நியூயார்க்: மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

By காமதேனு

அமெரிக்காவில் ஒமைக்ரான் அதிவேகமாகப் பரவிவரும் நிலையில், கரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக நியூயார்க் மாநில சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

நியூயார்க் நகரத்தில் டிசம்பர் 5 முதல், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கோவிட்-19 தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவு 4 மடங்காக அதிகரித்திருக்கிறது என்று சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

அதில், ஏறத்தாழ பாதி பேர் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள். அந்த வயதினருக்குத் தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை என்பது கவனிக்கத்தக்க விஷயம்.

அமெரிக்காவில், கடந்த ஒரு வாரமாக, தினமும் சராசரியாக 1.90 லட்சம் பேர் கரோனா தொற்றுக்குள்ளாகிவருகிறார்கள் என ஜான் ஜாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

தற்போது உலகம் முழுவதும் ஒமைக்ரான் பரவிவரும் நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை முன்னிட்டு பலரும் சொந்த ஊருக்குப் பயணம் மேற்கொள்வது அதிகரித்திருக்கிறது. இதனால் தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதற்கிடையே, அமெரிக்காவில் கரோனா தொற்றுப் பரிசோதனைகளில் தேக்க நிலை இருப்பதை, அதிபரின் தலைமை சுகாதார ஆலோசகர் ஆன்டனி பவுசி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

டிசம்பர் 21-ல், கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகப் பல்வேறு திட்டங்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். அதில், அரை பில்லியன் கரோனா பரிசோதனைகளில் வீடுகளிலேயே இலவசமாக மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

ஆனால், தடுப்பூசிகளில் செலுத்தும் கவனத்தைக் கரோனா பரிசோதனையில் அமெரிக்க அரசு காட்டவில்லை என்றே தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது.

ஒமைக்ரான் அசாதாரணமான வகையில் தொற்றும் தன்மை கொண்டது என எச்சரித்திருக்கிறார் ஆன்டனி பவுசி. ஒமைக்ரான் பரவல் காரணமாக, மருத்துவமனைகள் நிரம்பிவழிவதுடன், பரிசோதனை மையங்களிலும் அதிகமான கூட்டம் காணப்படுகிறது. அத்துடன், நூற்றுக்கணக்கான விமானங்களும் ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன.

“தென்னாப்பிரிக்காவிலும் பிரிட்டனிலும் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளானவர்களில் பலரது உடல்நிலை, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு மோசமாகவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களும் விரைவில் வீடு திரும்பிவிடுகின்றனர். ஆக்சிஜன் தேவையும் குறைவுதான்” எனச் சுட்டிக்காட்டியிருக்கும் ஆன்டனி பவுசி, ஒமைக்ரானின் தீவிரத்தன்மை குறைவு என்றாலும், அது அதிவேகத்தில் பரவுவதால் நிலைமை மாறலாம் எனவும் எச்சரித்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE