ஆப்கன் டிவிக்களில் பெண்கள் நடிக்கத் தடை!

By எஸ்.எஸ்.லெனின்

ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சிகளில், பெண்கள் நடித்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக மேற்கு நாடுகளின் ஆதரவால், ஆப்கனில் தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. செய்தி மற்றும் பொழுதுபோக்கு தேவைக்காக 12-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் ஆப்கனில் செயல்பட்டு வந்தன. அவற்றில் துருக்கி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி, ஆப்கன் மக்களை மகிழ்வித்து வந்தன. செய்தி நிறுவனங்களும் சுதந்திரத்துடன் செயல்பட்டு வந்தன.

ஆப்கனில் தாலிபான்கள் பொறுப்பேற்றது முதல் இந்த தொலைக்காட்சிகள் தாமாகக் கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டன. போட்டியாளர்கள் பங்கேற்று பாடும் இசை நிகழ்ச்சிகள், ஒரு சில தொலைக்காட்சித் தொடர்கள் மட்டுமே ஒளிபரப்பின. தாலிபான்கள் அச்சுறுத்தல் விடுக்கும் முன்பே, அவர்களின் எதிர்பார்ப்புக்குரிய தணிக்கைகளில் தொலைக்காட்சிகள் தாமாக ஈடுபட்டன. தங்களைப் பற்றி எழுதிய பத்திரிகையாளர்களுக்கு தாலிபான்கள் கசையடிகளை தர ஆரம்பித்ததில், ஊடக சுதந்திரம் என்பதும் அங்கே காணாமல் போனது.

இதற்கிடையே மேற்கு நாடுகளின் நிதியுதவி மற்றும் அந்நாடுகளின் மத்திய வங்கிகளில் குவிந்திருக்கும் ஆப்கன் அரசு நிதி ஆகியவற்றை குறிவைத்த தாலிபான்கள், ஆப்கனில் மனித உரிமை மற்றும் மகளிர் கல்வி உள்ளிட்ட தயாள ஏற்பாடுகளில் ஈடுபடப்போவதாக உறுதி அளித்திருந்தனர். இதனால் பொழுதுபோக்கு மற்றும் செய்தி தொலைக்காட்சிகளுக்கு பாதிப்பு வராது என்ற நம்பிக்கை எழுந்தது. மாறாக, தாலிபான்கள் தங்கள் சுயரூபத்தை மீண்டும் வெளிக்காட்டத் தொடங்கிவிட்டனர்.

கருத்து மற்றும் மகளிர் சுதந்திரம் கோரும் ஆப்கன் போராட்டம்

நேற்று(நவ.21) ஆப்கன் அரசு சார்பில் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களில், ‘பெண்கள் நடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உடனடியாக நிறுத்துமாறு’ உத்தரவிட்டுள்ளனர். மேலும் செய்தி வாசிக்கும் பெண்களுக்கான உடை குறித்த வழிகாட்டுதல்களையும் வழங்கி உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் 1996-2001 இடையே தாலிபான்களின் ஆட்சி நடைபெற்றபோது, அங்கே தொலைக்காட்சி, திரைப்படம் போன்றவை முற்றிலுமாக தடைசெய்யப்பட்டிருந்தன. எவரும் அறியாது மறைவாக டிவி பார்த்தோர் கண்டறியப்பட்டு, பொது இடத்தில் தண்டனை வழங்கப்பட்டதுடன், டிவி, வீடியோ பிளேயர் உபகரணங்கள் உடைத்து நொறுக்கப்பட்டன. ’வாய்ஸ் ஆஃப் ஷரியா’ என்ற மத வழிபாட்டுக்கான வானொலி சேவைக்கு மட்டுமே தாலிபான்கள் அனுமதி வழங்கி இருந்தனர்.

இருபதாண்டு இடைவெளியில் மீண்டும் ஆப்கனில் அரியணையேறி இருக்கும் தாலிபான்கள், தங்கள் அடக்குமுறையால் தேசத்தை பல பத்தாண்டுகள் பின்னோக்கி இழுக்கும் பணியைத் தொடங்கி உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE