அடுத்த இலக்கு நேட்டோ செயற்கைக்கோள்கள்!

By காமதேனு

நேட்டோ நாடுகளின் 32 செயற்கைக்கோள்களை ரஷ்யா அழிக்கப்போவதாக, அந்நாட்டின் அரசுத் தொலைக்காட்சி எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சமீபத்தில் தனது பழைய செயற்கைக்கோள் ஒன்றின் மீது செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை (ஏசாட்) ஏவி அழித்ததன் மூலம், விண்வெளி அறிவியல் உலகில் ரஷ்யா ஏற்படுத்திய அதிர்வுகள் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில், ரஷ்ய அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட இந்தத் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

உக்ரைனின் எல்லையில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டிருப்பதை அமெரிக்கா கண்டித்திருக்கும் நிலையில், இந்தச் செய்தி வெளியாகியிருப்பது கவனிக்கத்தக்கது.

விண்வெளி அறிவியலில் முன்னோடி தேசம் ரஷ்யா. சோவியத் ஒன்றியமாக இருந்த காலத்திலேயே இவ்விஷயத்தில் அமெரிக்காவைவிடவும் சில படிகள் முன்னே சென்ற வரலாறு கொண்டது.

அந்நாடுகளின் ஏவுகணைகள், விமானங்கள், கப்பல்கள், ஏன் தரைப்படையையும் செயலிழக்கச் செய்யும் என்றும், மேற்கத்திய நாடுகள் ஜிபிஎஸ் துணையுடன் இயக்கும் அனைத்தும் முற்றிலுமாகச் செயலிழக்கும் என்றும் அந்தத் தொலைக்காட்சி சேனல் தெரிவித்திருக்கிறது.

ஏற்கெனவே, ரஷ்யாவின் சமீபத்திய ஏசாட் ஏவுகணை சோதனையை நாசாவும் அமெரிக்க அரசும் கடுமையாகக் கண்டித்திருந்தன. ரஷ்யாவின் ஏசாட் ஏவுகணை சோதனை அநாவசியமான நடவடிக்கை என்றே விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இப்படித் தாக்கி அழிக்கப்படுவதன் மூலம், விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் செயற்கைக்கோள்களின் உடைந்த பாகங்களில் மிகச் சிறியவைகூட பெரும் சேதத்தை விளைவிக்கக்கூடியவை. எனவே, பூமியிலிருந்து 420 கிலோமீட்டர் உயரத்துக்கு மேல் சுற்றிக்கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கும் இதனால் பெரும் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. விண்வெளி என்பது பரந்துவிரிந்தது என்றபோதிலும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுவட்டப் பாதையில், ஒவ்வொரு நாளும் 31 தடவை குறுக்கிடும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால், ஏசாட் சோதனையால் விண்வெளியில் எந்த ஆபத்தும் நிகழ்ந்துவிடாது என ரஷ்யா விளக்கமளித்திருக்கிறது.

விண்வெளி அறிவியலில் முன்னோடி தேசம் ரஷ்யா. சோவியத் ஒன்றியமாக இருந்த காலத்திலேயே இவ்விஷயத்தில் அமெரிக்காவைவிடவும் சில படிகள் முன்னே சென்ற வரலாறு கொண்டது. சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்கியதில் அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, ஜப்பான் ஆகியவற்றுடன் ரஷ்யாவுக்கும் முக்கியப் பங்கு உண்டு. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் 7 பேரில் 2 பேர் ரஷ்யர். இந்நிலையில், இப்படி ஒரு மிரட்டலை ரஷ்யா விடுப்பது விண்வெளி ஆராய்ச்சியாளர்களைத் திகைக்கவைத்திருக்கிறது.

உக்ரைனுக்கு ஆதரவாக பிரிட்டனும் அமெரிக்காவும் படைகளுடன் தயார் நிலையில் இருப்பதாகவும், இது ரஷ்யாவைக் கோபப்படுத்தியிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், உக்ரைனுக்குள் ஊடுருவும் எந்தத் திட்டமும் தங்களிடம் இல்லை என ரஷ்யாவின் வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பான எஸ்விஆர் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. இவ்விஷயத்தில் அமெரிக்கா தேவையில்லாமல் கூச்சல் போடுவதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறது. உக்ரைனின் நகரங்களை ரஷ்யாவின் டாங்குகள் தாக்கி அழிக்கப்போவதாக, அமெரிக்கர்கள் ஒரு அச்சுறுத்தலான தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என எஸ்விஆர் தரப்பில் ரஷ்ய ஊடகங்களுக்குச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. பொதுவாக, எஸ்விஆர் இப்படியான அறிக்கைகளை வெளிப்படையாக வெளியிடுவதில்லை என்பதால், இவ்விவகாரம் மிகுந்த கவனம் பெறுகிறது.

உக்ரைன் விவகாரத்தை மனதில் வைத்து, விண்வெளிப் போரில் ரஷ்யா இறங்கிவிடும் என்று சொல்லிவிட முடியாதுதான். இப்படியான மிரட்டல்கள் அமெரிக்காவை ஆழம் பார்ப்பதற்கானவையாகவே இருக்கும் என்றே கருதப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE