ஒமைக்ரானுக்கு அடுத்து குப்தா சகோதரர்கள்

By எஸ்.எஸ்.லெனின்

தென்னாப்பிரிக்காவின் வளங்களை பலவகையிலும் கொள்ளையடித்து, நாட்டைவிட்டே தப்பியோடிய குப்தா சகோதரர்களை வளைப்பதற்காக, தென்னாப்பிரிக்க மக்கள் சர்வதேச அளவில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

கரோனா வைரஸின் புதிய பிறழ்வான ஒமைக்ரான் கண்டறியப்பட்டது தொடர்பாக, உலகத்தின் ஒட்டுமொத்தப் பார்வையும் தென்னாப்பிரிக்கா மீது குவிந்தது. தென்னாப்பிரிக்கர்களின் கவனமோ குப்தா சகோதரர்கள் எனப்படும் 3 இந்தியர்கள் மீது குவிந்திருக்கிறது.

அஜய் குப்தா, அதுல் குப்தா, ராஜேஷ் குப்தா ஆகிய 3 சகோதரர்கள் தொண்ணூறுகளின் மத்தியில் பிழைப்புத் தேடி இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்கா சென்றனர். அங்கே வளர்ந்து வந்த அரசியல்வாதியான ஜாக்கோப் ஜூமா என்பவரை பிடித்தனர். ஜாக்கோபின் அரசியல் வளர்ச்சிக்கான நிதி உதவிகளை குப்தா சகோதரர்கள் செய்ய, பதிலாக கள்ள வழிகளில் அரசு நிதியை கொள்ளையடிக்கும் உபாயங்களை ஜாகோப் காட்டினார்.

பின்னாளில் இதே ஜாக்கோப் ஜூமா தென்னாப்பிரிக்க அதிபரானதில், குப்தா சகோதரர்களுடன் இணைந்து கூட்டுக்கொள்ளையே நடந்தது. அரசியல் போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள், மக்களின் வாக்குரிமை என பலகட்ட நகர்வுகள் மூலம் ஒருவழியாக இந்த கொள்ளை கூட்டணிக்கு தென்னாப்பிரிக்க மக்கள் முடிவு கட்டினர். ஜாக்கோப் ஜூமா மாட்டிக்கொண்டபோதும், குப்தா சகோதரர்கள் தாங்கள் கொள்ளையடித்த பல ட்ரில்லியர் ராண்ட் மதிப்பிலான சொத்துகளுடன் வளைகுடா நாடுகளுக்கு தப்பியோடினர்.

ஜாக்கோப் ஜூமா

தற்போது துபாய் மற்றும் இந்தியாவில் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் இந்த குப்தா சகோதரர்களை, கைது செய்து தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்று சொத்துகளை மீட்க தென்னாப்பிரிக்கா அரசு முடிவு செய்தது. முந்தைய கசப்பனுபவங்களால், அரசின் செயல்பாடுகளை மட்டுமே நம்பியிராது, தென்னாப்பிரிக்க மக்களே களத்தில் இறங்கியுள்ளனர். தங்கள் பங்குக்கு குப்தா சகோதரர்களை வளைக்க சர்வதேச அளவிலான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதற்காக தென்னாப்பிரிக்காவில் செயல்படும் பல தன்னார்வ அமைப்புகள், ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள், அரசு சாரா சேவை நிறுவனங்கள் ஆகியவை ஊழலுக்கு எதிரான உலகளாவிய இதர அமைப்புகளுடன் இதற்காக கைகோத்துள்ளன. ஜோகன்னஸ்ர்பெர்க் நகரில் இது தொடர்பாக நேற்று(டிச.9) அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க கஜானாவைச் சுரண்டி பல நாடுகளிலும் சொத்துகளை குவித்திருப்பதாக குப்தாக்கள் மீது இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, எந்த நாடும் குற்றவாளிகளுக்கு துணைபோகக்கூடாது என்பதை வலியுறுத்தவும், குப்தா சகோதரர்கள் பதுங்கியிருக்கும் நாடுகளுக்கும், ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தவும் அவர்கள் தீவிர பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.

தென்னாப்பிரிக்க மக்களின் வரிப்பணம் எவ்வாறு கொள்ளை போனது என்பதில் தொடங்கி, அவை குப்தாக்கள் வாயிலாக வெளிநாடுகளில் முதலீடு ஆனது வரை, ‘குப்தா லீக்ஸ்’ என்ற தலைப்பில் ஏற்கெனவே தென்னாப்பிரிக்காவில் பிரபலமாகியுள்ள ரகசிய ஆவணங்களை பொதுவெளியில் பரப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்க இளைஞர்களின் இந்தப் போக்கு, தொழிலதிபர்கள் போர்வையில் பல்வேறு நாடுகளிலும் அரசியல் ஆதாயத்துடன் அந்நாட்டின் வளங்களை சூறையாடி வருவோருக்கு தர்மசங்கடம் தரக்கூடியது. இதனால், அவர்கள் தன்னிச்சையாக குப்தாவுக்கான ஆதரவு தரப்பாக மாறவும் தங்களை வெளிப்படுத்தவும் தலைப்பட்டுள்ளனர். எனவே, தென்னாப்பிரிக்காவை தாண்டியும் ஊழலுக்கு எதிரான உலகளாவிய பிரச்சாரமாகவும் தங்களது முன்னெடுப்பு மாறப்போகிறது என, குப்தா சகோதரர்களுக்கு எதிராக களமிறங்கியுள்ள தென்னாப்பிரிக்க தன்னார்வலர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE