2050-ல் ‘நெட் ஜீரோ’: பைடன் அரசின் பெருமுயற்சி!

By காமதேனு

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறது அமெரிக்கா. 2050-ம் ஆண்டுவாக்கில், பசுங்குடில் வாயு வெளியீட்டை முற்றிலும் நிறுத்தி, பூஜ்ய நிலையை (நெட் ஜீரோ) எட்டும் நடவடிக்கைகளுக்கான நிர்வாக ஆணையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டிருக்கிறார்.

இதன்படி, அமெரிக்க அரசுக்குச் சொந்தமான சுமார் 6 லட்சம் கார்களும் ட்ரக்குகளும் மாற்றப்படுகின்றன. 2035-ம் ஆண்டில், கரியமில வாயு வெளியேற்றம் அறவே இல்லாத வகையில் இயங்கும் வாகனங்கள் அரசின் கைவசம் இருக்கும் எனும் இலக்குடன் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. குறிப்பாக, மின்சார வாகனங்களை அரசு வாங்கும். இலகுரக வாகனங்களை அப்படி மாற்றும் பணிகள், இன்னும் 6 ஆண்டுகளில் தொடங்கும்.

2045-ம் ஆண்டுவாக்கில், அமெரிக்க அரசுக்குச் சொந்தமான 3 லட்சம் கட்டிடங்கள், பசுங்குடில் வாயுவை வெளியிடாத அளவுக்கு மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். அதன் ஒருபடியாக, 2032-ம் ஆண்டுவாக்கில் 50 சதவீதமாக பசுங்குடில் வாயு வெளியேற்றம் அரசுக் கட்டிடங்களில் கட்டுப்படுத்தப்படும். அதேபோல், அரசால் கொள்முதல் செய்யப்படும் மின்சக்தி விஷயத்திலும் இதே இலக்கை நோக்கிய திட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

சூரிய ஒளி, காற்றாலை ஆகியவற்றின் மூலம் உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தை அரசு கொள்முதல் செய்யும். அரசின் எல்லா வகையான கொள்முதலும், 2050-ம் ஆண்டுவாக்கில் பூஜ்ஜிய நிலையை எட்டும் வழிமுறைகளின் அடிப்படையில் இருக்கும்.

“நாட்டிலேயே மிகப் பெரிய நில உரிமையாளராகவும், எரிசக்திப் பயன்பாட்டாளராகவும், முதலாளியாகவும் இருக்கும் பெடரல் அரசானது, சுத்தமான, நிலையான எரிசக்தி எனும் இலக்கை எட்டும் வகையில் மின்னுற்பத்தி கட்டமைப்பை ஏற்படுத்துவது, மின்சாரம் வாங்குவது, நிர்வகிப்பது, வாகனங்கள், கட்டிடங்களை நிர்வகிப்பது மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், தனியார் முதலீடுகளை அதிகரிக்கவும், பொருளாதாரத்தையும் தொழில் துறையையும் விரிவுபடுத்தவும் முடியும்” என அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கரியமில வாயு (கார்பன் டை ஆக்ஸைடு), மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்றவை பசுங்குடில் வாயுக்கள் என்று அழைக்கப்படுகின்றன. உலக அளவில் பசுங்குடில் வாயு வெளியேற்றத்தில் முதல் இடத்தில் சீனாவும், 2-வது இடத்தில் அமெரிக்காவும் இருக்கின்றன. 3-வது இடத்தில் இருக்கும் நாடு - இந்தியா!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE