வீழ்ச்சியடையும் லிரா: துயரத்தில் துருக்கியர்கள்!

By ஆர்.என்.சர்மா

உலகமே பெருந்தொற்று காரணமாகப் பொருளாதாரத் துறையில் சவால்களைச் சந்தித்து வரும்போது, துருக்கி விதிவிலக்காக இருக்க முடியுமா? அங்கு, அந்த நாட்டின் செலாவணியான ‘லிரா’ படுவேகமாக மதிப்பிழந்துவருகிறது. இது, அந்த நாட்டு மக்களின் வாங்கும் சக்தியை மட்டுமல்ல, தொழில் துறையின் உற்பத்தி ஆற்றலையும் தயாரிப்பாளர்களின் இறக்குமதி ஆற்றலையும் கடுமையாகப் பாதித்து வருகிறது. நுகர்பண்டங்களின் விலை மக்களால் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. சாப்பாட்டுச் செலவைச் சமாளிப்பதற்காக, மக்கள் தங்களுடைய மற்றைய தேவைகளை ஒத்திப்போடுகிறார்கள் அல்லது தவிர்த்துவிடுகிறார்கள்.

இந்த நிலைமைக்குக் காரணம் அந்நாட்டின் அதிபர் ரெசிப் தய்யிப் எர்டோவான். அவருடைய தவறான பொருளாதார நிலைப்பாட்டுக்குக் காரணம் ஆழ்ந்த மத நம்பிக்கை. பல நாடுகளில் அப்படித்தானே அரசியல் தலைவர்கள், தங்கள் சொந்த நாட்டு மக்களையே துயரத்தில் ஆழ்த்துகிறார்கள்!

எர்டோவான் அனுபவமற்ற அரசியல்வாதி அல்ல. 2003 முதல் 2014 வரையில் துருக்கியின் பிரதமராக இருந்திருக்கிறார். 2014 முதல் இப்போது வரை அதிபராக இருக்கிறார். ஆழ்ந்த மத நம்பிக்கையுள்ளவர். வட்டி வாங்குவது பாவம் என்று இஸ்லாம் கூறுகிறது. எனவே, ஆரம்பம் முதலே அவர் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். சமீப காலமாக மக்கள் படும் அவதியால், அவருடைய எண்ணத்தைச் செயல்படுத்த முடிவு செய்தார். பொருளாதாரம் படித்தவர்கள், விலைவாசி அதிகமாக இருந்தால் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்பார்கள். வட்டியை அதிகப்படுத்தினால்தான் தேவையற்ற செலவுகளுக்கு மக்கள் பணத்தைச் செலவு செய்யமாட்டார்கள், பணத்துக்கான தேவை குறையும், இதனால் விலையும் கட்டுக்குள் வரும்.

மக்களுக்கு வாங்கும் சக்தி இருந்தாலும், தக்காளி விலை கிலோ 100 ரூபாயாக உயர்ந்தால், உடனே ஓடிப்போய் வாங்க மாட்டார்கள். விலை சற்று குறையட்டும், மாற்றாக எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்துவோம் அல்லது புளியை மேலும் கரைத்து ஊற்றுவோம் என்றுதான் முயற்சிப்பார்கள். தேவை குறைந்தால் விலை சற்று குறையும். பிறகு, தக்காளி வரத்து அதிகரிக்கும்போது மேலும் குறையும். பதுக்கலால் விலை உயர்கிறது என்றால் அரசுகள் எடுக்கும் நடவடிக்கையால் விலை குறையும். இந்த அடிப்படையில்தான் பொருளாதார நிபுணர்கள், விலைவாசி அதிகரிக்கும்போது வங்கிகள் தரும் கடனுக்கான வட்டி விகிதத்தைச் சற்றே உயர்த்த வேண்டும் என்பார்கள். ஆனால், எர்டோவான் இதற்கு நேர்மாறாகக் கருதுகிறார்.

வட்டி விகித்தைக் குறைத்தால், பணத்தை அதிகம் பேர் வங்கிகளிடமிருந்து கடனாகப் பெறுவார்கள். தொழிலில் முதலீடு செய்வார்கள், வியாபாரத்துக்குப் பயன்படுத்துவார்கள். உற்பத்தியும் ஏற்றுமதியும் பெருகும், மக்களுடைய வேலை வாய்ப்பும் அதிகரிக்கும், பொருளாதாரம் மீட்சி அடையும் என்று கருதுகிறார். இவருடைய அறிவுரையை ஏற்க மறுத்ததால், துருக்கியின் மத்திய வங்கித் தலைவர்கள் (ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிக்கு இணை) 3 பேர் கடந்த 2 ஆண்டுகளில் வேலையை விட்டுப்போக வேண்டியிருந்தது. இப்போது, துருக்கியில் பணவீக்க விகிதம் 21 சதவீதம் என்று அரசு தெரிவிக்கிறது. ஆனால், பொருளாதார நிபுணர்களும் நிதித் துறையைச் சேர்ந்தவர்களும் இது உண்மையில் 58 சதவீதம் என்கின்றனர். அதுதான் உண்மை என்பது சந்தைகளைக் கவனிக்கும்போது தெரிகிறது. குடும்பத் தலைவிகள் இறைச்சி வாங்குவதை நிறுத்திவிட்டார்கள். ரொட்டியைக்கூட 2 நாளைக்கு ஒரு முறைதான் வாங்குகிறார்கள். மக்கள் தங்களிடமிருந்த லிராவைக் கொடுத்துவிட்டு அமெரிக்க டாலர்களை விலைக்கு வாங்குகிறார்கள். அதிகப் பணம் வைத்திருப்பவர்கள் தங்கமாக மாற்றிக்கொள்கின்றனர். ஒரு லிரா விலை குறைவாகத் தருகிறார்கள் என்பதால் பேக்கரிகளிலோ, கடைகளிலோ ரொட்டி வாங்காமல் சில்லறை வியாபாரத்தில் இருக்கும் கியோஸ்குகளில் நீண்ட வரிசையில் நின்று ரொட்டி வாங்குகிறார்கள்.

கடைகளில் வியாபாரம் படுத்துவிட்டது. தொழிற்சாலைகளில் பல, உற்பத்தியை குறைத்துக்கொண்டே வருகின்றன. காரணம், துருக்கி தன்னுடைய தேவைகளுக்கு 70 சதவீதத்துக்கும் மேல் இறக்குமதியையே நம்பியிருக்கிறது. செலாவணியான லிராவின் மதிப்பு குறைந்துவிட்டதால், அதிகமாக டாலர் தர வேண்டியிருக்கிறது. அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்தாலும் உற்பத்தியாவதை உள்நாட்டில் வாங்க மக்களால் முடியாது. வெளிநாடுகளில் விலை அதிகம் என்று வாங்க மாட்டார்கள். எனவே, நிலைமை மாறும்வரையில் உற்பத்தியை நிறுத்திவைப்பதே நல்லது என்று முடிவெடுத்துவிட்டார்கள். மருந்து உற்பத்தித் துறையில் உள்ள நிறுவனங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட உற்பத்தியை நிறுத்திவிட்டன.

இறக்குமதியாகும் மூலப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. எரிபொருட்களின் விலையும் அதிகமாகிவிட்டதால், போக்குவரத்துத் துறையும் முடங்கிக்கொண்டிருக்கிறது. வீட்டு வாடகையை உரிமையாளர்கள் பல மடங்காக உயர்த்தி வருகின்றனர். சொந்த வீடு வாங்கும் ஆசை மக்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு அமெரிக்க டாலருக்கு 13.70 லிரா தர வேண்டியிருக்கிறது. யூரோ ஒன்றுக்கு 15.50 தர வேண்டியிருக்கிறது. தான் சொல்வதைக் கேட்பவரை புதிய நிதியமைச்சராக எர்டோவான் நியமித்துவிட்டார். ஆனால், அவர் சொல்வதைப் பொருளாதாரச் சந்தை கேட்குமா என்று பார்க்க வேண்டும்.

துருக்கி அதிபர் ரெசிப் தய்யிப் எர்டோவான்

உலக அரங்கில் துருக்கியின் நிலைமை விநோதமாகப் பார்க்கப்படுகிறது. அனைவராலும் ஏற்கப்பட்ட பொருளாதாரக் கருத்தை நிராகரித்துவிட்டு, தன்னுடைய உத்தரவுப்படி நடக்க வேண்டும் என்று நெருக்குதல் தரும் அதிபரை உலகம் இதுவரை கண்டதே இல்லை. தொடர்ந்து 19 ஆண்டுகளாக முக்கியப் பதவிகளில் இருப்பதால், எர்டோவான் சர்வாதிகாரியாகிவிட்டார் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அனைவரும் சேர்ந்து அமைத்துள்ள எதிர்க்கட்சி கூட்டணிக்கு மக்களிடையே ஆதரவு பெருகி வருவதும், எர்டோவானுக்கு ஆதரவு சரிந்து வருவதும் கருத்துக் கணிப்புகளில் தெரியவருகிறது. அதிபர் பதவிக்கான தேர்தல் 2023-ல் நடைபெற வேண்டும். நாட்டின் பொருளாதாரம் மோசமாகிக் கொண்டிருக்கிறது, பதவி விலகி தேர்தலைச் சந்தியுங்கள் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. நாட்டின் அரசியல் சட்டப்படி 2023-ல் தான் தேர்தல் நடக்கும், அதற்கு முன்னால் அல்ல என்று அதிபர் கூறிவிட்டார்.

8.3 கோடி மக்கள் தொகையுள்ள நாட்டுக்கு இன்னொரு ஆபத்தும் வரவிருக்கிறது. படித்தவர்கள், சொந்தமாகத் தொழில் செய்யக்கூடியவர்கள் அனைவரும் சரிந்துவரும் பொருளாதாரத்திலிருந்து தப்பிக்க வேறு நாடுகளில் வேலைதேட முடிவு செய்துள்ளனர். இதனால் பொறியாளர்கள், மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில் துறை நிர்வாகிகள், பேராசிரியர்கள் வேறு நாடுகளுக்குக் குடிபெயரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அரிய மனித வளம் வெளியேறினால், அதன் இழப்பை லிரா கணக்கிலோ டாலர் கணக்கிலோ அளவிட முடியாது. விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் ஆங்காங்கே திரண்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். எதிர்க்கட்சிகள் அரசிடம் மனு அளிக்கின்றன, கூட்டம் நடத்துகின்றன. எர்டோவான் ஆட்சிக்கு வந்த புதிதில் பொருளாதார நிர்வாகத்தில் சிறந்து விளங்கினார். மக்கள் அதனாலேயே அவரைத் தொடர்ந்து ஆதரித்தனர். இந்த திடீர் மன மாற்றம் அவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE