லத்தீன் அமெரிக்காவை வாட்டும் பட்டினி!

By ஆர்.என்.சர்மா

‘தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றார் பாரதி. எவருமே பட்டினியில் வாடிவிடாத வகையில் பசிப் பிணியை நீக்க வேண்டும் எனும் அக்கறையில் மகாகவி சொன்ன வார்த்தைகள் அவை. ஆனால், லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், கரீபியக் கடலோர நாடுகளிலும் கோடிக்கணக்கானோர் போதிய உணவின்றி பட்டினியில் வாடுவதுதான் பெரும் துயரம்.

இந்நாடுகளில், கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பட்டினிக் கொடுமை வாட்டுகிறது. 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்நாடுகளில் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-ம் ஆண்டுக்கான உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து பற்றிய பிராந்திய ஒட்டுமொத்தக் கண்ணோட்டம் என்கிற அறிக்கை இதைத் தெரிவிக்கிறது. ஐநாவுடன் இணைந்து செயல்படும் 5 நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை இது.

இந்நாடுகளில், சுமார் 6 கோடிப் பேர் போதிய உணவு இல்லாமல் தவிக்கின்றனர். கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு 1.38 கோடிப் பேர் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளனர். பட்டினியால் வாடுபவர்களில் பெண்களே அதிகம். ஆண்களில் 32 சதவீதம் பேர் உணவில்லாமல் வாடும் நிலையில், பெண்களில் 41.8 சதவீதம் பட்டினி கிடக்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளில் பட்டினி கிடக்கும் பெண்களின் எண்ணிக்கை 6.4 சதவீதத்திலிருந்து 9.6 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் கரீபியக் கடலோர நாடுகளிலும் (மேற்கிந்தியத் தீவுகள்) 9 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் பட்டினியால் வாடுகின்றனர். ஐநா சபையின் உணவு, வேளாண்மை அமைப்பைச் சேர்ந்த பிராந்திய பிரதிநிதி ஜூலியோ பெர்டேகு இதை உறுதிப்படுத்தியிருக்கிறார். 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020-ல் பட்டினி கிடப்போரின் எண்ணிக்கை 79 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அவர் கவலை தெரிவித்திருக்கிறார். பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றால் ஏற்கெனவே பாதிப்படைந்திருந்த மக்கள், கோவிட் 19 பெருந்தொற்றால் மிக மோசமாக நலிவடைந்துவிட்டனர். வேலையிழப்பு, ஊதிய இழப்பு ஆகியவற்றால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் ஆழ்ந்துள்ளனர்.

லத்தீன் அமெரிக்க நாடுகள் என்று அழைக்கப்படும் தென் அமெரிக்க நாடுகளில் பிரேசில்தான் பெரியது. அதிக மக்கள் தொகையும் கொண்டது. அங்கு மட்டும் 1.90 கோடிப் பேர், பெருந்தொற்று காலத்தில் போதிய உணவின்றி பட்டினியில் வாடுவதை இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதி அதாவது, 11.70 கோடிப் பேர் ஏதோ ஒரு வகையில் உணவு கிடைக்காத நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இதை வேறுவிதமாகச் சொல்வதானால் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் கரீபியன் கடலோர நாடுகளிலும் 10-க்கு 4 பேர், உணவுப் பற்றாக்குறையால் 2020-ல் அவதிப்பட்டனர். 2021-ல் இந்த அவலம் மேலும் அதிகரித்துவிட்டது. உலகின் பிற பகுதிகளைவிட இந்தப் பகுதியில்தான் பட்டினி தீவிரமாகியிருக்கிறது.

கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட பிறகு ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள், குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. வாழ்வாதாரங்கள் குலைந்துவிட்டதால் சுகாதாரமான, சத்துள்ள உணவு கிடைப்பது ஏழைகளைப் பொறுத்தவரை அபூர்வமாகி வருகிறது. நகர்ப்புறங்களில் பசியால் வாடும் ஏழைகள், இறைச்சிக்கூடங்களில் வெட்டி எறிந்த கால்நடைகளின் எலும்புகளிலும் கறியிலிருந்தும் சாப்பிட ஏதாவது மிஞ்சுமா என்று தேடும் காணொலிக் காட்சிகள் மனதை உருக்குகின்றன.

அதே சமயம் வயதுக்கேற்ற உயரம், வயது, உயரத்துக்கேற்ற எடை ஆகியவற்றில் குழந்தைகள் தென் அமெரிக்க நாடுகளிலும் கரீபியன் கடலோர நாடுகளிலும் மேம்பட்டுள்ளனர். அரசுகள் மேற்கொண்ட ஊட்டச்சத்து உணவுத் திட்டங்கள் இதற்குக் கை கொடுத்துள்ளன.

ஏழைக் குழந்தைகள் பசியால் வாடி மெலிந்திருக்கும் அதே வேளையில், ஓரளவு வசதி படைத்தவர்களின் குழந்தைகள் தவறான உணவுப் பழக்கத்தால் சக்கை உணவுகளை உண்டு உடல் பருமனுக்கு ஆளாகின்றனர். லத்தீன் அமெரிக்காவிலும் கரீபியன் நாடுகளிலும் 4 பேரில் ஒருவர், உடல் பருமனுக்கு ஆளாகியிருக்கிறார். மொத்தம் 10.60 கோடிப் பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆக்ஸ்பாம் ஜூலை அறிக்கையின்படி, உலகில் ஒவ்வொரு நிமிடமும் பட்டினி காரணமாக 11 பேர் இறக்கின்றனர். பஞ்சம் போன்ற நிலையை எதிர்கொள்வோர் எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 6 மடங்காகியிருக்கிறது.

பட்டினியிலிருந்து ஜகத்தைக் காக்க, உலக நாடுகளின் தலைவர்கள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டிய தருணம் இது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE