தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டிருக்கும் புதிய பிறழ் கரோனா வைரஸுக்கு ‘ஒமிக்ரான்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இந்தப் பெயர் காரணத்தின் பின்னே, சீன அதிபர் பெயர் உள்ளிட்ட சில குழப்பங்களும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.
சீனாவின் வூஹானில் முதலில் அடையாளம் காணப்பட்ட கரோனா வைரஸ், பல்வேறு நாடுகளுக்கு பரவியது. கூடவே பலவிதமான பிறழ்வுகளுக்கும் ஆளானது. இந்தப் பிறழ் வைரஸ்கள் தமக்குள் வீரியம், பரவல் ஆகியவற்றில் வேறுபாடுகள் கொண்டிருந்தன. இவற்றை ஆங்கில எழுத்துகளும், எண்களும் கலந்த பெயர்களால் மருத்துவ அறிவியலாளர்கள் குறிப்பிட்டு வந்தனர். உதாரணத்துக்கு B.1.1.529. ஆனால் பொதுமக்கள் மத்தியில் இந்த அடையாளங்கள் குழப்பத்தை ஏற்படுத்தியதால், பிரதான வைரஸ் பெயர்களை கிரேக்க அகர வரிசையில் குறிக்க முடிவானது.
அந்த வகையில் ஆல்ஃபா, பீட்டா என பெயர் சூட்டி அடையாளப்படுத்த ஆரம்பித்தனர். உதாரணத்துக்கு, இந்தியாவில் அதிகம் பாதித்த பிறழ் ரகம் டெல்டா எனப்பட்டது. இந்த வகையிலேயே தற்போது தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அடையாளம் காணப்பட்டிருக்கும் வைரஸ், பெயர் சூட்டலுக்கு முன்பாக B.1.1.529 என்று அடையாளப்படுத்தினர். இதன் பரவல் வீரியம் மற்றும் பாதிப்பின் அளவு அதிகம் என்று அறிந்ததும், ஆல்ஃபா, பீட்டா வரிசையில் பெயர்சூட்ட முடிவானது.
அந்த வகையில் கிரேக்க அகர வரிசையில், உச்சரிக்க ஏதுவான அடுத்த எழுத்தாக ’நு’(Nu) என்பது அடையாளம் காணப்பட்டது. ஆனால் ஆங்கிலத்தில் ’புதிய நு வைரஸ்’ என்று வாசிக்கையில் 'New Nu' என உச்சரிப்பில் இரட்டிப்பு குழப்பம் தென்பட்டது. எனவே ’நு’ நிராகரிக்கப்பட்டது.
அடுத்த எழுத்தான ’ஜி’(Xi) என்பதில் இன்னொரு பிரச்சினை தலைதூக்கியது. சீன அதிபர் ஜி ஜின்பிங் பெயரின் உச்சரிப்போடு பொருந்தி வந்ததில், ’ஜி’(Xi) என்ற எழுத்துக்கு சீனா ஆட்சேபம் தெரிவிக்கலாம் என்பதால், ’ஜி’யும் நிராகரிக்கப்பட்டது. இப்படி கிரேக்க அகரவரிசையில் அடுத்த எழுத்தாக சிக்கியதே ஒமிக்ரான். இந்தப் பெயரையும் உலகின் மொழியியல் வல்லுநர்கள் பலரிடன் விசாரித்து, அந்த எழுத்தின் பின்னே பிரச்சினை ஏதும் இருக்கிறதா என்று சரிபார்த்த பின்னரே, உலக சுகாதார நிறுவனம், ஒமிக்ரான் பெயருக்கு அனுமதி தந்தது.
கரோனா வைரஸ்தான் வைத்து செய்கிறது என்றால், அதன் ரகங்களின் பெயருக்கும் பின்னேயும் பல அக்கப்போர்களை கடக்க வேண்டித்தான் இருக்கிறது.