குளிர்காலத் தாக்குதலுக்குத் தயாராகிறதா சீனா?

By ஆர்.என்.சர்மா

“குளிர்காலம் வருகிறது, அத்தியாவசியப் பொருட்களை நீண்ட காலத்துக்குப் பயன்படுத்தும் வகையில் வாங்கி வீட்டிலேயே சேமித்துக்கொள்ளுங்கள்” என்று மக்களைப் பொதுவாக கேட்டுக்கொண்ட சீனா, இப்போது இந்திய எல்லைக்கருகில் இமயமலையில் நிறுத்தியிருக்கும் சீன மக்கள் விடுதலை சேனைக்காக (பிஎல்ஏ) சிறப்பு ஆடைகளையும் காலணிகளையும் பிளாஸ்க்குகளையும் தயாரித்து அளித்துள்ளது. இதன் மூலம், குளிர்கால சண்டைக்குத் தயார் என்பதைச் சூசகமாகத் தெரிவிக்கிறது.

‘குளோபல் டைம்ஸ்’ நாளிதழில் இதுகுறித்த செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த நாளிதழ் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவில் வெளிவருகிறது. இந்தச் செய்தியை வெளியிட்டிருப்பதுடன், சீன வீரர்களுடன் ஒப்பிடுகையில் இந்திய வீரர்களுக்குக் குளிரைத் தாங்கும் ஏற்பாடுகள் போதாது என்று கேலி பொங்கும் குரலில் குறிப்பிட்டிருக்கிறது ‘குளோபல் டைம்ஸ்’.

பனிமலையே ஆபத்தானது

பனி படர்ந்த மலையில் மிக உயரத்தில் போர் செய்ய வேண்டாம், சும்மா நிற்பதே பெரிய சாதனை. கடும் குளிர் காரணமாக உடலில் ரத்த ஓட்டம் உறையும். நரம்புகள் தானாகவே புடைத்து வெடிக்கும். எந்தெந்த இடங்களில் எல்லாம் உடலை மூடவில்லையோ அந்த இடமெல்லாம் பனிக்காற்றில் தோல் வெடித்துப் பெரும் புண்ணாகும். வெண்மை பிரகாசிக்கும் மலையை அப்படியே வெறுங்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தால் கண் பார்வை பஞ்சடைந்து, பிறகு பார்வையே பறிபோய்விடும். சில மணி நேரம் அந்த வெண்மையையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தால் சித்தம்கூட கலங்கிவிடுமாம். அதனால்தான் பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் உயர் ரக கறுப்புக் கண்ணாடியை அணிந்துகொள்வார்கள்.

இந்திய ராணுவத்தில் சியாச்சின் மலைப் பகுதி போன்றவற்றுக்கு அனுப்ப ஆட்களை மிகவும் கவனத்துடன் தேர்வு செய்வார்கள். ஏனெனில், திருமணமாகி குழந்தைபெற்ற வீரர்களுக்கே முன்னுரிமை. அடர்பனி, கடும் குளிர் காரணமாக சில வேளைகளில் ஆண்மையிழப்புகூட ஏற்படலாம். வெப்பம் தகிக்கும் ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் கோடைக் காலத்தில் காவல் பணி செய்வதைவிட, சோதனைகள் மிகுந்தது பனி மலையில் பணி செய்வது. போர் செய்யக்கூட வேண்டாம், சில நாட்கள் அங்கே தங்கியிருந்து திரும்பினாலே அது சாதனைதான். பனிமலையில் திடீரென குளிர்காற்று சூறாவளியாக வீசும். அப்போது பறக்கும் பனிக்கட்டிகள் உடலைக் கடுமையாக தாக்கும். உடல் மேலும் மேலும் சில்லிடும். பனிப்பாறைகள் நொறுங்கி விழுந்து அப்படியே பல சதுர மைல்களுக்கு அனைத்தையும் அழுத்திவிடும். பனிப்பாறை உருகி குளிர்நீர் வெள்ளமாகப் பாய்ந்தோடும். நல்ல கனமான தரை என்று நினைத்து இரவில் கூடாரம் போட்டு படுத்திருந்த இடம், சில மணி நேரங்களுக்கெல்லாம் உடைந்து திக்குதிசை தெரியாமல் இழுத்துச் செல்லும். இவையெல்லாம் பனிமலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோர் சந்திக்கும் ஆபத்துகள். இதற்குப் பிறகுதான் எதிரிகளின் துப்பாக்கி, பீரங்கிகளின் தாக்குதல்கள் எல்லாம்!

சிறப்பு ஆடைகள்

இந்நிலையில், சீன அரசு பனிமலைப் பகுதியில் உள்ள ராணுவ வீரர்கள் அணிவதற்கான சீருடைகளை மிகுந்த ஆராய்ச்சிக்குப் பிறகு மேம்படுத்தியிருக்கிறது என ‘குளோபல் டைம்ஸ்’ குறிப்பிடுகிறது. இவை எடை குறைவாகவும், உறுதியாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. உடலைக் குளிரவிடாமல் வெதுவெதுப்பாக வைத்திருக்கும். அதேசமயம், ஆயுதங்களைக் கையாளவும் தாக்குதல் தொடர்பான வேலைகளைச் செய்யவும் இவை கனமாகவோ இடையூறாகவோ இருக்காது.

ராணுவ வீரர்கள் படுத்துத் தூங்க தரப்படும் படுக்கைப் பைகளும் அவ்விதமே சிறப்புத் துணிக்கலவையால் செய்யப்பட்டுள்ளன. ராணுவ வீரர்கள், அதிகாரிகளுக்கான சட்டைகள் பருத்தி, பனிநுழைய முடியாத செயற்கை இழைகள் ஆகியவற்றின் கூட்டுப் பொருட்களால் நெய்யப்பட்டவை. அவற்றில் முழங்கை, முழங்கால் போன்ற பகுதிகளில் பஞ்சு அதிகம் அடைக்கப்பட்டிருக்கும். இதனால் கீழேவிழுந்தாலும் காயம் படாது, மூட்டுகளும் உறைந்து போகாது. மேலே அணியும் சட்டை, மிக நீண்டதாகவும் நல்ல அகலமுள்ளதாகவும் உடலைத் தானே கவ்விப்பிடிப்பதாகவும் இருக்கும்.

தெர்மாஸ் பிளாஸ்க் உள்ளிருக்கும் பானத்தை அதிக நேரம் சூடாக வைத்திருக்கும். உள்ளே இருப்பது எந்தச் சூட்டில் இருக்கிறது என்பதைக் காட்ட, அதன் மேலேயே வகை செய்யப்பட்டிருக்கிறது. பிளாஸ்க்குகள் டைட்டானிக் உலோகக் கலவையால் தயாரிக்கப்பட்டவை.

கைகளுக்கு அணியும் கையுறைகள், பேட்டரி மூலம் கிடைக்கும் மின்சாரத்தால் எப்போதும் வெப்பம் குறையாமல் கதகதப்பாக வைத்திருக்கும். முழங்கால்களில் அடிபடாமல் இருக்க முழங்கால்களுக்கென்று சிறப்பு உறைகள் வழங்கப்பட்டுள்ளன. காலணிகளுக்கும் அவ்விதமே, சூடு குறையாமல் பார்த்துக்கொள்ளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மறைந்திருந்து சுடும் (ஸ்னைபர்) வீரர்கள், அவர்களுடைய எதிரிகளின் கண்ணில்படாமலிருக்க அணியும் ஆடை மீது சிறப்பு வண்ணப்பூச்சு இருக்கிறது. எவ்வளவு உற்றுப் பார்த்தாலும் ஆள் இருப்பதே தெரியாது.

கண் கண்ணாடிகளும் அவ்விதமே உடைந்து நொறுங்காத, உடைந்தாலும் கண்ணில்பட்டு காயம் ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. உப்புக் காற்று, மணல் காற்று, கடும் குளிர் காற்று என்று எதையும் தாங்கும். மைனஸ் 40 டிகிரி முதல் மைனஸ் 55 டிகிரி வரையிலான கடுங்குளிரில்கூட கண்ணாடி அதிர்ச்சியில் உடையாது, எப்படிப்பட்ட வெளிச்சத்தையும் உள்வாங்கி, பார்க்க வழிசெய்யும், புற ஊதாக்கதிர்களை வடிகட்டிவிடும்.

கையுறைகள் பேட்டரிகள் மூலம் சூடாகவே இருப்பதால் அவற்றை அணிந்துகொண்டே துப்பாக்கிகளை இயக்க முடியும். மிகவும் குறைந்த வெப்பம் அதாவது கடுங்குளிரிலும் விறைத்துப் போகாத கலவைகளால் பேட்டரி தயாரிக்கப்பட்டிருப்பதால், கையுறைகளும் காலணிகளும் வெதுவெதுப்பாகவே இருக்கும்.

முன்னாள் வீரர்கள் பாராட்டு

தாங்கள் ராணுவத்தில் பணிபுரிந்த காலத்தைவிட இப்போது போக்குவரத்து வசதிகளும் ராணுவ வீரர்களுக்கான உடைகளும் கருவிகளும் மிகுந்த அக்கறையோடு தயாரிக்கப்படுகின்றன என்று சீன ராணுவத்தின் முன்னாள் வீரர்கள் இவற்றைப் பார்த்துவிட்டுப் பாராட்டியுள்ளனர். எல்லையில் ராணுவத்தினரும் அவர்களுக்கு உதவும் குழுவினரும் எளிதாக வந்துசெல்ல சாலைகளும் பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பதுங்கு குழிகளும் பீரங்கிகளை மறைத்துவைத்து சுடுவதற்கான பில் பாக்ஸ்களும் ஏராளமாக கட்டப்பட்டுள்ளன. திடீரென்று வெளிப்பட்டு தாக்கும் வகையில் மலையில் குடைந்து ரகசிய சுரங்கங்களையும் நிலவறைகளையும்கூட அமைத்துள்ளனர். சீன ராணுவ வீரர்களின் பாசறைகளும் உணவுக் கூடங்களும் அவசர சிகிச்சைக்கான மருத்துவமனைகளும் கூட திட்டமிட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தகவல் தொடர்பு வசதிகளும் இவ்வாறே திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளன.

கோப்புப் படம்

இந்திய எல்லைக்கருகில் உள்ள சீன கிராமங்களில் வாழும் மக்களில் போர் செய்யக்கூடியவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு ஆயுதங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமமும் அவசரத் தேவைக்கு ராணுவக் கேந்திரங்களாக மாறக்கூடிய அளவுக்கு அங்கே எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சீன கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கும் முடிவை சீன ராணுவம் அப்படியே பின்பற்றுகிறது. அரசும் தனது நிதி, ஆள்பலம், தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் ராணுவ நோக்கத்துக்கு எளிதில் திருப்ப முடிகிறது. தரம் குறைந்தவையாக இருந்தாலும் சீன ராணுவத் தயாரிப்புகள் எண்ணிக்கையில் மிகுதி.

மொத்தத்தில், இந்திய வீரர்களைவிட சீன ராணுவ வீரர்கள் எல்லா வசதிகளையும் பெற்று, மிகுந்த மனோ திடத்துடனும் உற்சாகமாகவும் இருக்கின்றனர் என்று ‘குளோபல் டைம்ஸ்’ குறிப்பிட்டுள்ளது. இந்தியா இதிலெல்லாம் பின்தங்கியிருக்கிறது என்றும் மறக்காமல் குறிப்பிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE