குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 40 இந்தியர்கள் உட்பட 49 பேர் உயிரிழப்பு

By KU BUREAU

குவைத் சிட்டி: குவைத் நாட்டின் தென் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 49 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

குவைத் நாட்டின் தெற்கு அகமதிமாகாணத்தில் மங்கஃப் நகரம் உள்ளது. இங்கு 6 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 150-க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் தங்கியிருந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே நிறுவனத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் இந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் உள்ளஒரு சமையல் அறையில் தீப்பற்றியது. இத்தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியதில் உள்ளே பலர் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறித்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று,நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 49 பேர் உயிரிழந்தனர்

பிரதமர் மோடி இரங்கல்: இந்த தீ விபத்து குறித்து பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “குவைத் நகரில் நிகழ்ந்த தீ விபத்து மிகுந்த துயரை தருகிறது. இதில் உயிரிழந்தவர்களின் குடும் பத்தினருக்கு எனதுஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “குவைத் தீ விபத்துபற்றிய செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். எங்கள் தூதர் அங்கு விரைந்துள்ளார். மேலும் தகவலுக்காக காத்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் தூதரகம் முழு அளவில் உதவிகளை செய்யும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் குவைத்துக்கான இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா நிலைமையை மதிப்பிடுவதற்காக தீ விபத்து ஏற்பட்ட மங்கஃப் பகுதிக்கு விரைந்தார். பிறகு 30-க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள அல்-அதான் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பல நோயாளிகளை சந்தித்து, தூதரகம் சார்பில் முழு அளவில் உதவிகள் செய்யப்படும் என அவர்களுக்கு உறுதி அளித்தார்.

இதையடுத்து தீ விபத்தில் தொடர்புடைய இந்தியர்களின் குடும்பத்தினருக்காக 965-65505246 என்ற ஹெல்ப்லைன் எண்ணை குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளது.

இந்த துயரச் சம்பவம் தொடர்பாக பிரதமர் இல்லத்தில் நேற்று இரவு உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடியின் உத்தரவின் பேர் வெளியுறவு இணை அமைச்சர் கே.வி.சிங் குவைத் விரைகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE