மீண்டும் வேண்டாம் பொதுமுடக்கம்!

By காமதேனு

ஆஸ்திரிய நாட்டில், கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராகக் கடும் போராட்டம் வெடித்திருக்கிறது. அந்நாட்டில், கரோனா பரவல் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் கரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, இன்று தலைநகர் வியன்னாவின் மையப் பகுதியில் உள்ள ஹீரோஸ் சதுக்கம் முன்பு ஆயிரக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். பிற இடங்களில் போராட்டம் பரவிவருகிறது. கையில் ஆஸ்திரிய தேசியக் கொடிகளை ஏந்தி வீதிகளில் திரண்ட மக்கள், ‘தடுப்பூசி வேண்டாம்’, ‘பாசிச சர்வாதிகாரம் ஒழிக’ என முழக்கமிட்டனர். போராட்டக்காரர்களில் 10-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

66 சதவீத ஆஸ்திரியர்களுக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இது மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மிகக் குறைவான எண்ணிக்கை. ஜெர்மனியைப் போலவே ஆஸ்திரியாவிலும் கணிசமானோர் தடுப்பூசிக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் ஆஸ்திரியாவில் கரோனா தொற்றும் வேகமாகப் பரவிவருகிறது. ஆஸ்திரியாவின் பல மருத்துவமனைகளில் ஐசியூக்கள் நிரம்பி வழிகின்றன. கரோனா சராசரி மரணங்களின் எண்ணிக்கை, கடந்த சில வாரங்களில் 3 மடங்காகியிருக்கிறது.

தீவிர வலதுசாரி கட்சியான சுதந்திரக் கட்சி, தடுப்பூசிக்கு எதிரான குரல்களுக்கு ஆதரவளிக்கிறது. இந்தப் போராட்டங்களை முன்னெடுத்திருப்பது இந்தக் கட்சிதான். எனினும், இந்தப் போராட்டங்களில் இக்கட்சியின் தலைவர் ஹெர்பெர்ட் கிக்கிள் கலந்துகொள்ள முடியவில்லை. காரணம், அவருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE