1 ட்ரில்லியன் பார்வைகள்: ‘மைன்கிராஃப்ட்’ வீடியோ கேம் எட்டிய மைல்கல்!

By காமதேனு

உலகிலேயே மிக அதிகமாக விற்பனையாகும் வீடியோ கேம்களில், ‘மைன்கிராஃப்ட்’டுக்கு முக்கிய இடம் உண்டு. டெட்ரிஸ், மாரியோ, கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ போன்ற கேம்களைப் போலவே விற்பனையில் சாதனை படைக்கும் வீடியோ கேம் இது. தற்போது, புதிய சாதனையைப் படைத்திருக்கிறது இந்த கேம். ஆம், யூடியூபில் இந்த கேமின் காணொலிகள் 1 ட்ரில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கின்றன.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள மோஜாங் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த வீடியோ கேம், கணினிகள், செல்போன்கள், வீடியோ கேம் சாதனங்களில் விளையாடப்படுகிறது.

2009 மே மாதம் முதன்முதலில் இந்த கேமின் ஆரம்பநிலை வடிவம் வெளியானது. 2011-ல் இதன் முழுவடிவமும் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. யூடியூபில் பல குழுக்களும் உருவாகின. 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் 35,000-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களில் இந்த கேம் குறித்த காணொலிகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த வளர்ச்சி படிப்படியாகவே கிடைத்ததுதான். 2014-ல் 2.5 பில்லியன் டாலருக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம், மோஜாங் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை வாங்கிய பின்னர், இந்த கேமின் வளர்ச்சி மேலும் அதிகரித்தது.

கிடைக்கும் பொருட்களைக் கொண்டு நமக்கான உலகை நாமே எப்படி உருவாக்குவது என்பதுதான் இந்த வீடியோ கேமின் அடிப்படை அம்சம். கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில், மக்கள் வீட்டிலேயே முடங்கியிருந்ததால் இணையத்தில் அதிகம் உலவினர். மைன்கிராஃப்ட் வீடியோ கேம் விளையாடுபவர்களும், இதன் யூடியூப் பார்வையாளர்களும் அதிகரித்தனர்.

இந்நிலையில், 1 ட்ரில்லியன் பார்வைகளைப் பெற்று வீடியோ கேம் உலகில் பிரதானமான இடத்தைப் பிடித்திருக்கிறது ‘மைன்கிராஃப்ட்’!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE