தடுப்பூசி போட்டுக்கொண்டால் பாலியல் விடுதிகளில் சலுகை

By காமதேனு

கரோனா தடுப்பூசி இலக்கை எட்டுவதற்காக, பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதைக் கேள்விப்பட்டிருப்போம். ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, பாலியல் தொழிலில் சலுகைகளை அறிவித்திருக்கிறார்கள்.

உலக நாடுகளை பீடித்த பெருந்தொற்றுப் பரவல் 2 ஆண்டுகளை முழுமை செய்ய இருக்கிறது. கரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடித்தப் பிறகும், பரவல் நின்றபாடில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் முன்வராததே இதற்குக் காரணம்.

தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு புத்தகம், சேலை, குலுக்கல் முறையில் வீட்டு உபயோகப் பொருட்கள், ’பொன்னாடை’ மரியாதை என பல பரிசுகள் மற்றும் சலுகைகளை நம் ஊர்ப் பக்கம் பார்த்திருப்போம். இதையே விதம்விதமாய் பல்வேறு ஊர்களில் செயல்படுத்தி வருகிறார்கள்.

உணவு விடுதிகளில் தள்ளுபடி, வணிக வளாகங்களில் இலவசங்கள், சேவையில் முன்னுரிமை போன்றவற்றை பெருநகரங்களில் வழங்குகிறார்கள். வட இந்திய மாநிலங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு மதுபானங்களை தள்ளுபடியில் வழங்க அரசு அதிகாரிகள் வாய்வழி உத்தரவு பிறப்பித்திருக்கின்றனர். இவை சர்ச்சையை ஏற்படுத்திய போதும், எப்படியாவது தடுப்பூசி இலக்கை அடைந்தால் சரி என்று அனைவரும் திருப்தி அடைந்துள்ளனர்.

ஆனால், ஐரோப்பிய நாடுகள் ஒரு படி மேலே சென்றவர்களாக தங்களது திறந்த கலாச்சாரத்துக்கு தோதாக, பாலியல் சலுகைகளை கடைவிரித்துள்ளனர். இதன்படி தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு, பாலியல் விடுதிகள் நேரம், கட்டணம் ஆகியவற்றில் சலுகைகள் அறிவித்துள்ளன. அங்கே பாலியல் அங்கீகரிக்கப்பட்ட தொழில் என்பதால், அதிகாரபூர்வமாக அவற்றை விளம்பரப்படுத்தியும் வருகிறார்கள். இந்த உத்தியை தொடங்கி வைத்த பெருமை ஆஸ்ட்ரியாவையே சேரும்.

கரோனா பரவலின் 2-ம் அலையின்போது ஆரம்பமான இந்த பாலியல் தொழில் சலுகைகள், தற்போது ஒமைக்ரான் பரவலின் மத்தியில் மீண்டும் அதிகரித்துள்ளன. கரோனா பாதுகாப்பு நடைமுறைகளுக்கு மத்தியில் சலுகைகளை எப்படி துய்க்கிறார்கள் என்பது குறித்து விரிவான தகவல்கள் ஏதும் இல்லை.

இந்த கரோனா இன்னும் எங்கெல்லாம் கொண்டுபோய் நிறுத்துமோ தெரியவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE