ஒமைக்ரான்: அமெரிக்காவின் புதிய வியூகங்கள்

By காமதேனு

அமெரிக்காவில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் பெருந்தொற்றுக்கு எதிரான போருக்குத் தயாராகிறது அந்நாட்டு அரசு. அதற்கான செயல்திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருக்கிறார். ஒமைக்ரானை எதிர்கொள்ள பொதுமுடக்கம் தேவையில்லை என ஏற்கெனவே அறிவித்திருந்த பைடன், தடுப்பூசிகளையும் பூஸ்டர் டோஸ்களையும் அதிகரிப்பது, கரோனா பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பன உள்ளிட்ட வழக்கமான நடவடிக்கைகளை விஸ்தரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

அதன்படி, தகுதியுள்ள 11 கோடிப் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் நடவடிக்கைக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படும். குடும்பங்களுக்குத் தடுப்பூசி போடும் கிளினிக்குகள் திறப்பதற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. பெற்றோர், குழந்தைகள் என முழுக் குடும்பத்துக்கும் ஒரே இடத்தில் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடு அது. அமெரிக்காவில், 12 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 5 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட கடந்த மாதம் அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியது. இதனால், குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதில் அதிக முன்னேற்றத்தை அமெரிக்கா அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து, குழந்தைகளை வீட்டில் அடைப்பதற்குப் பதிலாக பள்ளிகளில் கல்வியைத் தொடரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அத்துடன், வீட்டிலேயே இலவசமாகக் கரோனா பரிசோதனை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மருத்துவக் காப்பீடு செய்திருப்பவர்கள், காப்பீடு இல்லாதவர்கள் என எல்லோருக்கும் பிரத்யேகமான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

குளிர்காலத்தில் சளிக் காய்ச்சல் உள்ளிட்டவை அதிகரிக்கும் என்பதால், ஒமைக்ரான் தொற்றுப் பரவல் அமெரிக்க அரசுக்கு இன்னொரு சவாலாகியிருக்கிறது. அமெரிக்காவுக்கு வரும் பயணிகளுக்குப் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும். அதன்படி, புறப்படுவதற்கு முந்தைய நாளில் கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் ரிசல்ட் எனத் தெரிந்தால் மட்டுமே, பயணிகள் அமெரிக்கா செல்லும் விமானங்களில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

பொருளாதார நடவடிக்கைகளுக்குத் தடை இருக்காது என்றும், பெருந்தொற்றுக் கட்டுப்பாடுகளுடன் வணிக நிறுவனங்கள் வழக்கமாகச் செயல்படும் என்றும் அமெரிக்கா அறிவித்துவிட்டது. எனினும், ஒமைக்ரான் யுகத்தில் அரசு அதை வெற்றிகரமாக எப்படிச் செயல்படுத்தும் எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE