வேலைக்குத் திரும்ப மாட்டோம்!

By ராணிப்பேட்டை ரங்கன்

பெருந்தொற்றின் பரவல் உலகை வெவ்வேறு விதங்களில் பாதித்து வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் குறித்து அதிகம் தெரியாமலேயே எல்லோரும் அஞ்சத் தொடங்கிவிட்டனர். பொதுமுடக்கம் என்ற புதிய நடைமுறையைக் கண்ட உலகம், அழிவுக்காலம் நெருங்கிவிட்டது என்ற அச்சத்தை ஆழ்மனதில் புதைத்து வைத்துக்கொண்டுள்ளது. அதன் துணை விளைவுகள் வெவ்வேறு விதங்களாக வெளிப்படுகின்றன.

வீடுகளிலிருந்தே வேலை செய்யப் பணிக்கப்பட்டவர்கள் அலுவலக நேரம் என்றில்லாமல் நினைத்தபோதெல்லாம் வேலை செய்து களைத்தார்கள். பள்ளிக்கூட, கல்லூரி மாணவர்கள் இணையதளத்தைத் திறந்து பாடம் படிக்கத் தொடங்கி, ஆசிரியரால் நம்மைக் கண்காணிக்க முடியாது என்று தெரிந்தவுடன் பராக்கு பார்க்கவும் வேறு விளையாட்டுகளில் ஈடுபடவும் தலைப்பட்டனர் (எல்லோரும் அப்படி அல்ல. விதிவிலக்கானவர்களைப் பற்றித்தான் சொல்கிறேன்). வீடுகளில் இருந்தவர்களால் குழந்தைகளை எந்நேரமும் கண்காணிக்க முடியாமல், அவர்கள் அக்கறையுடன் படிப்பதாக நினைத்து தங்களுடைய வேலைகளில் ஆழ்ந்தனர். (வேறென்ன, கதவுகளைச் சாத்திக்கொண்டு ஹாலில் சீரியல் பார்ப்பது).

படிப்பதற்கு தந்த கணினியையும் பிற சாதனங்களையும் குடும்பத்தார் அறியாமல் பொழுதுபோக்குகளுக்குத் திருப்பி அதிலேயே பலர் தோய ஆரம்பித்துவிட்டனர். அதிகாரிகளும் நிர்வாகிகளும் தொடர்ந்து கட்டளைகளையும் வழிகாட்டல்களையும் பிறப்பித்து வேலை செய்யக்கூட நேரம் தராமல் எரிச்சலூட்டி பதிலுக்கு அதிருப்தியையே சந்தித்தார்கள். அதிகம் விளக்கிய அதிகாரிகளிடம் ஊழியர்கள் அதிக சந்தேகங்களைக் கேட்டு பதிலுக்கு எரிச்சலூட்டியது தனிக்கதை. நாம் சரியாகத்தான் வேலை செய்கிறோமா என்ற சந்தேகம் ஊழியர்களுக்கும், நாம் சரியாகத்தான் வேலை வாங்குகிறோமா என்ற அச்சம் இடைநிலை நிர்வாகிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. சரி நிலைமை மீண்டு, அலுவலகம் திறந்தால் முதல் ஆளாகப் போய்விடுவது என்ற முடிவோடு பலர் இருக்கின்றனர். இவையெல்லாம் பொதுவான கண்ணோட்டங்கள்.

ஆனால், அமெரிக்காவிலோ வேலையை விட்டவர்கள் அல்லது வேலையிலிருந்து விலக்கப்பட்டவர்கள் மீண்டும் வேலைக்குப் போவது குறித்து கவலைப்படவும் இல்லை, முடிவுக்கு வரவும் இல்லை. வாழப்போவது எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்தான், எதற்கு வேலைக்குப் போய் நேரத்தை வீணாக்க வேண்டும் என்று அந்நாட்டினர் பலருக்கும் தோன்றிவிட்டதாம். வயதானவர்கள், ஓய்வுபெறும் நிலையில் இருப்பவர்களுக்குத் தோன்றினால் பரவாயில்லை, நடுத்தர வயதில் இருப்பவர்கள்கூட இப்படிச் சிந்திக்கிறார்களாம். நோயைவிட இந்த மனநிலை கொடூரமாக இருக்கிறது (அதுமட்டுமல்ல, பெருந்தொற்று மாதிரியே அதுவும் பரவிவிட்டது!).

அமெரிக்க தொழில்-வர்த்தக சபை சமீபத்தில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. 529 அமெரிக்கர்களிடம் சில கேள்விகளைக் கேட்டு பதில்களை வாங்கியது. அவர்கள் அனைவரும் பெருந்தொற்றுக் காலத்தில் வேலையிழந்தவர்கள். இன்னமும் வேலைக்குத் திரும்பவில்லை. அவர்களில் 53 சதவீதம் பேர்தான் வேறு வேலை தேடுவதாகக் கூறினார்கள். மற்றவர்களோ, ‘அப்படியெல்லாம் வேலைக்காக அலையவில்லை, பார்க்கலாம்’ என்றனர். அடுத்த ஆண்டுக்கு (2022) முன்னால் வேலைக்குத் திரும்பும் எண்ணமில்லை என்று 65 சதவீதம் பேர் கூறிவிட்டனர். இந்த மாதத்திலிருந்து விடுமுறைப் பருவம். அடுத்து புத்தாண்டு. அதற்குப் பிறகு எப்போது வேலைக்கு வருவது என்பதை அவர்கள் இன்னமும் முடிவு செய்யவில்லையாம். கோவிட்-19 இன்னமும் தொடர்வதால், வேலைக்குப் போக விரும்பவில்லை என்றனர் பலர். அதில் அதிகம் பேர் பெண்கள். குடும்பத்தைப் பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இருந்துவிட முடிவு செய்துள்ளனர்.

வேலைக்குப் போகாமல் செலவை எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, கையிருப்புகளையும் வங்கிச் சேமிப்புகளையும் எடுத்து செலவழிப்பதாகப் பலர் கூறியிருக்கிறார்கள். பெருந்தொற்றுக் காலத்தில் சில மாதங்கள் வேலை செய்தபோது கிடைத்த ஊக்கத் தொகை இப்போது கை கொடுக்கிறது என்றனர் சிலர். வேறு சிலர் எதிர்கால முதலீடுகளுக்காக, செலவுகளுக்காக வைத்திருந்த பெருந்தொகை பயன்படுகிறது என்றனர். 8 சதவீதம் பேர் இனி வேலைக்குப் போகவே போவதில்லை என்றனர். இப்படிப்பட்டவர்களை மீண்டும் வேலைக்கு அழைக்க நிறுவனங்கள் புதிய சலுகைகளை யோசித்தாக வேண்டும்.

மீண்டும் வேலைக்கு வந்தாலே ஆயிரம் டாலர் ஊக்கத் தொகை என்றால் சிலர் போவார்களாம். ஊழியர்களின் விருப்பத்துக்கேற்ப வேலை நேரத்தை மாற்றியமைப்பது, வீட்டிலிருந்தே செய்யும்படியான வேலை என்றால் அவர்களுடைய விருப்பப்படி செய்யட்டும் என்று அனுமதிப்பது, வீட்டு வாடகை, வாகனச் செலவு ஆகியவற்றுக்குக் கூடுதலாக பணம் தருவது அல்லது வாகன வசதி செய்து தருவது, அலுவலகத்தில் சிற்றுண்டி, உணவு, பானங்களை நல்ல தரத்தில் அளிப்பது, அலுவலகத்துக்குள்ளேயே ஓய்வறைகளைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பது என்று பலவற்றையும் அமெரிக்க நிர்வாகங்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டன. நாம் கொடுத்தால்தான் வேலை என்று இறுமாந்திருந்த பல நிறுவனங்கள், ஊழியர்கள் வந்தால்தான் வேலை என்பதைப் புரிந்துகொள்ளவும் பெருந்தொற்று உதவியிருக்கிறது.

அதைவிட முக்கியம் பல பேர், வேலையில்லாமல் வீட்டில் இருப்பதற்கும் செலவுகளைச் சந்திப்பதற்கும் உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பழகிவிட்டார்கள். வீண் செலவுகளைக் குறைத்துவிட்டால் அடிப்படைச் செலவுகள் இவ்வளவுதான். இதற்காக மற்றவர்களிடம் அடிமைப்பட வேண்டியதில்லை, நம்முடைய ஆற்றலுக்கு உட்பட்ட புதிய வேலை – அதிக சம்பளத்தில் – கிடைத்தால் அதை முயன்று பார்ப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். எனவே பழைய, வேலையில் அனுபவமுள்ள தொழிலாளர்கள் அல்லது ஊழியர்கள் மீண்டும் அதே எண்ணிக்கையில் கிடைப்பார்கள் என்ற நிச்சயமில்லாமல் அமெரிக்கா திணறுகிறது. ‘நான் வேலைபார்த்த துறையைவிட்டுவிட்டு வேறு துறையில் வாய்ப்பு இருக்கிறதா என்று தேடுகிறேன்’ என்று 85 சதவீதம் பேரும், வேலையை மாற்றிக்கொண்டால் என்ன என்ற எண்ணத்தைப் பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கிறது என்று 97 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். (எஞ்சிய 3 சதவீதம் அரசியல்வாதிகளாக இருப்பார்களோ!)

அமெரிக்காவில் இப்போது 1.04 கோடி வேலையிடங்கள் காலியாக இருக்கின்றன. அமெரிக்கர்களில் 76 லட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வேலையை விட்டவர்கள் மட்டும் 34 லட்சம் பேர். அவர்கள் ஓய்வுபெறும் வயதை நெருங்கியவர்கள். அவர்கள் இனி வேலை தேடி வரவே மாட்டார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது.

பிரிட்டனில் சமீபத்தில் பெட்ரோல்-காசோலின் பங்குகளுக்கு முன்னால் பெருங்கூட்டம் அலைபாய்ந்தது. டேங்கர் லாரிகளை ஓட்ட டிரைவர்கள் தேவை. ஆனால் டிரைவர்களுக்குப் பற்றாக்குறை என்று செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்ட சிறப்பு செய்தித் தொகுப்புதான் அதற்குக் காரணம். அது உண்மையாகவே இருந்தாலும், ஏதோ நாளையே பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுவிடும் என்று அஞ்சி அனைவரும் வாகனங்களுடன் புறப்பட்டுவிட்டனர். அடுத்து, வரும் கிறிஸ்துமஸுக்கு மதுபானங்கள் கிடைக்காது, மதுபான வாகனங்களை ஓட்ட டிரைவர்கள் இல்லை என்று இன்னொரு செய்தித் தொகுப்பும் வெளியாகியிருக்கிறது. நம் நாட்டில் கூட ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியாகும் வரி விளம்பரங்களைப் பார்த்தால் அடேயப்பா, இத்தனை வேலைகளா காலியாக இருக்கின்றன, எப்படி இங்கே வேலையில்லாத் திண்டாட்டம் என்று சொல்கிறார்கள் என்ற மலைப்பே ஏற்படுகிறது. அந்தந்த வேலைக்கு தொழில் துறை நிர்ணயிக்கும் ஊதியங்களால்தான் இந்த முரண்பாடு. தொழில் நிறுவனங்கள் ஊதியங்களையும் படிகளையும் தாராளமாக வழங்கினால் தகுதியுள்ளவர்கள் நிறையப் பேர் கிடைப்பார்கள். அது கிடைக்காதபோது, அனுபவமில்லாதவர்களும் திறன் இல்லாதவர்களும்தான் வந்து இடத்தை நிரப்புவார்கள்.

பெருந்தொற்றுக் காலம் பலரை மெய்யியல் சிந்தனைகளிலும் ஆழ்த்தியிருக்கிறது. அதனால்தான் ‘வாழ்க்கையே சில நாள் - அதிலேன் வறுத்தெடுக்கும் வேலைக்குப் பல நாள்’ என்று ஒதுங்குகிறார்கள் போலும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE