இஸ்ரேலில் உள்ள ரிசார்ட் நகரம் என்று அழைக்கப்படும் ஈலாட்டில், 70-வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டி நடந்துமுடிந்துள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த மாடல் அழகி ஹர்னாஸ் சாந்து 70-வது பிரபஞ்ச அழகி பட்டம் வென்றுள்ளார். இதற்கு முந்தைய மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற ஆண்ட்ரியா மெசா ஹார்னாஸ் சாந்துவுக்கு கிரீடம் அணிவித்துள்ளார்.
ஹார்னாஸ் சாந்துவுக்கு முன், 2 இந்தியர்கள் மட்டுமே பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளனர். நடிகை லாரா தத்தா 2000-ம் ஆண்டும், சுஷ்மிதா சென் 1994-ம் ஆண்டும் இந்தப் பட்டத்தை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர். அந்த வரிசையில் தற்போது ஹார்னாஸ் சாந்து இணைந்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டியில், பராகுவே நாட்டைச் சேர்ந்த நாடியா ஃபெரீரா 2-வது இடத்தையும், தென்னாப்பிரிக்காவின் லலேலா மஸ்வானே 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தேசிய உடைகள், நீச்சலுடைகள் மற்றும் அவர்களின் பொதுப் பேச்சுத் திறனை மதிப்பிடுவதற்கான நேர்காணல் கேள்விகள் ஆகியவற்றின் அடிப்படையில் போட்டியாளர்கள் மதிப்பிடப்பட்டனர்.
ஹார்னாஸ் சாந்துவிடம், ‘இளம் பெண்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களை எவ்வாறு சமாளிப்பது, அவர்களுக்கு என்ன அறிவுரை கூறுவீர்கள்’ என்று கேட்டதற்கு, “பெண்கள் தங்கள் சுயத்தை நம்ப வேண்டும்” என்று சாந்து கூறினார். மேலும், “நீங்கள் தனித்துவமானவர் என்பதை அறிவதே உங்களை அழகாக மாற்றுகிறது” என்றும் கூறினார். “உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்துங்கள், உலகம் முழுவதும் நடக்கும் முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பேசுவோம்” என்று அவர் கூறிய கருத்துகள் அவரது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளன.
இறுதியாக, “பெண்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் வெளியே வாருங்கள், உங்களுக்காக நீங்களே பேசுங்கள், ஏனென்றால் நீங்களே உங்கள் வாழ்க்கையின் தலைவர், நீங்களே உங்களது சொந்தக் குரல். நான் என்னை நம்பினேன், அதனால்தான் இன்று இங்கு நிற்கிறேன்” என்று தன்னம்பிக்கை மிளிர பேசியுள்ளார் ஹார்னாஸ் சாந்து.
சண்டிகரைச் சேர்ந்த சாந்து, இந்த மிஸ் யுனிவர்ஸ் வெற்றிக்கு முன் ‘மிஸ் திவா 2021’ உட்பட பல அழகுப் பட்டங்களை வென்றுள்ளார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற ‘ஃபெமினா மிஸ் இந்தியா’ போட்டியில் முதல் 12 போட்டியாளர்களில் சாந்தும் ஒருவர். மேலும், சில பஞ்சாபி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.