அகற்றப்பட்ட அவமானத் தூண்!

By சந்தனார்

தியானென்மென் சதுக்கப் போராட்டங்களைச் சீன அரசு எத்தனைக் கொடூரமாக நசுக்கியது என்பதை நினைவுபடுத்தும் வகையில், ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த ‘அவமானத் தூண்’ அகற்றப்பட்டிருக்கிறது. ஹாங்காங்கில் உள்ள உரிமைப் போராளிகளுக்கான அடையாளமாகக் கருதப்படும் அந்தச் சிலை அகற்றப்பட்டது சர்வதேச அளவில் அதிர்வுகளை எழுப்பியிருக்கிறது.

1989-ல் நடந்த சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியானென்மென் சதுக்கத்தில் நடந்த போராட்டங்கள் உலக வரலாற்றின் மிக முக்கியமான தருணங்கள். சீன கம்யூனிஸ்ட் தலைவர்களின் ஊழல்கள், அரசின் அடக்குமுறை, அதிகரித்த பணவீக்கம் என்பன உள்ளிட்ட பிரச்சினைகளால் குமுறிக்கொண்டிருந்த மக்கள் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை முன்னெடுத்தனர். அவர்களுக்குச் சீன கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஹு யாவோபாங் ஆதரவு தெரிவித்தார். அவர் மீதும் அடக்குமுறை பாய்ந்தது. கட்சிப் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். மன உளைச்சலில் இருந்த அவர், 1989 ஏப்ரல் 15-ல் மரணமடைந்தார். இதையடுத்து போராட்டம் உக்கிரமடைந்தது. ஏப்ரல் 21-ல் தியானென்மென் சதுக்கத்தில் குவிந்த மாணவர்கள் நடத்திய போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்தது. மாணவர்களுக்குப் பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு குவிந்தது. தொடர்ந்து பல நாட்கள் நடந்த போராட்டத்தைச் சீன அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. ஜூன் 5-ல், ஓர் இளைஞர் ராணுவ டாங்கி முன்னர் துணிச்சலாக நின்ற காட்சி உலக சரித்திரத்தின் முக்கியத் தருணமாகப் பதிவானது.

அமைதி வழியில் போராடிய மக்கள் மீது ராணுவம் பிரயோகித்த வன்முறையில், ஏராளமானோர் உயிரிழந்தனர் என வரலாற்றாசிரியர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். ஆனால், அரசுத் தரப்பில் அதிகாரபூர்வமாக எந்த எண்ணிக்கையும் பதிவுசெய்யப்படவில்லை.

அந்தச் சம்பவத்தை நினைவுகூரும் விதமாக, 1997-ல் ஹாங்காங் பல்கலைக்கழக வளாகத்தில் ‘அவமானத் தூண்’ சிலை நிறுவப்பட்டது. அந்த ஆண்டில்தான் பிரிட்டன் தன் வசம் இருந்த ஹாங்காங்கைச் சீனாவிடம் ஒப்படைத்தது. தியானென்மென் சதுக்கம் அருகே கொல்லப்பட்ட மக்களின் நினைவாக, 8 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்ட அந்தச் சிலையில் 50 மனித உருவங்கள் இடம்பெற்றன. வலியும் உயிர் வாதையும் அந்த உருவங்களில் தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டன.

ஹாங்காங் தன்னாட்சிப் பிரதேசமாக இருந்துவருகிறது. அதுவும் பெயரளவுக்குத்தான். தேசபக்தர்கள்தான் இனி ஹாங்காங்கை ஆள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவந்த சீன அரசு, அதற்கான சட்டத்தை இயற்றி தேர்தலையும் டிச.19-ல் நடத்திவிட்டது. ஹாங்காங்கின் மக்கள் பிரதிநிதிகள் தேர்வுசெய்யப்படும் விதத்தில் மிகப் பெரும் மாற்றம் கொண்டுவரப்பட்டுவிட்டது இதற்கு முன்பு, 70 உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஹாங்காங் சட்டப்பேரவையில் பாதிப் பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுவந்தனர். தேர்தல் சீர்திருத்தத்தின்படி, பேரவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை, 70-லிருந்து 90 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. எனினும், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 35-லிருந்து 20 ஆகக் குறைக்கப்பட்டுவிட்டது. வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 30 பேர் இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். 40 உறுப்பினர்களை தேர்தல் கமிட்டி நியமிக்கும். அவர்கள் அனைவரும் சீன அரசின் கைப்பாவைகளாகவே இருப்பார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

தேர்தல் கமிட்டியில் இனி மாவட்ட கவுன்சிலர்களுக்கு இடமில்லை. மாவட்ட கவுன்சில்களுக்கு 2019-ல் நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி (டிபி) அதிக இடங்களில் வென்றதை சீன அரசு ரசிக்கவில்லை என்பதே இதன் பின்னணியாகக் கருதப்படுகிறது. மொத்தத்தில் இந்தச் சீர்திருத்தத்தின்படி ஹாங்காங் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை கால் பங்குக்கும் குறைவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இது ஹாங்காங்கின் ஜனநாயகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதற்கான சமிக்ஞை என்றே பார்க்கப்படுகிறது.

இப்படி அடுத்தடுத்து ஹாங்காங் ஜனநாயகவாதிகள், உரிமைப் போராளிகளுக்குச் சீன அரசு நெருக்கடி தந்துவருகிறது. பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துவிட்டனர். இந்நிலையில், இந்த அடக்குமுறையின் உச்சமாகவே அவமானத் தூண் அகற்றப்பட்ட நிகழ்வு பார்க்கப்படுகிறது.

சீனாவில் சாத்தியமே இல்லை என்பதால்தான் ஹாங்காங்கில், அந்தச் சிலையை நிறுவினார்கள். இதை வடிவமைத்தவர் டென்மார் நாட்டைச் சேர்ந்த சிற்பி ஜென்ஸ் கால்ஷியாட். தான் உருவாக்கிய சிலை அகற்றப்பட்டது குறித்து அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார் கால்ஷியாட். “நானே அந்தச் சிலையை நேரில் சென்று பெற்றுக்கொள்வதாகப் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரியிருந்தேன். ஆனால், எனக்குப் பதில் ஏதும் வரவில்லை. அவர்கள் என் படைப்பைச் சிதைத்தால், நான் அதற்கு இழப்பீடு கோருவேன். சிலையின் பாகங்களை டென்மார்க்குக்கு அனுப்புமாறும் வலியுறுத்துவேன்” என்று அவர் கூறியிருக்கிறார். எனினும், அந்தச் சிலையை என்ன செய்வது எனச் சீன அரசு இன்னமும் முடிவுசெய்யவில்லை.

கடந்த அக்டோபர் மாதம் இதற்கான உத்தரவைப் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டபோது, மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. எனினும், விமர்சனங்களைக் காதில் போட்டுக்கொள்ளாத பல்கலைக்கழக நிர்வாகம் சொன்னதைச் செய்துகாட்டியிருக்கிறது.

முதலில் இந்தச் சிலையைச் சுற்றி உயரமான பிளாஸ்டிக் தடுப்புகள் அமைக்கப்பட்டன. பின்னர் யார் கண்ணிலும் படாத வகையில் அந்தச் சிலையை அகற்றும் பணிகள் நடந்தன. டிச.22 இரவில் இந்தச் சிலை முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டது. பல்கலைக்கழக வளாகத்துக்குள் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்ந்து செய்துவந்த நிலையில், அதன் உச்சமாக இந்நடவடிக்கை அமைந்திருப்பதாகப் பலரும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்.

“1997-ல் இந்தச் சிலை அமைக்கப்பட்ட நிகழ்வு, ஹாங்காங்கில் சுதந்திரத்துக்கான உரைகல்லாக அமைந்தது. 2021-ல் அது அகற்றப்பட்டிருப்பது ஹாங்காங்கில் சுதந்திரத்துக்கான கல்லறையாகக் கருதப்படும்” என்று ஹாங்காங்குக்கான பிரச்சாரம் எனும் அமைப்பின் தலைவர் சாமுவேல் சூ வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

ஹாங்காங் மீது தொடர்ந்து அடக்குமுறையைச் சீனா கையாண்டுவருவதாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசியுங்கள்...

இனி ‘தேசபக்தர்கள்’ மட்டுமே போட்டியிடலாம்!- ஹாங்காங் தேர்தல் முறையைச் ‘சீர்திருத்தும்’ சீனா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE