உலகின் புதிய பெரியண்ணனாக உருவெடுக்கும் சீனா!

By எஸ்.எஸ்.லெனின்

கடந்த பத்தாண்டாகவே புத்தாண்டு பிறக்கும்போதெல்லாம் உலக நாடுகள் மத்தியில் அலசப்படும் சர்வதேச விவகாரங்களில் ஒன்றாக, உலகின் பெரியண்ணன் யார் என்ற கேள்வியும் இருக்கும். அமெரிக்காவின் இடத்தை சீனா பறித்துவிட்டதா என்றும் இதை பொருள்கொள்ளலாம். அந்த அளவுக்கு புத்தாயிரத்தில் தொடங்கி அமெரிக்கா - சீனா இடையே வலுத்து வந்த பெரியண்ணன் போட்டி அதன் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.

சந்தேகமே இன்றி அமெரிக்காவைப் பல நிலைகளில் சீனா விஞ்சி வருகிறது. அந்த வகையில் அடுத்த தசாப்தத்தில் உலக வல்லரசாக சீனாவின் கை ஓங்கி விடவும் வாய்ப்புண்டு. தானாக பெரியண்ணன் அரியணையும் சீனாவுக்கு சேர்ந்துவிடும். ஆனால், சீனாவின் இலக்கு அதில்லை என்பதில்தான், அமெரிக்காவே ஆச்சரியப்படும் வகையில் சீனா வித்தியாசப்படுகிறது. ராணுவம், பொருளாதாரம், மனித வளம் எனப் பல வகையிலும் வல்லமை பெற்றுள்ள சீனா, உலக வல்லரசு பட்டத்தைப் பொருட்படுத்துவதாக இல்லை. சீனாவின் நோக்கங்கள் அதையும் தாண்டியது.

அமெரிக்காவுடன் மோதல்

சில தினங்களுக்கு முன்னர் ஐநாவில், அமெரிக்காவுக்கு எதிராக சீனா பஞ்சாயத்தைக் கூட்டியது. சீனா கட்டமைத்து வரும் விண்வெளி மையத்தை அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் செயற்கைகோள்கள் மோதி நாசம் விளைவிக்க முயற்சிப்பதாக புகார் செய்தது. பதிலுக்கு, விண்வெளி போருக்கு வித்திடும் வகையில் அங்கே அபாயகரமான சோதனைகளில் சீனா ஈடுபடுவதாக அமெரிக்காவும் குற்றம்சாட்டியது.

முன்னதாக, தைவான் நீரிணையில் ஊடுருவும் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்களுக்கு உயிர் பயம் காட்டியது சீனா. மேலும், தைவானை கேடயமாகப் பயன்படுத்தி சீனாவுடன் மோதல் போக்கை அமெரிக்கா தொடர்ந்து வந்ததில், ’இதோ இன்னும் நான்கே ஆண்டுகளில் தைவானை சீனாவின் பகுதியாக்குகிறோம்; முடிந்தால் தடுத்துப் பார்’ என்று பகிரங்க சவால் விட்டிருக்கிறது சீனா. ஆழ்கடலில் தொடங்கி விண்வெளி வரை அதிகரிக்கும் அமெரிக்க - சீன மோதலில் யார் ஜெயிப்பார்கள் என்ற கேள்விக்கு சந்தேகமின்றி சீனாவையே பரவலாகச் சுட்டுகிறார்கள்.

சீனா கட்டமைக்கும் விண்வெளி நிலையம்

நவீனத்தை நோக்கி...

ராணுவ புஜபலம் மட்டுமல்ல, பொருளாதாரம், மனித வளம், செல்வ வளம் என இதரக் காரணிகளும் உலகின் பெரியண்ணன் யார் என்பதைத் தீர்மானிக்கிறது. எண்பதுகளுக்கு முன்னர் வரை சீனா, அமெரிக்காவுடனான போட்டியில் இல்லை. அமெரிக்கா - சோவியத் ரஷ்யா பனிப்போர் உச்சத்திலிருந்த போது, ஆளரவமின்றி சீனா இருந்தது. சோவியத் உடைந்ததும், போட்டியில்லாத பேட்டையின் தாதாவாக அமெரிக்கா தலைகால் புரியாமல் ஆடியபோதும், சீனா தனது பொருளாதார வளர்ச்சியிலேயே கண்ணாக இருந்தது. புத்தாயிரத்தில் அதற்கான பாதையில் பீடு நடையிடத் தொடங்கிய பிறகே, ராணுவ பலம் பக்கம் திரும்பியது. உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக படைபலத்துக்காக அதிகம் செலவழிக்கும் நாடாக சீனா மாறியது (மூன்றாவது இடத்தில் இந்தியா). அமெரிக்காவின் அணு ஆயுதங்கள், விமானந்தாங்கி கப்பல்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை மற்றும் வீரியத்துடன் ஒப்பிடுகையில், சீன ராணுவம் இன்னமும் நவீனம் பெறவில்லை. அவற்றை நோக்கியே அமைதியாக முன்னேறி வருகிறது சீனா.

கேள்விக்குள்ளாகும் வல்லரசு

சந்தேகமின்றி தற்போதைய உலகின் நெ.1 தேசம் அமெரிக்காதான். ஆனால், இந்த இடத்தைக் காப்பாற்றிக்கொள்ள அமெரிக்கா தடுமாறித் தவித்து வருகிறது என்பதும் நிதர்சனம். நவீன ராணுவபலம் என்ற ஒற்றைக் காரணி மட்டுமே வல்லரசுக்கான அடையாளம் அல்ல. இதர காரணிகளும் உண்டு. நடப்பு உதாரணமாக, பெருந்தொற்று அலைகளுக்கு உலக நாடுகள் எவ்வாறு விழுந்து மீள்கின்றன என்பதையும் சொல்லலாம்.

இங்கிலாந்தின் தினசரி தொற்று ஒரு லட்சத்தையும், அதுவே அமெரிக்காவில் 4 லட்சத்தையும் தற்போது தாண்டியுள்ளது. கரோனா உருவான சீனா, அவ்வப்போது சறுக்கினாலும் அதே வேகத்தில் மீண்டு விடுகிறது. நவீன மருத்துவத்தில் அபரிமிதமான வளர்ச்சி பெற்ற அமெரிக்காவும், இங்கிலாந்தும் கரோனா அலைகளுக்கு அலைக்கழிந்து வருகின்றன. இங்கிலாந்து, அமெரிக்காவின் வல்லரசு பிம்பம் இங்கே அடிபட்டுப் போகின்றது.

சீனா, அமெரிக்கா அல்ல!

அமெரிக்காவைப் பொறுத்தவரை, தன்னை உலகப் போலீஸாக வரிந்துகொண்டு, உலகின் எந்த மூலையில் பிரச்சினை என்றாலும் குரல் கொடுக்கும். தன்னுடைய தனிப்பட்ட ஆதாய நியாயங்களைப் பொறுத்து எந்த தேசத்தையும் ஆதரிக்கவோ, எதிர்த்துத் தாக்கவோ செய்யும். உலக நாடுகளின் சகல பிரச்சினைகளிலும் கருத்து சொல்பவராக, மிரட்டல் விடுப்பவராக, மத்தியஸ்தம் செய்பவராக... ஒட்டுமொத்தத்தில் ஓர் உலக ரட்சகராகவே அமெரிக்க அதிபர் தன்னை பாவித்து வருவார்.

அமெரிக்காவுக்கு அவர் அதிபர் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். ஆனால், அண்டை தேசங்களின் எல்லைகளில் ஒரண்டை இழுப்பதற்கு அப்பால், இவற்றில் எல்லாம் சீனாவுக்கு பெரிதாய் ஆர்வமில்லை என்பதிலும் சீனா தனித்து நிற்கிறது. பொருளாதாரத்தில் ஜெயிக்கும் வரை அமைதி காத்ததுபோலவே, தற்போது ராணுவத்திலும் ரகசிய நோக்கங்களும் அமைதி காக்கின்றது. அப்படியென்ன நோக்கங்கள், இலக்குகள் என்பதில் அதன் இரும்புத்திரையையும் மீறி சொற்பமாகவே மேற்கு நாடுகளால் அறிய முடிந்திருக்கிறது.

2 இலக்குகள்

சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் முன்பாக 2035 மற்றும் 2050 என ஆண்டுகளின் அடிப்படையில் 2 இலக்குகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா அளவுக்கு நவீனம் பெறவில்லை என்ற ஏக்கத்திலிருக்கும் சீன ராணுவம், அந்த நவீனத்தை எட்டுவதே 2035 இலக்கு. அடுத்தபடியாக, உலகின் மிகப்பெரும், தன்னிகரற்ற ராணுவ சக்தியாக உருவெடுப்பதை 2050-ம் ஆண்டின் இலக்காக வரித்திருக்கிறது. ஏனெனில், வல்லரசு தேசமாக போர்க்களங்களில் அமெரிக்காவின் அருமை பெருமைகள் உலகறிந்தது. ஆனால், வியட்நாம் போருக்கு பின்னர், கடந்த 40 ஆண்டுகளில் சீன ராணுவத்தின் வலிமை இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

சீனாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணைகள்

3 அவதாரங்கள்

இந்த நோக்கங்களை எட்டுவதற்காக பல அவதாரங்களை சீனா எடுத்து வருகிறது. அவற்றில், அணு ஆயுதங்கள், அவற்றை சிரமேற்கும் ஏவுகணை தொழில்நுட்பம், இரண்டையும் ஒருங்கிணைக்கும் செயற்கை நுண்ணறிவு ஆகிய மூன்றும் முக்கியமானவை. இதற்காக 2030-க்குள் சீனா தனது அணுசக்தி கையிருப்பை 4 மடங்காக்குவதில் இறங்கியுள்ளதாக, நவம்பரில் வெளியான அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிக்கை சொல்கிறது.

ஒலியைவிட 6 மடங்கு வேகத்தில், ரேடார்களின் கண்களை ஏமாற்றிப் பாயும் ஹைபர்சானிக் ஏவுகணைகளை அண்மைக் காலமாக சீனா இதற்காகவே அதிகம் பரிசோதித்து வருகிறது. இரண்டையும் ஒருங்கிணைக்கும் செயற்கை நுண்ணறிவை தனிப்பட்ட சைபர் தாக்குதலுக்கும், ஆளில்லா போர்களை நடத்துவதற்கும் சீனா பரிசோதித்து வருகிறது. மனிதர்கள் பங்கு பெறாத போர்களே எதிர்காலத்தில் மூளும் என்பதால், தொலைநோக்குப் பார்வையில் அதற்காகவும் சீனா தயாராகி வருகிறது.

இவற்றில் தன்னிறைவு அடைந்த பிறகே பெரியண்ணன் அரியணையில் சீனா அமரவும், அதன் சுயரூபங்கள் வெளிப்படவும் செய்யும். அதற்கு முன்னரான ஒரு தலைமுறை அவகாசத்தில் அதிசயங்கள் ஏதேனும் நடந்தால் மட்டுமே சீனாவின் கை ஓங்குவதைத் தடுக்கவும் முடியும்.

சாத்தியம்தானா அது?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE