சலுகைகள்... அழுத்தங்கள்: தந்திரம் செய்ததா சவுதி?

By சந்தனார்

கடும் ஏமாற்றத்தில் இருக்கிறது ஐநா மனித உரிமைகள் கவுன்சில் (யூஎன்எச்ஆர்சி). ஏமன் நாட்டின் மீது சவுதி அரேபியாவும் இன்ன பிறரும் நிகழ்த்திய போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையை நீட்டிப்பது தொடர்பாக, அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட ஐநா மனித உரிமை கவுன்சில் தீர்மானத்தைத் தோற்கடிக்க, சில நாடுகளிடம் சவுதி அரேபியா ‘லாபி’ நடத்தியதாக தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அந்தத் தீர்மானத்தை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 18 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. 12 நாடுகள் வாக்களிக்காமல் தவிர்த்தன. தீர்மானத்தை எதிர்த்து, ரஷ்யா, பஹ்ரைன், சீனா, கியூபா, பாகிஸ்தான் உள்ளிட்ட 21 நாடுகள் வாக்களித்திருந்தன. இதனால், ஏமன் மண்ணில் நடந்த போர்க்குற்றங்களை, தொடர்ந்து விசாரிக்கும் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. 2006-ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு கடந்த 15 ஆண்டுகளில் கொண்டுவந்த தீர்மானங்களில் இது முதல் தோல்வி எனக் கருதப்படுகிறது.

இப்படியான தீர்மானங்களால், பாதிக்கப்பட்ட நாடுகளுக்கோ மக்களுக்கோ நீதி கிடைத்துவிட்டதாகச் சொல்லிவிட முடியாதுதான். ஆனால், அந்தத் தீர்மானத்தைத் தோல்வியுறச் செய்ய இந்தோனேஷியா, டோகோ போன்ற நாடுகளுக்கு ஒருபக்கம் அழுத்தங்களையும் மறுபக்கம் சலுகைகளையும் சவுதி அரேபியா வெளிப்படையாகவே தந்திருப்பதுதான் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தனது சாதுரியமான காய்நகர்த்தல்கள் மூலம், சத்தமில்லாமல் சவுதி அரேபியா காரியம் சாதித்துக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக, ‘தி கார்டியன்’ இதழுக்கு மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், அதிகாரிகளும் தெரிவித்திருக்கும் தகவல்கள், ஒரு தனி நாடு எப்படியெல்லாம் தந்திரங்கள் செய்து தன் மீதான கறையைப் போக்கிக்கொள்ள முயலும் என்பதற்கான சான்றுகள் எனலாம்.

அரேபியத் தீபகற்ப நாடுகளில் ஒன்றான ஏமனின் வரலாற்றில், பிரிட்டனின் ஆதிக்கத்தின்கீழ் இருந்த காலம் தொட்டு, ஏகப்பட்ட ரத்தச் சுவடுகள் பதிந்திருக்கின்றன. ஆட்டமன் பேரரசின் அங்கமாக இருந்து, பின்னர் வடக்கு, தெற்கு எனப் பிரிந்து கிடந்த தேசம் அது. அங்கு வன்முறை, சதிகள் மூலம் அரசைக் கவிழ்ப்பது இயல்பாக நடக்கும் விஷயம். ஒருகட்டத்தில் ஜனநாயகம் அந்தப் பிராந்தியத்தில் மலர்ந்தது. 1990-ல் ஆட்சிக்கு வந்த அலி அப்துல்லாசாலேதான் ஒருங்கிணைந்த ஏமனின் முதல் அதிபர். அமெரிக்காவின் பாசத்துக்குரிய சாலே, ஜிகாதிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை எடுத்துவந்தார்.

அந்தக் காலகட்டத்தில், ‘பிலீவிங் யூத்’ எனும் பெயரில் ஒரு கிளர்ச்சி அமைப்பைத் தொடங்கிய ஹுசைன் பத்ரெதீன் அல்-ஹவுதி எனும் அரசியல் தலைவர், ஏமனில் பெரும் மோதல்களுக்கு வித்திட்டார். அவரை அரசு அழித்தொழித்த பின்னர், அவரது தம்பி அப்துல் மாலிக் பத்ரெதீன் அல்-ஹவுதியின் தலைமையில் ‘ஹவுதிகள்’ எனும் பெயரில் ஆயுதம் தாங்கிய குழு தலையெடுத்தது. 2011-ல் நடந்த அரபு வசந்தமும் அதிபர் சாலேயின் நிம்மதியைக் குலைத்தது. இதனால், அவர் சவுதி அரேபியாவுக்குத் தப்பிச் சென்றார். துணை அதிபராக இருந்த ஆப்ட்ரப்பு மன்சூர் ஹாதி அதிபர் நாற்காலியில் அமர்ந்தார். எனினும், அவரது ஆட்சியில் ஏமன் மக்கள் திருப்தியடையவில்லை. ஆட்சிக்கு எதிராக சாலேயின் ஆதரவாளர்களும் ஹவுதிகளும் வன்முறையில் இறங்கினர். ஒருகட்டத்தில் மன்சூர் ஹாதியும் சவுதிக்குத் தப்பிச் சென்றார். ஆட்சியை ஹவுதிகள் கைப்பற்றினர்.

இதையடுத்து, சவுதி அரசுப் படைகள் ஏமனுக்குச் சென்று போராட்டங்களை அடக்கத் தொடங்கின. சன்னி பிரிவு அரசுகளும், அமெரிக்கா போன்ற நாடுகளும் சவுதிக்குத் துணைபுரிந்தன. ஷியா முஸ்லிம் ஆட்சி நடக்கும் ஈரான், போராளிக் குழுக்களுக்குத் துணை நின்றது. இதற்கிடையே, நாடு திரும்பிய மன்சூர் ஹாதி தன் பங்குக்கு ஒரு போட்டி அரசை நடத்தத் தொடங்கினார். இப்படிப் பல முனைகளில் நிகழ்ந்த மோதல்களின் விளைவாகப் பறந்துவந்த துப்பாக்கி குண்டுகளுக்கும், ஏவுகணைகளுக்கும் பலியானதில் அப்பாவி ஏமன் மக்கள்தான் அதிகம். 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். சுமார் 40 லட்சம் பேர் தங்கள் வாழிடங்களைவிட்டு இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.

அரபு நாடுகளிலேயே மிகவும் ஏழ்மையான நாடான ஏமன், இப்படிச் சிக்கித் தவிக்கும் நிலையில்தான் ஐநா மனித உரிமைகள் கவுன்சில் சார்பில், 2017 முதல் போர்க்குற்ற விசாரணைகள் தொடங்கி நடந்துவந்தன. இந்நிலையில், சுயாதீனமாக நடந்துவந்த இந்த விசாரணையை நீட்டிப்பது தொடர்பாக, அக்டோபர் 7-ல் ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில், நெதர்லாந்து ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. அதைத் தோல்வியடையச் செய்ய சவுதி பகீரதப் பிரயத்தனம் செய்திருக்கிறது என்கிறார்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்.

உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வாழும் நாடான இந்தோனேஷியாவிடம், ‘இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்காவிட்டால், இந்தோனேஷியப் புனிதப் பயணிகள் மெக்காவுக்குச் செல்ல முட்டுக்கட்டைகள் போடப்படும்’ என சவுதி எச்சரித்தது. ஆப்பிரிக்க நாடான டோகோவிடம் வேறு விதமான டீலிங் நடந்தது. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள குட்டி நாடான டோகோ, சவுதி தலைநகர் ரியாத்தில் தூதரகம் திறந்துகொள்ள அனுமதிக்கப்படும் என்றும், அந்நாடு சந்தித்துவரும் பயங்கரவாதச் சம்பவங்களைத் தடுக்க உதவிகள் செய்யப்படும் என்றும் சவுதி உறுதியளித்தது. 2020-ல் இதே போன்ற தீர்மானத்தின்போது, வாக்களிக்காமல் தவிர்த்த இந்நாடுகள் இரண்டும், இந்த முறை தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்திருக்கின்றன. வங்கதேசம், செனகல் போன்ற நாடுகளும் இப்படித் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டன. இதனால், மிகக் குறைந்த எண்ணிக்கை வித்தியாசத்தில் (21-18) இந்தத் தீர்மானம் தோல்வியைத் தழுவியிருக்கிறது என்கிறார்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்.

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகள் இத்தனை ஆண்டுகளாக பெரிய முன்னேற்றம் காணாததற்கு, சீனாவின் பக்கபலமும் லாபியும் இருப்பதாகவும் சொல்லப்படுவதுண்டு. மனித உயிர்களைவிடவும் அரசியல் ரொம்பவே முக்கியமானது என்பதுதான் உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் நியதி. இதில், சவுதி மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE