தொடரும் தடுப்பூசி நிறவெறி; குமுறும் ஆப்பிரிக்க நாடுகள்!

By சந்தனார்

ஒமைக்ரான் பரவல் தொடங்கியதும் உலகின் பார்வை ஆப்பிரிக்க நாடுகளின் பக்கம் திரும்பியிருக்கிறது. அதில் கரிசனத்தைவிடவும் அச்சமும் வெறுப்பும் அதிகம் இருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. உண்மையில், முன்னேறிய நாடுகளின் சுயநலத்தாலும் அலட்சியத்தாலும்தான் இந்த நிலைக்கு ஆப்பிரிக்க நாடுகள் தள்ளப்பட்டிருக்கின்றன.

முன்னேறிய நாடுகள் பலவற்றில், மக்களுக்கு 2 தவணைகள் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் முதல் தவணை தடுப்பூசி கூட இன்னமும் செலுத்தப்படாமல் மக்கள் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் ‘தடுப்பூசி நிறவெறி’ எனும் பதத்தைப் பயன்படுத்தி நமீபிய அதிபர் ஹேஜ் ஜி கெய்ங்காப் கூறிய வார்த்தைகள் மீண்டும் கவனம் பெறுகின்றன. இதே பதத்தை உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ராஸ் அதானமும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்குத் தடுப்பூசி விஷயத்தில் ஏழை நாடுகள் இன்னமும் கவலைக்குரிய நிலையில் இருக்கின்றன.

கரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரத் தொடங்கிய காலகட்டத்திலேயே, ஏழை நாடுகளைவிட தடுப்பூசி மருந்துகளைப் பணக்கார நாடுகளே அதிகமான எண்ணிக்கையில் வாங்கிக் குவிப்பதாக, பருவநிலைச் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க் போன்றோர் சுட்டிக்காட்டினர்.

இன்னும் சொல்லப்போனால், இன்றைக்கு ஆப்பிரிக்க நாடுகளை அசூசையாகப் பார்க்கும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான், ஆப்பிரிக்காவில் கரோனா பரவலை அதிகரிக்கச் செய்தனர். இத்தாலியிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளே கென்யா போன்ற நாடுகளில் கரோனா வைரஸ் பரவலுக்கு முக்கியக் காரணம் எனக் கடந்த ஆண்டே செய்திகள் வெளியாகின. எனினும், தடுப்பூசி விஷயத்தில் ஆப்பிரிக்கர்கள் கைவிடப்பட்டிருப்பதுதான் இன்றைய நிலைக்குக் காரணம்.

கடந்த ஆண்டு, கரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மருந்து நிறுவனங்களிடமிருந்து நேரடியாகவே தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டதால், பணக்கார நாடுகள் அதைப் பயன்படுத்தி தடுப்பூசிகளை வாங்கிக்குவித்தன. இதன் காரணமாக ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட ஏழை நாடுகள், 2022-ல் தான் போதுமான தடுப்பூசிகளைப் பெற முடியும் எனும் நிலை உருவானது. சில நாடுகளுக்கு 2024-ல்தான் தடுப்பூசிகள் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டது. இன்றைக்கு ஒமைக்ரான் காரணமாகப் பல நாடுகளின் பயணத் தடைக்குள்ளாகியிருக்கும் தென்னாப்பிரிக்கா, அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை, ஐரோப்பிய நாடுகளைவிட இரண்டரை மடங்கு அதிகமான விலை கொடுத்து வாங்கும் நிலையில்தான் இருந்தது.

இந்நிலையில், இந்தியா போன்ற நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தடுப்பூசிகளை வழங்க முன்வந்தன. இந்தியா சார்பில் மட்டும், 41 ஆப்பிரிக்க நாடுகளுக்கு 2.5 கோடி தடுப்பூசிகளை இந்தியா வழங்கியிருக்கிறது. ஆப்பிரிக்கக் கண்டத்துடன் நல்லுறவைப் பேணும் இந்தியா, 2008 முதல் ஆப்பிரிக்க நாடுகளின் மேம்பாட்டில் கூடுதல் முனைப்பு காட்டிவருகிறது. ஆனால், ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு நல்கப்பட்டால்தான் ஆப்பிரிக்க நாடுகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

2050-ம் ஆண்டுவாக்கில், உலகின் மக்கள்தொகையில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் பங்கு 17 முதல் 25 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகரமயாக்கல் அதிகரித்துவரும் ஆப்பிரிக்காவில் அடுத்து வரும் ஆண்டுகளில் இளம் தலைமுறையினரின் எண்ணிக்கை அதிகரித்து, வேலைவாய்ப்புக்கான தேடலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், ஒமைக்ரான் போன்ற சவால்களும், தடுப்பூசித் தட்டுப்பாடு போன்ற முட்டுக்கட்டைகளும் ஆப்பிரிக்கர்களைக் கவலையில் ஆழ்த்தியிருக்கின்றன.

கடந்த ஆண்டு மட்டும், கென்யாவில் 40 லட்சம் பேர் வேலைவாய்ப்பில்லாமல் தவிப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. ஏறத்தாழ ஆப்பிரிக்காவின் எல்லா நாடுகளிலும் இதே நிலைமைதான். எச்.ஐ.வி தொடங்கி எபோலா வரை ஏகப்பட்ட பாதிப்புகளைச் சந்தித்துவரும் ஆப்பிரிக்கா, கடந்த ஆண்டே கரோனா பரவலால் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. தற்போது ஒமைக்ரான் சிக்கலால் மேலும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE