தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒமிக்ரான் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து உலக நாடுகள் விழிப்படைந்து, விமானப் பயணங்களுக்குத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துவிட்டன. ஆனால், அதைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்த தென்னாப்பிரிக்க தேசம், வருமானத்தை இழந்து தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
உலக சுகாதார நிறுவனத்தால் ஒமிக்ரான் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் கரோனா பிறழ் வைரஸ், முதன்முதலில் தென்னாப்பிரிக்காவிலும் அதன் அண்டைநாடான போட்ஸ்வானாவிலும் கண்டறியப்பட்டது. இந்தத் தொற்றுக்குள்ளான நால்வரும் வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் என்று போட்ஸ்வானா அரசு கூறியிருக்கிறது. தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா ஆகிய இரண்டு நாடுகளும் சுற்றுலாவை மையமாகக் கொண்டவை. குறிப்பாக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா ஆகிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் இந்நாடுகளுக்குச் செல்கின்றனர்.
இந்நிலையில், நவம்பர் 25-ல் அந்நாட்டின் குவாசுலு நதால் மாகாணத்தில் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் புதிய பிறழ் கரோனா வைரஸான ஒமிக்ரானைக் கண்டறிந்தனர். “கரோனா வைரஸ் பரிணாமத்தில் புதிய பாய்ச்சல்” என்று பெருமிதம் கொண்டனர். ஆனால், இந்தச் செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதிக்கப்படுவதாக பிரிட்டன் அறிவித்தது. பிற ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் அதில் சேர்ந்துகொண்டன.
இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியதும், வாசுலு நதால் ஆய்வகத்தின் இயக்குநர் டுலியோ டிஒலிவீரா, அமெரிக்காவின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆன்டனி ஃபவுசி உள்ளிட்ட முக்கிய ஆளுமைகளும் சர்வதேசப் பத்திரிகையாளர்களும் பங்கேற்ற காணொலிச் சந்திப்பில் அதுகுறித்த தகவலைப் பகிர்ந்துகொண்டார். அப்போது, இந்தக் கண்டுபிடிப்பை அறிவிப்பதால், உலகம் தென்னாப்பிரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டார். ஆனால் அவரது நம்பிக்கை பொய்த்துவிட்டது.
இப்போது விதிக்கப்பட்டிருக்கும் தடை தற்காலிகமானதுதான் என்றாலும் அது எத்தனை காலம் நீடிக்கும் எனத் தெரியாததால் தென்னாப்பிரிக்கா கலங்கி நிற்கிறது. ஏற்கெனவே, பிரிட்டனின் தடைப்பட்டியலில் நீண்டகாலம் இருந்ததால், அதை நீக்கவே பெரும்பாடு பட்டதாகவும் தற்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டிருப்பதால், பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தென்னாப்பிரிக்க சுற்றுலாத் துறையினர் கவலைப்படுகிறார்கள்.
“மிகப் பெரிய மருத்துவக் கண்டுபிடிப்பை நிகழ்த்திய எங்கள் விஞ்ஞானிகளின் அறிவுத்திறன் எங்களுக்குப் பெரும் பலவீனத்தை ஏற்படுத்திவிட்டது” என்று அந்நாட்டின் சுற்றுலாத் துறை அமைச்சர் லிண்டிவி சிஸுலு வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.
இதுபோன்ற தருணங்களில், சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு ஒரேயடியாகத் தடைவிதிக்காமல், அந்நாடுகளிலிருந்து வருபவர்களுக்குத் தீவிர மருத்துவப் பரிசோதனை, தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம் என தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும், இப்படி தண்டனை விதிப்பது போல் தடைகளைச் சுமத்தினால், இப்படியான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் நாடுகள் அவற்றை வெளியில் சொல்லத் தயங்கக்கூடும் என்றும் வாதிடப்படுகிறது. உலக நாடுகளின் தலைவர்கள்தான் இதையெல்லாம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்!