சார்க் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் விடுத்த அழைப்பு: இந்தியா நிராகரித்தது ஏன்?

By காமதேனு

சார்க் உச்சி மாநாட்டை நடத்தத் தயாராக இருப்பதாகவும், நேரில் பங்கேற்க விருப்பம் இல்லை என்றால், காணொலி வாயிலாகவேனும் இந்தியா பங்கேற்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி திங்கள்கிழமை (ஜன.3) அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “சார்க் உச்சி மாநாடு குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறிய கருத்து தொடர்பான செய்திகளைப் பார்த்தோம். 2014-க்குப் பிறகு ஏன் சார்க் மாநாடு நடத்தப்படவில்லை எனும் பின்னணி உங்களுக்குத் தெரியும். அதன் பிறகான சூழலில் காத்திரமான எந்த மாற்றமும் இல்லை. எனவே, மாநாடு நடத்த அனுமதிக்கக்கூடிய அளவுக்கு, ஒருமித்த முடிவு எதுவும் எட்டப்படவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான கூட்டமைப்பான ‘சார்க்’ அமைப்பில், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவுகள், நேபாளம், இலங்கை ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் இந்தியாதான் பெரிய நாடு என்பது கவனிக்கத்தக்கது. வங்கதேசத் தலைநகர் டாக்காவில் 2005-ல் நடைபெற்ற 13-வது சார்க் மாநாட்டில், தெற்காசிய நாடுகளைத் தவிர வேறு நாடுகளைப் பார்வையாளர்களாக ஏற்க முடிவுசெய்யப்பட்டது. அதன்படி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 9 நாடுகள் சார்க் அமைப்பின் பார்வையாளர்களாக உள்ளன.

2014-ல் நேபாளத் தலைநகர் காண்ட்மாண்டுவில் நடந்த மாநாட்டுக்குப் பின்னர், சார்க் மாநாடு நடத்தப்படவில்லை என வெளியுறவுத் துறைச் செயலாளர் கூறியிருப்பதன் பின்னணியில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கசப்புதான் காரணமாக இருக்கிறது.

பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், சார்க் அமைப்பில் இடம் பெற்றுள்ள அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பி அவர்கள் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார் மோடி. அப்போது பிராந்திய அளவில் நல்லுறவு நிலவும் எனும் நம்பிக்கை ஏற்பட்டது. எனினும், எல்லை தாண்டிய பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை போன்ற காரணங்களால் பாகிஸ்தானுடனான கசப்பு அதிகரித்தது. இவற்றின் காரணமாக, 2014 நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் காட்மாண்டுவில் நடந்த சார்க் மாநாட்டில் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீபின் முகத்தை ஏறெடுத்துப் பார்ப்பதைக்கூட மோடி தவிர்த்தார். 2016-ல் உரி ராணுவ தளம் மீது நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், அந்த ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்ட சார்க் மாநாட்டில் பங்கேற்கும் முடிவை இந்தியா திரும்பப்பெற்றுக்கொண்டது. இதனால், அந்த மாநாடு ரத்துசெய்யப்பட்டது.

இதுபோன்ற சூழல்களால், சார்க் அமைப்பு தோல்வியடைந்துவிட்டது என்றே கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE