உலக நாடுகளுக்கெல்லாம் உற்ற நண்பனாக இருக்க சீனா தொடங்கிய திட்டம் ‘ஒரே பாதை ஒரே மண்டலம்’ (One Road One Belt). அமெரிக்காவை உலகின் வல்லரசு பீடத்திலிருந்து அகற்ற அனைத்து வழிகளிலும் முயன்று வரும் சீனா, தனது ராணுவ, பொருளாதார வலிமையைப் பெருக்கிக்கொள்வதுடன் பிற நாடுகளுக்கு உதவும் சாக்கில் சந்தைகளையும் புதிதாகப் பிடிக்க சீரிய திட்டம் தீட்டியது. பழங்காலத்தில் சீனாவில் நெய்த பட்டுத் துணிகளை குதிரை, கழுதை போன்றவற்றின் மீது ஏற்றி வணிகர்கள் கொண்டுசென்ற பட்டுப் பாதையை அப்படியே தனது பொருளாதார ஒத்துழைப்புக்கான பாதையாகவும் தேர்வு செய்து அறிவித்தது.
உலகின் பெரும்பாலான நாடுகள் இதை வரவேற்றன. நம்முடைய பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் இதில் சேர்ந்துவிட்டன. இந்தியா பலமுறை யோசித்துவிட்டு, விலகியே நிற்கிறது. இந்தியா இந்த திட்டத்தில் சேர்ந்திருக்க வேண்டும் என்று எழுதிய பொருளாதார வல்லுநர்கள் அனேகம். நல்லதொரு வாய்ப்பை இந்தியா இழக்கிறது என்றே இடதுசாரி அறிவுஜீவிகளும் வருத்தப்பட்டனர். இந்திய அரசு தயங்கியதற்கு முதல் காரணம், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டு பிறகு சீனாவின் வசம் ஒப்படைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக அந்தப் பாதை செல்கிறது. அடுத்தது இந்தியாவுடன் அடிக்கடி எல்லைப் பிரச்சினையைக் கிளப்பும் சீனாவை நம்பி எப்படி கூட்டுத் தொழில் திட்டங்களில் இறங்குவது என்ற அனுபவம். சீனா பூனை போல இருந்தாலும் இது சைவப் பூனை அல்ல என்று இந்தியாவில் அனைவருக்குமே தெரியும். அந்நாடு தன்னுடைய சுபாவத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பும் இல்லை, தேவையும் இல்லை. முன்பைவிட வலுவாக இருப்பதால் முன்பைவிட தீவிரமாகவே எதிலும் இருக்கும். இந்தியாவின் தயக்கம் நியாயமானது என்பது கல்வான் சம்பவம் நிரூபித்துவிட்டது.
இந்தச் சூழலில், ‘நாங்களும் பவுத்தர்கள் – நீங்களும் மாஜி பவுத்தர்கள்’ என்று கூறி சீனாவிடம் நெருக்கம் காட்டிய இலங்கை, வசமாக சிக்கிக் கொண்டுவிட்டதாகவே தெரிகிறது.
உகாண்டா நாட்டில் என்டெபி விமான நிலையம் உலக வரலாற்றில் மறக்கவே முடியாதது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தவர்கள், பிரான்ஸிலிருந்து சென்ற இஸ்ரேலிய விமானப் பயணிகளையும், பிறரையும் சிறைப்பிடித்து என்டெபிக்கு அந்த விமானத்தை ஓட்டிச் சென்று அனைவரையும் கொல்லப் போவதாக அச்சுறுத்தியபோது, இஸ்ரேலிய ராணுவம் துல்லியமாகத் திட்டமிட்டு கமாண்டோ வீரர்களை விமானங்களில் அனுப்பி விமான நிலையத்தில் இறங்கி, மின்னல் வேகத்தில் தாக்கி கடத்தல்காரர்களையும் அவர்களுக்குக் காவலாக நின்ற உகாண்டா ராணுவத்தினரையும் கொன்றுவிட்டு இருநூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை வேறு விமானத்தில் ஏற்றிச் சென்றது. 1976 ஜூலை 4-ல் நடந்த இச்சம்பவம் திரைப்பட விறுவிறுப்புக்கு நிகரானது (இந்தச் சம்பவத்தின் அடிப்படையில் பல திரைப்படங்களும் எடுக்கப்பட்டன!)
அப்படிப்பட்ட என்டெபி விமான நிலையத்தைச் சீனா கைப்பற்றிவிட்டது என்று சமீபத்தில் பேசப்பட்டது (பயப்பட வேண்டாம். பழைய பாணியில் அசம்பாவிதம் ஏதும் இல்லை!) சீனாவிடம் 20.70 கோடி டாலர்கள் கடன் வாங்கியது அவ்வளவுதான். வட்டியும் தரவில்லை, அசலையும் திருப்பவில்லை. கடன் ஒப்பந்தத்தை மாற்றி எழுதிக்கொள்ளலாம் என்று உகாண்டா கேட்டது. சீனா மறுத்துவிட்டது. இது தீர்ப்பல்ல - திருத்துவதற்கு, கடன் ஒப்பந்தம், கட்டுப்படுங்கள் என்று கண்டிப்புடன் கூறிவிட்டது. இதைத் தெரிந்துகொண்ட ஊடகங்கள் என்டெபி விமான நிலையத்தை சீனா ஜப்தி செய்துவிட்டதைப்போல கதை கட்டின. அந்நாட்டு அரசை அதை மறுத்தது.
ஆப்பிரிக்காவின் பரம ஏழை நாடுகள் வாங்கிய வட்டியில்லாக் கடன்கள் 2021 இறுதியில் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மாநாட்டில் அமைச்சர்களிடையே பேசுகையில் அறிவித்தார். கடன் மட்டுமல்ல, கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து தப்பிக்க ஊசி மருந்துகளையும் தேவைக்கேற்ப அனுப்புகிறோம் என்று அறிவித்தார்.
சீனாவின் ‘ஒரே பாதை ஒரே மண்டலம்’ திட்டத்தின் கீழ் ஆப்பிரிக்காவில் 40 நாடுகள், ஐரோப்பாவில் 34 நாடுகள், கிழக்கு ஆசியாவில் 24 நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் 17 நாடுகள், லத்தீன் அமெரிக்கா, கரீபிய கடலோர நாடுகள் 19, தென் கிழக்கு ஆசியாவில் 6 நாடுகள் கூட்டுத் தொழில் (கடன்) ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ளன. கடன் ஒப்பந்த வாசகங்கள் மிகவும் ரகசியமானவை. எந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதோ அந்த நாட்டு மக்களுக்கும் ஊடகங்களுக்கும்கூட தெரிவிக்கப்படக் கூடாது என்ற நிபந்தனையுடன் செய்துகொள்ளப்பட்டவை. வட்டியில்லாமலோ குறைந்த வட்டியிலோ அல்ல – வணிக வங்கிகள் வசூலிக்கும் அதே உயர் விகிதத்தில்தான் கடன் தரப்பட்டுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால் செலுத்த வேண்டிய அபராதத் தொகை ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
‘எய்ட்டேட்டா’ என்ற ஆய்வு அமைப்பு தெரிவிக்கும் தகவல்படி 2021 செப்டம்பர் இறுதி வரையில் மட்டும் 165 நாடுகள் சீனாவுக்கு 38,500 கோடி அமெரிக்க டாலர்கள் கடன்பட்டுள்ளன. 42 நாடுகள் சீனாவிடம் பட்டிருக்கும் கடன் தொகை அவற்றின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) 10 சதவீதம் அல்லது அதற்கும் மேல்.
இந்தக் கடன்களில் 70 சதவீதத் தொகை, தொழில் வளர்ச்சி, துறைமுக மேம்பாடு, சாலையமைப்பு திட்டங்களைக் கூட்டாகச் செய்யும் சீன அரசு நிறுவனங்கள் மூலம்தான் செலவிடப்படுகிறது. அதாவது ஒப்புக்கொண்ட கடன் தொகையைக்கூட சீனாவே தனது நிறுவனங்கள் மூலம்தான் பெருமளவு செலவும் செய்கிறது. இந்தத் தொகை, ஒப்பந்தம் செய்துகொண்ட நாட்டின் வங்கிகள் மூலம் வழங்கப்படுவதில்லை. இந்தத் திட்டங்களை அமல் செய்யும் நிறுவனங்கள் மட்டுமல்ல, தொழிலாளர்களும் சீனர்களே. இவர்களுடைய ஊதியத்தை கடன் ஒப்பந்தம் செய்துகொண்ட நாடுகள்தான் தர வேண்டும். எந்தத் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, சம்பளமாகத் தரப்படுவது எவ்வளவு என்பதெல்லாம் வெளியில் தெரியாது.
இலங்கையில் அம்பன்தோட்ட துறைமுகத்தை ஆழப்படுத்தி, நவீனப்படுத்தி, மேம்படுத்தும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அதற்காக சீனாவின் அரசு நிறுவனத்திடம் 99 ஆண்டு குத்தகையில் துறைமுகத்தை ஒப்படைக்குமாறு இலங்கைக்கு நெருக்குதல் தந்து, பெறப்பட்டுவிட்டது. சீனா ஒவ்வொரு நாட்டை ஒவ்வொரு விதமாகச் சுரண்டுகிறது. வெனிசூலா நாடு கச்சா எண்ணெய் தயாரிக்கிறது. அத்துறையில் அதனுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட சீனா, எண்ணெய் ஏற்றுமதியில் கிடைக்கும் தொகையைத் தனது கட்டுப்பாட்டில் உள்ள வங்கிக் கணக்கில் போடுமாறு வெனிசூலாவைப் பணித்துவிட்டது. உரிய காலத்தில் வெனிசூலா பணம் தராவிட்டால், சீனா எண்ணெய் விற்பனைக் கணக்கிலிருந்து அத் தொகையை எடுத்துக்கொண்டுவிடுகிறது.
தாஜிகிஸ்தான் நாடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டது, கடனைத் திருப்பித்தரும் வரை 1,158 கிலோ மீட்டர் பரப்புள்ள இடத்தை நானே வைத்துக் கொள்கிறேன் என்று எடுத்துக் கொண்டுவிட்டது சீனா.
அம்பன் தோட்டாவில் நடந்தது என்ன என்று தெரிந்துகொண்ட சீனாவின் ஆசிய கூட்டாளி நாடுகள், கடன் ஒப்பந்தத்தை மாற்றி எழுதிக்கொடுங்கள் என்று அந்நாட்டிடம் கெஞ்சத் தொடங்கியுள்ளன. மலேசியா இப்படி ரயில் – சாலை திட்டத்துக்கு முதலில் மதிப்பிட்ட கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் குறைத்து எழுதி வாங்கிக் கொண்டிருக்கிறது. மியான்மர், துறைமுக கட்டமானத் திட்டத்தின் செலவில் 25 சதவீதத்தைக் குறைத்து எழுதிவாங்கியது.
சோனாடியா என்ற இடத்தில் ஆழ்கடல் துறைமுகத்தை கட்டித்தர சீனாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை வங்கதேசம் ரத்தே செய்துவிட்டது. அதில் மூன்று ரயில் பாதைகளை கட்டித்தரும் திட்டமும் சேர்ந்திருந்தது. அதிக கட்டுமானச் செலவு, ஊழல், மிதமிஞ்சிய விலை நிர்ணயம் போன்றவற்றை அறிந்துகொண்ட நாடுகள் சீனாவுடனான கூட்டு திட்டங்களை அப்படியப்படியே நிறுத்துகின்றன.
எய்ட்டேட்டா தகவல்படி, மலேசியா 1158 கோடி அமெரிக்க டாலர் செலவு திட்டங்களையும், கசகஸ்தான் 150 கோடி டாலர்கள் பிடிக்கும் திட்டத்தையும், பொலீவியா 100 கோடி டாலர்கள் செலவு பிடிக்கும் திட்டத்தையும் ரத்து செய்துவிட்டன.
ஆப்பிரிக்காவின் முக்கியத்துவத்தை சீனா எப்போதும் உணர்ந்தே வந்திருக்கிறது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் கச்சா பெட்ரோலியமும், தாமிரம் தயாரிப்பதற்கான கனிமமும் மிகுதியாக உள்ளன. எனவே அந்த நாடுகளுடன் நைச்சியமாகப் பேசி ஒப்பந்தங்களைச் செய்து வருகிறது சீனா. கென்யா, நைஜீரியா, அங்கோலா, தென்னாப்பிரிக்கா, ஜாம்பியா, காங்கோ, சூடான், எதியோப்பியா ஆகிய நாடுகள் சீனாவின் கடன் பொறியில் சிக்கிவிட்டன. ஆப்பிரிக்க நாடுகளில் பதவியில் இருக்கும் தலைவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பெரும் தொகையை லஞ்சமாகக் கொடுத்தே இந்த ஒப்பந்தங்களை சீனா செய்துகொண்டிருக்கிறது என்கிறார்கள்.
சீனாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களால் கடனில் ஆழ்ந்துவிட்ட நாடுகள் விடுத்த கோரிக்கையை ஏற்று புதிய கடன்தர பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) தயாரில்லை. ராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சொத்துகளுக்குத்தான் சீனா குறிவைக்கிறது என்று முதலில் கருதினார்கள். ஆப்பிரிக்க கனிமவளத்தைக் கைப்பற்றத்தான் சாலை, ரயில்மார்க்கம், கடல் மார்க்கம், துறைமுக மேம்பாட்டு திட்டங்கள் என்று சுற்றி வளைத்திருக்கிறது சீனா என்று இப்போது உணர்ந்துள்ளார்கள்.
இதனால் இப்போது சீனாவுக்குப் போட்டியாக ‘பில்ட் பேக் பெட்டர் வேர்ல்ட்’ (பி த்ரீ டபுள்யு) திட்டத்தை அமெரிக்காவும், ‘குளோபல் கேட்வே’ என்ற திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்துள்ளன.
பிற நாடுகளின் கசப்பான அனுபவங்களிலிருந்து இன்னமும் பாடம் படிக்காத, அல்லது படிக்க விரும்பாத நாடு பாகிஸ்தான் மட்டுமே. குவாதர் துறைமுகத்தை 40 ஆண்டுகள் குத்தகைக்கு சீனாவிடம் தாரை வார்த்துவிட்டது பாகிஸ்தான். அந்தத் துறைமுகம் மூலம் கிடைக்கும் வருவாயில் 90 சதவீதத்தை சீனமே எடுத்துக் கொள்கிறது. உள்ளூர் மீனவர்களை மீன்பிடிக்கக்கூட அது அனுமதிப்பதில்லை. இதை எதிர்த்து பலூசிஸ்தான் மக்கள் தொடர் போராட்டதைத் தொடங்கிவிட்டார்கள். ராணுவம், போலீஸாரால் அடக்க முடியவில்லை. இது பெரிய தலைவலியாக மாறிக் கொண்டிருக்கிறது. உள்நாட்டில் நிதியாதாரத்தைப் பெருக்க முடியாத பாகிஸ்தான், வேறு வழியின்றி சீனாவிடம் மேலும் மேலும் கடன் வாங்கிக்கொண்டிருக்கிறது. இதன் விளைவுகள் இன்னும் சில ஆண்டுகளில் தெரியவரும்.