“இது 2020 அல்ல... ஒமைக்ரானை எதிர்கொள்ள அமெரிக்கா தயார்!”

By காமதேனு

ஒமைக்ரான் பரவல் குறித்து முக்கிய உரையாற்றியிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “இது 2020 மார்ச் மாதம் அல்ல. அமெரிக்கா தயாராக இருக்கிறது” எனக் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவில் கரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதுவரை 5.2 கோடி பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அவர்களில் 4 கோடி பேர் தொற்றிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள். அந்நட்டில் இதுவரை கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8.3 லட்சம். ஒமைக்ரான் பரவலின் வேகமும் அமெரிக்காவில் அதிகரித்திருக்கிறது. ஒமைக்ரான் தொற்றின் காரணமாக அமெரிக்கர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

இச்சூழலில், நேற்று (டிச.21) தொலைக்காட்சியில் அமெரிக்க மக்களிடம் உரையாற்றிய பைடன், குளிர்காலத்தில் அதிகரித்திருக்கும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிட்டார்.

“2 கோடி பேருக்கு முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. கரோனா வைரஸின் புதிய திரிபுகள் குறித்து நிறைய விஷயங்களும் தெரிந்திருக்கின்றன. விழிப்புடன் இருக்க வேண்டியது மட்டும்தான் இப்போது அவசியம்” எனக் கூறியிருக்கிறார்.

62 சதவீதம் பேருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டிருக்கும் நிலையில், இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தங்கள் நாட்டுப்பற்றுக் கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டவர்கள் என்றும் அவர் சாடினார்.

அதிக அளவில் உருமாற்றம் அடையும் தன்மை கொண்ட ஒமைக்ரானிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, அனைவரும் பூஸ்டர் டோஸ்களைச் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டதாகக் கூறியிருக்கும் முன்னாள் அதிபர் ட்ரம்ப்பைப் பாராட்டியிருக்கும் பைடன், தான் அவருடன் ஒத்துப்போகும் ஒருசில விஷயங்களில் இதுவும் ஒன்று என்றும் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, பள்ளிகளை மூடவேண்டிய அவசியம் நேராத அளவுக்கு அமெரிக்கா தயாராகவே இருக்கிறது என்றும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கூடுதலாக 1,000 மருத்துவர்கள், செவிலியர்கள் கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அறிவித்திருக்கும் பைடன், மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படுவார்கள் எனக் கூறியிருக்கிறார்.

வீட்டிலேயே கரோனா பரிசோதனை செய்துகொள்ளும் கருவிகளையும் எல்லா மாநிலங்களுக்கும் அனுப்ப அமெரிக்க அரசு முடிவெடுத்திருக்கிறது. கரோனா பரிசோதனையும் இலவசம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்திருப்பதையும், ஒமைக்ரான் தொற்று அதிகரித்துவருவதையும் சுட்டிக்காட்டியிருக்கும் உலக சுகாதார நிறுவனம், பூஸ்டர் டோஸ்களைச் செலுத்திக்கொள்வதில் அந்நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE