செர்பியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கிறார். அந்நாட்டுக்குள் நுழைய, தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வேண்டும் எனும் நிபந்தனையிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. விலக்கு அனுமதியுடன் அனுமதியுடன் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்ள மெல்போர்ன் வருவதாக, நேற்று (ஜன.4), இன்ஸ்டாகிராமில் ஜோகோவிச் பதிவிட்டிருந்தார். இது ஆஸ்திரேலியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.
தடுப்பூசிக்கு எதிரான மனநிலை கொண்டவர் ஜோகோவிச். “தனிப்பட்ட முறையில் தடுப்பூசியை எதிர்க்கிறேன். பயணம் மேற்கொள்வதற்கு ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கப்படுவதை நான் விரும்பவில்லை. ஆனால், அது கட்டாயம் என்றானால் என்ன நடக்கும்? அப்போது நான் ஒரு முடிவை எடுத்தாக வேண்டியிருக்கும்” என்று சமீபத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதியிருந்தார்.
இந்நிலையில், மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்ள வரும் ஜோகோவிச்சுக்கு, மருத்துவரீதியிலான விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. விக்டோரியா மாநிலத்தில் உள்ள மெல்போர்ன் நகரில் நடக்கும் இந்தப் போட்டிகளில் பங்கேற்பவர்கள் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் அதற்காக விண்ணப்பித்திருக்க வேண்டும்; அத்துடன் மருத்துவ ரீதியிலான விலக்கும் பெற்றிருக்க வேண்டும். விக்டோரியா மாநிலத்தில் நுழைபவர்கள் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனும் நிபந்தனையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ ரீதியிலான விலக்கு கோரும் டென்னிஸ் வீரர்கள், இரண்டு கட்ட வழிமுறைகளைக் கடந்தாக வேண்டும். இதற்கான விண்ணப்பம் ‘டென்னிஸ் ஆஸ்திரேலியா’ அமைப்பின் மருத்துவ நிபுணர்களால் பரிசீலிக்கப்படும். அதன் பின்னர் விக்டோரியா மாநில அரசு அந்த விண்ணப்பத்தை ஆய்வுசெய்து முடிவெடுக்கும்.
இதற்காக, ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (Atagi) விதித்திருக்கும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தாக வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
அப்படித்தான் ஜோகோவிச்சுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் டென்னிஸ் ஆஸ்திரேலியா அமைப்பினர்.
எனினும், இம்முடிவு பாரபட்சமானது என்பதுதான் ஆஸ்திரேலியர்களின் ஆதங்கம்.
ஆஸ்திரேலிய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்டீபன் பார்னிஸ், “அவர் எவ்வளவு சிறந்த டென்னிஸ் வீரர் என்பதில் எனக்கு அக்கறையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்தால், ஆஸ்திரேலியாவுக்கு வர அவரை அனுமதிக்கக் கூடாது. அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது உண்மை என்றால், அது கோவிட் 19 ஆபத்துக்கு எதிராகப் போராடிவரும் மில்லியன்கணக்கானோருக்குத் திகைப்பூட்டும் செய்தி” என்று கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
ஜேம்ஸ் டக்வொர்த், அலெக்ஸ் டி மினார் போன்ற ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர்கள் இதை விமர்சித்திருக்கிறார்கள். “விலக்குக்கான அளவுகோல்கள் என்னவென்று எனக்குத் தெரியாது. அதை ஒரு சுயாதீனக் குழுதான் நிர்ணயிக்கிறது. எப்படி இருந்தாலும் அந்த அளவுகோல்கள் அவருக்குப் பொருந்த வேண்டும்” என்று ஜேம்ஸ் டக்வொர்த் கூறியிருக்கிறார்.
அரசியல் தலைவர்களும் இந்த முடிவை விமர்சித்திருக்கிறார்கள். “என்ன ஒரு அவமானம்! 6 முறை பொதுமுடக்கத்தை எதிர்கொண்டோம். பள்ளிகள், சிறிய அளவிலான வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. இறுதிச்சடங்குகள், திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் பல மாதங்களுக்குப் பிரிவை அனுபவிக்க வேண்டியிருந்தது. ஆனால், ஒரு டென்னிஸ் நட்சத்திரத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது” என்று விக்டோரியா மாநிலத்தின் லிபரல் கட்சியின் துணைத் தலைவர் டேவிட் சவுத்விக் ட்வீட் செய்திருக்கிறார்.
மருத்துவரீதியிலான விலக்கு கோரிய அனைவருக்கும் விலக்கு அளிக்கப்பட்டுவிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியுடன் தொடர்புடைய 26 பேர் விலக்கு கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் வெகு சிலருக்கே விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க விதிக்கப்பட்ட நிபந்தனைகள் சமூகவலைதளங்களில் கடும் விமர்சனத்தை எழுப்பியிருக்கின்றன. ஸ்புட்னிக் போன்ற சில தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டவர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை நடாலியா விக்லையன்ட்சேவா, ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் அந்தத் தடுப்பூசிக்கான அங்கீகாரம் இல்லை என்பதால் போட்டியில் பங்கேற்கவில்லை என அவர் அறிவித்திருந்தார்.
இவற்றையெல்லாம் கவனித்த ஆஸ்திரேலியர்கள், ஜோகோவிச்சுக்குத் தனிச் சலுகை காட்டப்படுவதாக அதிருப்தியடைந்திருக்கிறார்கள். சமூகவலைதளங்களில் ஜோகோவிச்சுக்கு எதிரான பதிவுகள் அதிகம் பகிரப்படுவதன் பின்னணி இதுதான்.