“இதழியல் என்பது தேசத்துரோகம் அல்ல!”

By காமதேனு

ஹாங்காங்கில் ‘ஸ்டாண்ட் நியூஸ்’ செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த 7 பேர், தேசத்துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் கண்டனங்களை எழுப்பியிருக்கிறது. இவர்களில் சிலர் இந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள்.

சுயாதீனச் செய்தி நிறுவனமான ‘ஸ்டாண்ட் நியூஸ்’, தேச விரோதமான தகவல்களைப் பதிப்பிக்க சதி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

நேற்று (டிச.28) 200-க்கும் மேற்பட்ட போலீஸார் அதன் அலுவலகத்துக்குச் சென்று ஊடகவியலாளர்களைக் கைதுசெய்தனர். பிரபல பாப் பாடகி டெனிஸ் ஹோ, பாரிஸ்டர் பட்டம் பெற்றவரும் அரசியல் தலைவருமான மார்கரெட் ஆங் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நடவடிக்கைக்கு, ஐநா மனித உரிமைகள் கவுன்சில், ஐரோப்பிய ஒன்றியம், கனடா, தைவான் எனப் பல தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.

டெனிஸ் ஹோ

இந்நிலையில், இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், “ஹாங்காங்கின் சுதந்திரமான மற்றும் சுயாதீனமான ஊடகங்கள் மீது குறிவைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சீன அரசையும் ஹாங்காங் நிர்வாகத்தையும் கேட்டுக்கொள்கிறோம். மேலும், அநியாயமான முறையில் கைதுசெய்யப்பட்டு, குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் பத்திரிகையாளர்களும், ஊடக நிர்வாகிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

“உண்மையைக் கண்டு அஞ்சாத அளவுக்குத் தன் மீது நம்பிக்கை கொண்ட ஓர் அரசு, பத்திரிகைச் சுதந்திரத்தை அரவணைத்துக்கொள்ளும்” என்றும் சுட்டிக்காட்டியிருக்கும் பிளிங்கன், “இதழியல் என்பது தேசத்துரோகம் அல்ல. சுயாதீன ஊடகத்தை மவுனமாக்குவதன் மூலம், சீன அரசும், ஹாங்காங் நிர்வாகமும் ஹாங்காங்கின் நம்பகத்தன்மைக்குப் பின்னடைவை ஏற்படுத்துகின்றன” என்றும் விமர்சித்திருக்கிறார்.

டென்ஸி ஹோ ‘ஸ்டாண்ட் நியூஸ்’ செய்தி நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர். நவம்பர் மாதம் அவர் பதவிவிலகிவிட்டார். எனினும், அவரையும் இந்த வழக்கில் கைதுசெய்திருக்கிறது ஹாங்காங் நிர்வாகம்.

’ஆப்பிள் டெய்லி’ நாளிதழ் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு...

ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பிவரும் ஊடகங்கள் தொடர்ந்து அடக்குமுறைக்குள்ளாகிவருகின்றன. கடந்த ஜூன் மாதம், ‘ஆப்பிள் டெய்லி’ நாளிதழ் ஹாங்காங் நிர்வாகத்தின் அழுத்தத்தின் காரணமாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE