இராக்கில் 12 வயது சிறுமிக்குத் திருமணம்!

By காமதேனு

இராக் நாட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொண்ட ஆண் மீது, சிறுமியின் தாய் தொடுத்த வழக்கை பாக்தாத் உயர் நீதிமன்றம் நேற்று தள்ளிவைத்தது.

இராக்கில் திருமண வயது 18ஆக சட்டப்படி முறைப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும் பெற்றோரின் சம்மதத்துடன் 15 வயதில் திருமணம் புரிவது அங்கு அனுமதிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் 12 வயது சிறுமிக்குத் திருமணம் நடத்தப்பட்டது குறித்து, இராக்கில் சர்ச்சை கிளம்பியுள்ளது. அந்நாட்டின் குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர்கள் பாக்தாத் உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். “18 வயதுக்குக் குறைவானவர்கள் குழந்தைகள் என்பதால் இது பெருங்குற்றம்” என்று அவர்கள் பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டனர்.

அதிலும் இந்த வழக்கில், தன் மகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு தன்னுடைய கணவர் கடத்தப்பட்ட பிறகே, பலவந்தமாகத் திருமணம் செய்யப்பட்டதாகக் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். ஆனால், இராக்கின் பெண்களுக்கு எதிரான வன்முறை விவகாரங்களைக் கையாளும் அமைச்சகம், சிறுமி, தாயின் இந்தக் கூற்றை மறுத்துள்ளது. தாங்கள் சிறுமியுடன் நடத்திய விசாரணையின்போது தான் கட்டாயப்படுத்தப்படவில்லை என்று சிறுமி வாக்குமூலம் அளித்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மத அடிப்படையிலான திருமண ஒப்பந்தத்தில் சிறுமி கையெழுத்திட்டிருப்பதால் திருமணம் செல்லும் என்றும் கூறியுள்ளது.

இராக் உள்ளிட்ட அரேபிய நாடுகளில் குழந்தைத் திருமணம் இன்றும் நடந்துவருவதால், நவம்பர் 28 அன்று இந்த வழக்குத் தொடர்பாக நடைபெறவிருக்கும் நீதிமன்ற விசாரணை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE