உடலில் ஆக்சிஜன் அளவு குறைவதே கரோனா நோய்த்தொற்றுக்கான முக்கிய அறிகுறியாகக் கருதப்படுகிறது. இதைக் கண்டறிவதில் ஆக்ஸிமீட்டர் கருவி முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த கையடக்கக் கருவியைக் கொண்டு, உடலின் ஆக்சிஜன் அளவும் ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜன் அளவும் கண்டறியப்படுகின்றன.
இந்தக் கருவியை விரலில் ஒரு சில நொடிகள் பொருத்திப் பார்த்து, நமது உடலில் உள்ள ஆக்சிஜன் அளவைக் கண்டறிய முடிவதால், உலகெங்கிலும் இது பயன்பாட்டில் உள்ளது. இதில் 96 முதல் 100 சதவீதம்வரை காட்டினால் ஆக்சிஜன் அளவு உடலில் சீராக இருப்பதாகவும் 93 சதவீதத்துக்குக்கீழ் வீழ்ச்சியடைந்தால் உடனடியாக மருத்துவரை அணுகும்படியும் வலியுறுத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில், ஆக்ஸிமீட்டர் தொடர்பாக அதிர்ச்சிகரமான தகவலை பிரிட்டன் நாடு நேற்று வெளியிட்டது. வெளிர் நிறம் கொண்டவர்களுக்கு மட்டுமே ஆக்ஸிமீட்டர் கருவி சரியாகச் செயல்படுவதாகப் பிரிட்டன் சுகாதார செயலர் சஜித் ஜாவித் நேற்று தெரிவித்தார்.
“கருத்த சருமம் கொண்டவர்களுக்கு ஆக்ஸிமீட்டரை பொருத்திப் பார்த்து அவர்கள் உடல் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை கண்டறிய முயலும்போது, தோராயமான அல்லது பிழையான அளவுதான் கிடைக்கிறது. கரோனா நோய்த்தொற்றைக் கண்டறிய முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டுவரும் ஆக்ஸிமீட்டர் மருத்துவக் கருவியிலும் நிறவெறி பிரச்சினையா என்ற அதிர்ச்சியே முதலில் உண்டாகிறது. ஒரு மருத்துவ கருவியை உருவாக்கும்போதுகூட அதில் தெரிந்தோ தெரியாமலோ நிறப் பாகுபாடு உள்ளதென்பது, உலகம் என்னமாதிரி உள்ளது என்பதற்கான அத்தாட்சி. இத்தகைய நிறவெறி பிடித்த கருவியால், நோய்க்கூறு பிழையாகக் கண்டறியப்பட்டு உலகெங்கிலும் இதுவரை எத்தனைப்பேர் பலியானார்கள் என்பது தெரியவில்லை. எல்லாவற்றையும் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டு கமிட்டி அமைத்துள்ளேன். விசாரணையில் கிடைக்கும் முடிவுகளிலிருந்து இனியேனும் முறைப்படுத்தப்பட்ட பாகுபாடு ஒழிக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் ” என்று காட்டமாக அறிக்கை ஒன்றை பிரிட்டன் சுகாதாரச் செயலர் சஜித் ஜாவித் வெளியிட்டுள்ளார்.
பெரும்பாலான மருத்துவ சாதனங்கள், மருந்துப் பொருட்கள், மருத்துவம் சார்ந்த புத்தகங்கள், வழிமுறைகள் உள்ளிட்டவை வெள்ளையர்கள் கோலோச்சும் நாடுகளில்தான் உருவாக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய நிற அடிப்படையிலான பாகுபாட்டைக் களைய அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுடன், தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாகவும் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பிரிட்டனில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்களில், கறுப்பின மக்களின் எண்ணிக்கை பிற சமூகத்தினரைக் காட்டிலும் பலமடங்காக இருந்துவருகிறது. எதிர்பாராதவிதமாக நோய்த்தொற்றின் அளவு அதிகரித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நிலைக்கு, கறுப்பின மக்கள் அதிகம் பேர் ஆளாகியுள்ளனர். இதை உற்றுக்கவனித்து ஆக்ஸிமீட்டர் கருவியினால்தான் இந்த சிக்கலுக்கான ஊற்றுக்கண் இருப்பதை பிரிட்டன் சுகாதாரச் செயலர் கண்டறிந்ததாகத் தெரியவந்துள்ளது. இந்த விசாரணையின் முடிவு 2022 ஜனவரியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.