கூகுள் ப்ளே கேம்களை இனி விண்டோஸிலும் விளையாடலாம்!

By காமதேனு

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுக்க பல வீடியோ கேம்கள் வெளியாகின்றன. ப்ளே ஸ்டேஷன், எக்ஸ் பாக்ஸ், விண்டோஸ், ஆண்ட்ராய்ட் போன்ற பல தளங்களில் வெளியாகும் பல கேம்களை சிறப்பிக்கும் வகையில் நடத்தப்படும் விழாவாக இருப்பது ‘தி கேம் அவார்ட்ஸ்’.

இந்த ஆண்டுக்கான ‘தி கேம் அவார்ட்ஸ்’ விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்துமுடிந்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, தற்போது ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் இயங்குதளம் கொண்ட சாதனங்களில் மட்டும் கிடைக்கும் கூகுள் ப்ளே ஸ்டோர் கேம் சேவைகள், அடுத்த ஆண்டு முதல் விண்டோஸ் இயங்கு தளங்களிலும் கிடைக்கும் என்று கூகுள் நிர்வாகிகள் அறிவித்ததுதான்.

கூகுள் ப்ளே கேம்ஸ் தயாரிப்பு இயக்குநர் க்ரெக் ஹார்டல் இதுகுறித்துப் பேசும்போது, “இதன் மூலம் கேம் ரசிகர்கள், தங்களுக்குப் பிடித்த கூகுள் ப்ளே கேம்களை அதிக சாதனங்களில் பயன்படுத்த முடியும். போன், டேப்லெட், க்ரோம்புக் மற்றும் விரைவில் விண்டோஸ் கணினிகளுக்கு இடையே தடையின்றி தங்களுடைய கேம் தரவை மாற்றி எதில் வேண்டுமானாலும் விளையாடலாம்” என்று தெரிவித்தார்.

விண்டோஸ் இயங்குதளத்தில் கூகுள் ப்ளே கேம்கள் எப்போது கொண்டுவரப்படும் என்ற செய்தியைக் கூகுள் இதுவரை வெளியிடவில்லை. விரைவில் என்று கூறியிருக்கிறார்களே தவிர, சரியான கால அளவை தெரியப்படுத்தவில்லை. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் இந்த வசதி நடைமுறைப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE