அமெரிக்க அதிபரை அதிரவைத்த விலை உயர்வு!

By ஆர்.என்.சர்மா

விலைவாசி உயர்வால் மக்களுடைய வாழ்க்கைத் தரம் குறைந்துவிடும் என்று அமெரிக்க நாட்டின் அதிபரே அஞ்சுகிறார். அஞ்சுவதோடு நிற்காமல், அடுத்து என்ன செய்யலாம் என்று உரிய துறையினரையே நேரில் அழைத்து ஆலோசனை கேட்கிறார். முதலாளித்துவ நாட்டின் அதிபருக்கு, ஏழைகளைப் பற்றி எங்கே கவலை ஏற்படப் போகிறது என்று கருதுகிறவர்களுக்கு இது வியப்பாக இருக்கலாம். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அதைக் கடைசியில் பார்க்கலாம்!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021-ல் அமெரிக்க இறக்குமதி 16 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மளிகை சாமான்கள், மருந்து-மாத்திரைகள் கடந்த ஆண்டில் வாங்கப்பட்ட அதே அளவில்தான் வாங்கப்பட்டுள்ளன. அப்படியானால் கூடுதல் கொள்முதல் பிற இனங்களில் என்பது புரிகிறது. அதிபரின் கவலையெல்லாம் மக்களுக்குத் தேவைப்படும் அனைத்தும் போதிய அளவில் கிடைக்கிறதா என்று பார்த்து, போதிய எண்ணிக்கையில் கிடைப்பதை உறுதிசெய்வது எப்படி என்பதுதான்.

உலக வணிகத்தில் சரக்குக் கப்பல்கள், சரக்குப் பெட்டகங்கள் ஆகியவற்றின் பற்றாக்குறை, கப்பல் நிறுவனங்கள் முழு அளவில் சேவையைத் தொடங்காமல் இருப்பது, துறைமுகங்களில் சரக்குகளை இறக்க இடமில்லாமல் கடலிலேயே நங்கூரமிட்டு நிற்கும் கப்பல்கள் போன்றவற்றை வெள்ளை மாளிகை தொடர்ந்து கண்காணிக்கிறது. அரசு எடுத்த நடவடிக்கைகளால், சரக்குப் பெட்டகங்கள் தேங்குவது 40 சதவீதம் அளவுக்கு ஒரே வாரத்தில் குறைந்துவிட்டது. இதை மேலும் விரைவுபடுத்த ரொக்க ஊக்குவிப்பு திட்டங்களை அந்தந்தத் துறைமுகப் பொறுப்புக் கழகங்கள் அறிவித்து வருகின்றன.

இந்தக் கவலையின் ஒரு பகுதியாகத்தான் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் வால்மார்ட் உள்ளிட்டவற்றின் தலைமை நிர்வாகிகளையே, அதிபர் ஜோ பைடன் அழைத்து நேரிலேயே விசாரித்தார். திங்கள்கிழமை (நவ.29) இச்சந்திப்பு நிகழ்ந்தது.

ஒமைக்ரான் குறித்த அச்சம்

அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் ஆண்டு இறுதியை ஒட்டிய நீண்ட விடுமுறைக் காலம் தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்கள் வெளிநாடுகளுக்கும் வெளியூர்களுக்கும் சுற்றுலா செல்வார்கள். புதிய இடத்தில் புத்தாண்டைக் கொண்டாட விரும்புவார்கள். எனவே, பயணத்துக்காகவும் வீடுகளில் சொந்தப் பயன்பாட்டுக்காகவும் பொருட்களை வாங்குவார்கள். எனவே, எல்லாப் பொருட்களுக்கும் தேவை அதிகரித்துவருகிறது. இதற்கிடையே கோவிட்-19 பெருந்தொற்றின் அடுத்த கட்டமாக ஒமைக்ரான் பற்றிய அச்சமும் தோன்றியுள்ளதால், ஒருவேளை மீண்டும் வீடுகளிலேயே முடங்க வேண்டியிருந்தால் என்னென்ன தேவைப்படும் என்ற அனுபவத்தின் பேரிலும் பலவற்றை வாங்கிக் குவிக்கின்றனர். இந்தக் காரணங்களால் நுகர்வும், இறக்குமதியும், விலைவாசியும் உயர்ந்து வருகின்றன.

மின்னணு சாதனங்கள், பொம்மைகள், ஆடைகள், காலணிகள், பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் மொத்த வர்த்தக நிறுவனங்களான பெஸ்ட் பை, ஃபுட் லயன், சாம்சங் நார்த் அமெரிக்கா, கியூரேட் ரீடெய்ல் குரூப், டோடோஸ் சூப்பர் மார்க்கெட், மேட்டீல், குரோகர், எட்ஸி, வால்மார்ட், சிவிஎஸ் ஆகியவற்றின் தலைமை நிர்வாகிகள் நேரில் அல்லது காணொலிக் காட்சிகள் வாயிலாக அதிபரின் கூட்டத்தில் பங்கேற்றனர். பொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை, நுகர்வோர் கேட்பதைக் கொடுக்கும் நிலையில் இருக்கிறோம் என்று அவர்கள் உறுதியளித்தனர். லாஸ் ஏஞ்செலீஸ், லாங் பீச் – கலிபோர்னியா ஆகியவற்றில் துறைமுகங்களில் சரக்குகளை இறக்கும் வேகம் அதிகரித்துள்ளது, கப்பல்கள் அதிக எண்ணிக்கையில் சரக்குகளை இறக்கிவிட்டுச் செல்கின்றன என்று அவர்கள் தெரிவித்தனர். சரக்குப் பெட்டகங்களை இரவு நேரங்களில் இறக்கினாலும், வார இறுதியில் (விடுமுறை நாளில்) இறக்கினாலும் ஒரு சரக்குப் பெட்டகத்துக்கு 200 டாலர் என்ற அளவில் கட்டணம் கழித்துக்கொள்ளப்படும் என்று அறிவித்திருப்பதால், நெரிசல் நேரமல்லாத பிற நேரங்களிலும் சரக்குகள் இறக்கப்படுகின்றன என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். கப்பல்களில் சரக்குகளை வரவழைப்போருக்கும், இப்படி வேகமாக சரக்குகளைத் துறைமுகத்திலிருந்து தங்களுடைய இடங்களுக்குக் கொண்டுசெல்ல ரொக்க ஊக்குவிப்பு வழங்கப்படுகிறது.

சிறு வியாபாரிகள் மீது அக்கறை

பொருட்களை விநியோகிக்கும் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தொய்வு குறித்து கவலை தெரிவித்த அதிபர் பைடன், சிறு வியாபாரிகளுடைய நிலைமை குறித்தும் கேட்டார். அவர்களுக்குத் தேவையான சரக்குகள் உரிய அளவில் கிடைக்கின்றனவா, அவர்களால் தொடர்ந்து வியாபாரம் செய்ய முடிகிறதா, அமெரிக்க மாநிலங்களுக்கு பெடரல் (கூட்டரசு) அரசின் உதவி அல்லது ஒருங்கிணைப்பு தேவையா என்றும் கேட்டார். அமெரிக்க நுகர்வோர் வாங்க விரும்பும் எந்தப் பொருளுக்கும் தட்டுப்பாடு வரக்கூடாது, அவற்றை வாங்கி வைக்க உங்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்கக் கூடாது என்றார்.

ஆனால் ஆட்சியை இழந்த குடியரசுக் கட்சியினரோ, அதிபர் பைடனின் பொருளாதாரக் கொள்கையால்தான் விலைவாசி உயர்வு என்று சாடுகின்றனர்.

வால்மார்ட் தலைமை நிர்வாகி டக் மெக்மில்லன் அதிபரிடம் பேசியபோது, “நாங்களும் சரக்குகளைக் கொண்டுவந்து சேர்க்கும் வர்த்தகச் சங்கிலி அறுபடாமல் இருக்க வேண்டும் என்றுதான் கவலைப்படுகிறோம், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக அளவில் கையிருப்பு வைத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார். கப்பல்கள் துறைமுகத்தில் சரக்குகளை இறக்கும் வேகமும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதை உறுதி செய்தார். இருந்தாலும் குழந்தைகள் ஆசையுடன் வாங்க விரும்பும் பொம்மை ரகங்களில் பலவற்றின் உற்பத்தியும் மின்னணு சாதனங்கள் பலவற்றின் உற்பத்தியும் சிலிக்கா சிப்புகளின் பற்றாக்குறையால் குறைந்ததுதான் பிரச்சினையாக இருக்கிறது என்றார்.

அமெரிக்க நுகர்வோர் மொத்த விலை குறியீட்டெண் கடந்த மாதம் 6.2 சதவீதம் அளவுக்கு, அதாவது 2020 அக்டோபருடன் ஒப்பிடுகையில் - உயர்ந்தது. இது அரசுக்குக் கவலையை ஏற்படுத்தியது. 1990-க்குப் பிறகு விலைவாசி இந்த அளவுக்கு உயர்வது இப்போதுதான் முதல் முறை. இதனால், வேலையும் இழந்து வருவாயும் இழந்து தவிக்கும் மக்கள் வாங்குவதற்கு சிரமப்படுவார்களே என்ற அக்கறையில், அதிபர் நேரடியாக இதில் கவனம் செலுத்துகிறார். கடந்த ஓராண்டாக நுகர்வைக் குறைத்துக்கொண்டு வீட்டிலேயே இருந்த மக்கள், இந்த ஆண்டு வெளியில் செல்வதற்குத் தயாரானதுடன் வாங்க வேண்டியவற்றையெல்லாம் வாங்கிக் குவிக்கின்றனர். இதனாலும் விலைவாசி உயர்ந்திருக்கிறது.

அரசியல் குற்றச்சாட்டுகள்

ஆனால், ஆட்சியை இழந்த குடியரசுக் கட்சியினரோ அதிபர் பைடனின் பொருளாதாரக் கொள்கையால்தான் விலைவாசி உயர்வு என்று சாடுகின்றனர். அது மட்டுமல்லாமல், ஆட்சிக்கு வந்த பிறகு ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து திடீரென்று முழு அமெரிக்கப் படைகளையும் திரும்பப் பெற்றார் பைடன். அதனால் அவர் மீது உலக அரங்கிலேயே மதிப்பு குறைந்தது. ஹாங்காங்கில் ஜனநாயக உரிமைகளை முடக்கியும் தைவானைத் தனக்குக் கட்டுப்பட்ட நாடாக அச்சறுத்தியும், தென் சீனக் கடல் முழுக்க தனக்கே சொந்தம் என்று சொல்லியும் வீம்பு காட்டும் சீனாவை அமெரிக்கா சரியாக அடக்கவில்லை என்ற கவலையும் அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அதிபராவதற்கு முன்னால் மக்களிடையே அவருக்கு இருந்த ஆதரவில் பெரிய சரிவு ஏற்பட்டுவருகிறது.

இந்த முறை மட்டுமல்லாது அடுத்த முறையும் அமெரிக்க அதிபராக விரும்புகிறார் ஜோ பைடன். எனவே, செல்வாக்கு சரிவைத் தடுத்து நிறுத்தவும் மக்களுடைய பிரச்சினைகளில் நேரடி கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். பதவி ஆசையால் கூட சில நன்மைகளைத் தலைவர்கள் செய்கிறார்கள் என்பதே, ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE