பசி, பட்டினி, படுகொலைகள், அடக்குமுறை!

By ஆர்.என்.சர்மா

கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு(!) என்று அழைக்கப்படும் வட கொரியாவில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் மன்னாராட்சிக் காலத்தை விஞ்சும் வகையில் இருக்கின்றன. பொது இடங்களில் 11 நாட்களுக்கு யாரும் சிரிக்கக் கூடாது என்று தொடங்கி மரணம் சம்பவித்த வீடுகளில் அதிகம் அழக் கூடாது என்பது வரை ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து உலகம் அதிர்ச்சியடைந்து நிற்கிறது. இந்த உத்தரவுகள் அப்படியே கடைப்பிடிக்கப்படுகின்றன. காரணம் அரசு உத்தரவை மீறினால் ராணுவம் ஈவு இரக்கம் பாராமல் நடவடிக்கை எடுத்துவிடும்.

பசி-பட்டினி, அதனால் மரணம், அடக்குமுறை. அரசை எதிர்த்துப் பேசினால் சிறைவாசம், சித்திரவதை இவையே வட கொரியாவின் அடையாளங்கள். இன்று நேற்றல்ல எழுபது ஆண்டுகளாக, மூன்று தலைமுறை சர்வாதிகளோடு வாழ்கிறது வட கொரியா.

உலகிலேயே தனித்துவமான நாடு இது. கொரிய தொழிலாளர் கட்சியால் ஆளப்படுகிறது. இந்த ஒரு கட்சிக்கு மட்டுமே இங்கு அனுமதி. சீனாவைப் போல, கம்யூனிஸ நாடு என்றே கருதப்படுகிறது. நாட்டில் தாத்தா, அப்பா, மகன் என்று குடும்ப ஆட்சி மூன்றாவது தலைமுறையாகத் தொடர்கிறது. மூவர் ஆட்சியிலும் அடக்குமுறை, பஞ்சத்தால் மக்கள் இறப்பது, அரசுக்கு எதிராக இருப்பவர்களை இரக்கமின்றி கொன்று குவிப்பது ஆகியவை பொதுவான அடையாளங்கள். மூவருமே மக்களை விட ராணுவத்தையே முக்கியமாகக் கருதுபவர்கள்.

இப்போது வட கொரிய அதிபராக இருப்பவர் கிம் ஜாங் உன். அவருடைய தந்தை கிம் ஜாங் இல் 1994 முதல் 2011 வரையில் அதிபராக இருந்தார். அவருக்கும் முன்னால் அவருடைய தந்தை கிம் இல் சுங் 1948 முதலே அதிபராக ஆட்சி செய்தார். மூன்று பேருமே சர்வாதிகாரிகள். வட கொரியாவின் தந்தை என்று கிம் இல் சுங் அழைக்கப்படுகிறார். கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளாக வட கொரியா ஒரே குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் இருக்கிறது.

கிம் ஜாங் உன் 27 வயதில் அதிபரான போது, இவரால் தாக்குப்பிடிக்க முடியாது, ராணுவப் புரட்சியில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றெல்லாம் அரசியல் விமர்சகர்கள் ஆருடம் சொன்னார்கள். ஆனால் அசைக்க முடியாதவராகத் தொடர்கிறார்.

வட கொரியாவில் இப்போது கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. மக்களில் பெரும்பாலானவர்கள் வயிறார சாப்பிட முடியாமல் பட்டினியில் வாடுகின்றனர். நாட்டின் வளம் அனைத்தும் ராணுவ ரீதியிலான வல்லரசாக்கவே செலவிடப்படுகிறது. ஆண்டுதோறும் அணுகுண்டு சோதனைகளையும் அதி நவீன ஏவுகணை சோதனைகளையும் நடத்துகிறார் அதிபர். அது மட்டுமின்றி உணவு தானியம், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றிலும் ராணுவத் தேவைக்கே முன்னுரிமை தருகிறார். எனவே ராணுவம் அவருக்கு மிகவும் விசுவாசமாக இருக்கிறது.

தன்னுடைய ஆட்சிக்குப் பகையோ, போட்டியோ இல்லாமல் சந்தேகப்படுகிறவர்களையெல்லாம் கொன்றுவிடுகிறார் அதிபர். அவருடைய தகப்பனாரின் இன்னொரு மனைவிக்குப் பிறந்த மகனையும் கொன்றுவிட்டார். நாட்டின் ஊடகம் அரசுக் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதிபருக்கு எதிராக யாரும் பேசுவதில்லை. அந்த நாட்டிலிருந்து எப்படியாவது தப்பித்து வெளியே சென்றவர்கள் சொல்வதிலிருந்துதான் என்ன நடக்கிறது என்பதை வெளியுலகம் தெரிந்துகொள்ள முடிகிறது. 2013 முதல் 2017 வரையில் ஆயிரக்கணக்கானவர்களை அதிபர் கொன்றுவிட்டார் என்று அரசு எதிர்ப்பாளர்கள் சொல்கின்றனர்.

கிம் ஜாங் உன் ஸ்விட்சர்லாந்தில் பள்ளிப் படிப்பை படித்தவர். இவர் நாட்டின் அதிபராக வருவார் என்றுகூட யாரும் நினைக்கவில்லை. ஆனால் அவருடைய தந்தை கிம் இல் சுங் இவர்தான் தனக்கு சரியான வாரிசு என்று இவர் ராணுவப் படை பொம்மைகளை வைத்து விளையாடுவதை வைத்துக் கணித்தார். அத்துடன் சிறிய வயதிலேயே ராணுவத்தின் பெரிய அதிகாரிகளின் சீருடைகளில் இருப்பதைப்போல நட்சத்திரங்களையும் வெற்றிச் சின்னங்களையும் செய்து பொருத்திக்கொள்வார். இதைப் பார்த்த தந்தை, உயர் ராணுவ அதிகாரிகளை அழைத்து மகனையும் பெரிய ராணுவ அதிகாரியாகவே கருதி மரியாதை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இப்படி இளம் வயதிலிருந்தே ராணுவத் தலைவராகவே வளர்ந்தார் கிம் ஜாங் உன். துப்பாக்கிச் சுடுதல், ஆயுதப் பயிற்சிகளில் அதிக நாட்டம் செலுத்தினார்.

ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா, மத்திய கிழக்கு என்று பல நாடுகளில் சர்வாதிகாரிகள் இருக்கின்றனர். அங்கெல்லாம் அரசை விரும்பாதவர்கள் தப்பித்து அகதியாகவாவது எங்காவது போக முடிகிறது. வடகொரியாவின் நில எல்லைகளும் கடல் எல்லைகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதால் யாராலும் தப்பியும் போக முடியவில்லை.

தென் கொரியாவைக் கைப்பற்ற கிம் இல் சுங் 1950-ல் போர் தொடுத்தார். தென் கொரியாவுக்கு ஆதரவாகப் பன்னாட்டுக் கூட்டு ராணுவப் படைகள் வந்தன. 1953-ல் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போது நடந்த சண்டையில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வட கொரியர்கள் இறந்தனர். கிம் ஜாங் இல் ஆட்சியில் மக்களுக்கு உணவு வாங்க பணத்தைச் செலவிடாமல் ராணுவத்துக்காகவே செலவிட்டார். 1997-ல் நாட்டில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்துக்கு இருபது லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். ராணுவத்துக்கு அவர் 600 கோடி அமெரிக்க டாலர்களைச் செலவிட்டார். 100 கோடி டாலர்களை ஏவுகணைகளைத் தயாரித்து சோதனை நடத்த ஒதுக்கினார். சொகுசு பங்களா, சொகுசு கார், சொகுசு கப்பல் போன்றவற்றுக்கு 60 கோடி டாலர் செலவிட்டார். இறந்த தன்னுடைய தந்தையின் சமாதி அடங்கிய நினைவில்லத்தைக் கட்ட 80 கோடி டாலர்களை ஒதுக்கினார். பிறகு அதே சமாதி வளாகத்திலேயே அவருடைய உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் வெறும் 20 கோடி டாலர்களைச் செலவிட்டு கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்களை இறக்குமதி செய்திருந்தால்கூட யாருமே பட்டினியால் இறந்திருக்க மாட்டார்கள் என்று வரலாற்று அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.

தாத்தா, மகன், பேரன் மூன்று பேருமே மக்கள் சாவதைப் பற்றிக் கவலைப்படாமல் ராணுவத்துக்குச் செலவிடுவதே முக்கியம் என்று செயல்படுகின்றனர். உணவு கிடைக்காமல் மக்கள் பட்டினி கிடக்கிறார்கள் என்று தெரிந்தும், நிவாரண நடவடிக்கை எடுக்காமல் இருந்தார் அதிபர் என்று 2014-ல் ஐக்கிய நாடுகள் சபை அமைத்த விசாரணை ஆணையம் அறிக்கையில் சுட்டிக்காட்டியது.

கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்திலும் மக்களுடைய துயர் நீக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த பத்தாண்டுகளில் வட கொரியா 130 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது. அவற்றில் மூன்று, கண்டம் விட்டு கண்டம் தாவும் நீண்ட ஏவுகணைகள். நான்கு முறை அணுகுண்டுகளை வெடித்து சோதனை நடத்தியுள்ளது. 2017-ல் நடத்தியது சக்திவாய்ந்த அணுகுண்டு சோதனை. அமெரிக்காவை அழிப்பது, தென் கொரியாவைப் போரில் வென்று வட கொரியாவுடன் இணைப்பது ஆகியவையே வட கொரியாவின் லட்சியங்களாக இருக்கின்றன.

வட கொரியா: சிறு குறிப்பு

கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு, கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று. கொரிய தீபகற்பத்தின் வடக்கில் உள்ளது. இதன் வடக்கில் சீனா, ரஷியா உள்ளன. தெற்கில் தென் கொரியா இருக்கிறது. மேற்கில் மஞ்சள் கடலும், கிழக்கில் ஜப்பானியக் கடலும் உள்ளன. தலைநகரம் பியாங்யாங். 1910-ல் கொரியாவை ஜப்பான் கைப்பற்றியது. இரண்டாவது உலகப் போரில் ஜப்பான் சரண் அடைந்த பிறகு கொரியா இரண்டாகப் பிரிக்கப்பட்டு வட கொரியா, ரஷ்யா வசமும் தென் கொரியா அமெரிக்கா வசமும் ஒப்படைக்கப்பட்டன. வடக்கே சோஷலிஸ்ட் கொரியா, தெற்கில் முதலாளித்துவ கொரியா உருவாகின. பரப்பளவு 1,20,540 சதுர கிலோ மீட்டர். மக்கள்தொகை 2.5 கோடி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE