பிரிட்டனிலும் ஒரு சிஏஏ சட்டமா?

By ஆர்.என்.சர்மா

பிரிட்டனில் வாழும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், இந்துக்கள், சீக்கியர்கள், யூதர்கள் உள்ளிட்ட மத – இனச் சிறுபான்மை மக்களில் எவரை வேண்டுமானாலும், குடியுரிமையை நீக்கி, வெளியேற்ற அதிகாரமளிக்கும் மசோதா நிறைவேறிவிட்டது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் காமன்ஸ் சபையில் நிறைவேறிய இச்சட்டம், அடுத்து மேலவையான பிரபுக்கள் அவையிலும் நிறைவேறிவிடும் என்பது நிச்சயம்.

இந்தச் சட்டமானது இன, மதச் சிறுபான்மை மக்களை இரண்டாம்தரக் குடிமக்களாக அரசு கருதுவதை அப்பட்டமாக உணர்த்துகிறது. இந்த மசோதாவின் 9-வது பிரிவு, ஒரு நபரை அரசால் தொடர்புகொள்ள முடியாவிட்டாலோ, தொடர்புகொள்வதை அந்த நபர் தவிர்த்தாலோ அவருக்குத் தெரிவிக்காமலேயே அவருடைய குடியுரிமையை ரத்து செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.

எந்த நாட்டிலுமே அந்த நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்போர், அல்லது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு தலைமறைவாக இருப்போர் போன்றோரின் குடியுரிமையை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுப்பது வழக்கம்தான். ஆனால் பிரிட்டனின் இத்தனை ஆண்டுக்கால வரலாற்றில், எவருடைய குடியுரிமை ரத்து செய்யப்படுகிறதோ அவருக்குத் தெரிவிக்காமலேயே – அறிவிக்காமலேயே, இதைச் செய்யலாம் என்று சட்டம் கொண்டுவரப்படுவது இதுவே முதல் முறை.

அரசியல் ஆர்வலர்கள், மனித உரிமையாளர்கள், சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள், பிரிட்டனில் குடியேறியுள்ள இனச் சிறுபான்மையோர் இச்சட்டத்தைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள். இதன் தீவிரம் புரியாத மக்களுக்குத் தெளிவுபடுத்த ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், வீதிகளில் விழிப்புணர்வுக் கூட்டங்கள் போன்றவற்றுக்கு ஆர்வலர்கள் தயாராகின்றனர் இந்த மசோதாவுக்கு எதிராக இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன.

எல்லோரையும் குற்றவாளிகளாகக் கருதி அரசு நடவடிக்கை எடுத்துவிடாது என்றாலும், அறிவிக்கப்படாமலேயே நீக்குவது என்பது அச்சுறுத்தலாகவே இருக்கும்.

பிரிட்டனில் ஏற்கெனவே இப்படியொரு சட்டம் இருக்கிறது. எனினும், அச்சட்டத்தின்படி யாருடைய குடியுரிமை நீக்கப்படவிருக்கிறதோ அவருக்குத் தகவல் தெரிவித்துவிட்டுத்தான் நடவடிக்கை எடுக்க முடியும். அரசின் நடவடிக்கை சட்ட விரோதம் என்று அவர் கருதினால் நீதிமன்றம் மூலம் தடையாணை பெற முடியும், வழக்கு நடத்தி தன்னுடைய பங்கு நியாயத்தை எடுத்துரைக்க முடியும். இப்போது அந்த வாய்ப்பு அடியோடு மறுக்கப்படுகிறது.

2017 வரையில் பிரிட்டனில் இப்படிக் குடியுரிமை இழப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு 20-க்கும் குறைவாகத்தான் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 100-க்கும் மேல் உயர்ந்து வருகிறது. இப்படிக் குடியுரிமை இழப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சட்டவிரோத நடவடிக்கை என்று பிரிட்டிஷ் அரசு கருதும் செயல்களில் ஈடுபடுகிறவர்கள். அவர்களிலும் பெரும்பாலானவர்கள் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள்.

பிரிட்டனின் குடியுரிமை பெற்ற பிறகு, இது நிரந்தரம் என்று நம்பி ஏராளமானோர் தங்களுடைய நாட்டுக் குடியுரிமையை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். எல்லோரையும் குற்றவாளிகளாகக் கருதி அரசு நடவடிக்கை எடுத்துவிடாது என்றாலும், அறிவிக்கப்படாமலேயே நீக்குவது என்பது அச்சுறுத்தலாகவே இருக்கும்.

சட்டவிரோத நடவடிக்கைகள் என்பதற்கு பிரிட்டிஷ் அரசு விளக்கங்களை மாற்றினால், அரசியல் ரீதியிலான நடவடிக்கைகள்கூட குடியுரிமை நீக்கத்துக்குக் காரணமாகிவிடலாம். எல்லாவற்றையும்விட, மக்களை அவர்களுடைய இனம், மதம் சார்ந்து அடிப்படை மனித உரிமையைத் தாழ்த்துவது அதுவும் ஜனநாயக முதிர்ச்சிபெற்ற நாடான பிரிட்டனுக்கு அழகல்ல என்பது பிரிட்டனைச் சேர்ந்த பலருடைய கருத்து.

இந்த மசோதா கடந்த புதன்கிழமை இரவு (டிச.8) காமன்ஸ் சபையில் நிறைவேற்றப்பட்டபோது, கன்சர்வேடிவ் (டோரி) கட்சியின் உறுப்பினர்கள் உற்சாகக் குரல் எழுப்பி வரவேற்றனர். இந்த மசோதாவைக் கொண்டுவந்தவர் உள்துறை அமைச்சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான பிரீத்தி படேல். குஜராத்தைச் சேர்ந்தவர். இந்த மசோதாவுக்குக் கிடைத்த ஆதரவால், பெருமகிழ்ச்சி அடைந்துள்ளதாகக் கூறியிருக்கிறார் பிரீத்தி.

பிரிட்டன் உள்துறை அமைச்சர் பிரீத்தி படேல்

இப்படியொரு மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஆதரவு தரும் என்பது பிரிட்டன் வாழ் சிறுபான்மையர்கள் எதிர்பாராத நிகழ்வு அல்ல என்றாலும் இதை இவ்வளவு விரைவாக, தீவிரமாகக் கொண்டு வந்தது பலருக்கும் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது.

ஆங்கிலக் கால்வாய் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு - குறிப்பாக பிரிட்டனுக்கு, புகலிடம் தேடி வரும் அகதிகளை எதிர்கொண்டு போய் மீட்பதும் அழைத்து வருவதும் குற்றச் செயல் என்று இந்த மசோதாவின் இன்னொரு பிரிவு கூறுகிறது. பிரான்ஸிலிருக்கும் அகதிகள் பலர் ஏஜென்டுகள் மூலம் படகில் பிரிட்டனுக்குச் செல்வதும், படகுகள் கவிழ்ந்து பலர் இறப்பதும் தொடர்கதையாகியிருக்கும் நிலையில், இந்தப் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது!

உலகுக்கே நாகரிகத்தைக் கற்றுத் தந்தது நாங்கள்தான், மனித உரிமைகளின் காவலர்கள் நாங்கள்தான், இன-மத-மொழி வேற்றுமை பாராத மதச்சார்பற்ற ஆட்சியாளர்கள் நாங்கள்தான் என்று பீற்றிக்கொண்டவர்களின் சாயம் இப்போது வெளுக்க ஆரம்பித்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE