணி, தங்களுக்குத்தான் பெரும்பான்மை இருக்கிறது எனக் கூறிவருகிறது. முன்னாள் பிரதமர் நூரி அல்-மாலிகி தலைமையிலான அந்தக் கூட்டணியின் சார்பில் இதுகுறித்து அவைத் தலைவரிடம் கடிதமும் அளிக்கப்பட்டிருக்கிறது.

எனினும், அதை ஏற்க மறுத்திருக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த இன்னொரு கட்சியான முக்தடா அல்- சாதரின் ‘சாதரிஸ்ட் மூவ்மென்ட்’ கட்சி தங்களுக்கே பெரும்பான்மை இருப்பதாகக் கூறியிருக்கிறது. 329 இடங்களைக் கொண்ட இராக் நாடாளுமன்றத்தில், கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் 73 இடங்களில் அவரது கட்சி வெற்றி பெற்றது.

இதில் பலர் அணி மாறும் வாய்ப்பு இருப்பதால், யாருக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்பதில் இன்னமும் குழப்பம் நிலவுகிறது. 30 நாட்களுக்கு, இந்தக் கூட்டத்தொடர் நடக்கவிருக்கும் நிலையில், இந்தக் கூட்டத் தொடரிலேயே புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார். இதன் பின்னர், அதிக இடங்களில் வென்ற கட்சியைப் புதிய அரசு அமைக்க அதிபர் அழைப்பு விடுப்பார்.

செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராகக் கருதப்படும் முக்தடா அல்-சாதரின் தலைமையில்தான் புதிய ஆட்சி அமையும் எனக் கருதப்படுகிறது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட அல் சாதர், 2003-ல் இராக்கில் நுழைந்த அமெரிக்கப் படைகளுக்கு எதிராப் போரிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE