விஞ்ஞானிகள் புதிதாகக் கண்டுபிடித்துள்ள மர இனத்துக்கு, பிரபல ஹாலிவுட் நாயகனான லியோனார்டோ டிகாப்ரியோ பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் கியூ பகுதியில் உள்ள ராயல் தாவரவியல் பூங்கா விஞ்ஞானிகள், புதிய வகை மர இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த மரம் 4 மீட்டர் நீளம் வளரும் தன்மை கொண்டது. 15 செ.மீ நீள இலைகளையும் பளபளப்பான மஞ்சள் பூக்களையும் இந்த மரம் கொண்டிருக்கும்.
கேமரூன் காட்டில் மட்டுமே வளரும் இந்த வகை மரங்களுக்கு ‘உவேரியோப்ஸிஸ் டிகாப்ரியோ’ (Uvariopsis dicaprio) என்று தாவரவியல் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் உள்ள ‘டிகாப்ரியோ’, பிரபல ஹாலிவுட் நடிகரும் டைட்டானிக் படத்தின் நாயகனுமான லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் எனக் கொண்டாடப்படுகிறது.
அமேசான் மழைக்காடுகளைப் பாதுகாக்க, டிகாப்ரியோ, 50 லட்சம் டாலரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு நன்கொடையாக வழங்கினார். அதோடு, ஹாலிவுட் நடிகர்களான லாரன் பவல் ஜாப்ஸ், பிரையன் ஷெத் ஆகியோரோடு இணைந்து 'எர்த் அலையன்ஸ்' என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பையும் அவர் தொடங்கி இருக்கிறார்.
“மழைக்காடுகளில் மரங்களை வெட்டுவதற்கு அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். எபோ காடுகளில் (Ebo Forest) மரம் வெட்டுவதை நிறுத்துவதில் அவர் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. அவர் செய்த உதவிக்காக, அவரை கவுரவிக்கும் விதமாக புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மரத்தின் வகைக்கு டிகாப்ரியோ பெயர் சூட்டப்பட்டுள்ளது” என கியூ ராயல் தாவரவியல் பூங்கா விஞ்ஞானி டாக்டர் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.