பெருந்தொற்றுக் காலத்தில் அதிகரித்திருக்கும் குடிப்பழக்கம்!

By ஆர்.என்.சர்மா

மது குடிப்பது சமீப ஆண்டுகளாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. மதுபான வகைகளின் எண்ணிக்கையும், விற்பனைக் கடைகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பது ஒரு காரணம் என்றால், குடிப்பது சமூகப் பழக்கமாகப் பரவிவருவதும் மற்றொரு காரணம். திருமணம், பிறந்தநாள், புதிய வேலையில் சேர்ந்த நாள், புதிதாக வாகனம் வாங்கிய நாள் என்று குடிப்பதற்கான தருணங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில், பெருந்தொற்றுக் காலத்தில், பல்வேறு நாடுகளில் குடிப்பழக்கம் அதிகரித்திருக்கிறது என்றும், வீடுகளுக்குள்ளேயே குடிப்பழக்கம் பரவிவிட்டது என்றும் உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்திருக்கிறது.

கோவிட் 19 பெருந்தொற்று பரவ ஆரம்பித்ததும் உலக நாடுகள் பொதுமுடக்கத்தை அறிவித்ததால், மக்கள் வீட்டுக்குள் முடங்கினர். உணவகங்களும் மதுபானக் கூடங்களும்கூட மூடப்பட்டன. இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் குடிக்க வழியில்லாமல் பலர் தவித்தனர். பொதுமுடக்கத் தளர்வுகளைத் தொடர்ந்து, வெவ்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டபோது மதுக்கடைக்கு முன்னர் குடிமகன்கள் வரிசைகட்டி நின்ற அவலமும் நடந்தது.

ஆனால், மேலை நாடுகளில் மதுபானங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படவேயில்லை. எனவே, குடிப்பழக்கம் அதிகமானது பிற வெளிநாடுகளில்தான். அங்கே மதுபான விடுதியில் மதுவை ஊற்றிக்கொடுக்க இருக்கும் பணியாளர், தன்னுடைய வாடிக்கையாளரின் குடி விருப்பத்தை நன்கு அறிந்தவராக இருப்பார். அத்துடன் ஒவ்வொருவருக்கும் எது அளவு – வரம்பு என்றும் அவருக்குத் தெரியும். எனவே, வியாபாரத்துக்காகத்தான் மதுபான விடுதி என்றாலும், தாங்க முடியாத அளவுக்கு குடிக்க தனது வாடிக்கையாளரை அனுமதிக்க மாட்டார். போதும் குடித்தது என்று அன்போடு சொல்லி அவரை வழியனுப்பி வைப்பார். அந்த விடுதிகள் மூடப்பட்டதால் பலரும் மிதமிஞ்சி குடிக்கத் தொடங்கினர்.

நண்பர்களுடன் சேர்ந்து குடிக்கும்போது அரட்டையும் பேச்சுமாக இருக்கும் என்பதால், அந்த ரசனையில் குடியைக் கட்டுப்படுத்திக்கொள்வார்கள். கூட சேர்ந்து குடிப்பவர் எண்ணிக்கை அதிகமானால் செலவும் அதிகமாகிவிடுமே என்று அளவோடு குடிப்பதும் உண்டு. பெருந்தொற்றுக்காலத் தனிமையில் இவையெல்லாம் இல்லாததால் ஏராளமானோர் ஒரேநாளில் சில முறை குடிப்பதையும், வழக்கத்துக்கும் அதிகமாக குடிப்பதையும் பழகிவிட்டனர்.

ஆண்டுதோறும், மிதமிஞ்சிய குடியால் மட்டும் உலகில் 30 லட்சம் பேர் இறக்கின்றனர். இறந்தவர்கள் ஒருபுறம் என்றால், உயிரோடு இருப்பவர்களில் பலர் கல்லீரல், குடல், இதயம் ஆகியவற்றைக் கெடுத்துக்கொண்டு தொடர் நோய்க்கு ஆளாகின்றனர். 2020, 2021 ஆண்டுகளில் இப்படி குடி நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட மேலும் 5.1 சதவீதம் அதிகரித்திருக்கிறது. நரம்புத் தளர்ச்சி, மூளை செயலிழப்பு, பக்கவாதம், மாரடைப்பு, மூச்சிரைப்பு போன்றவற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மதுபானம் அருந்துவதால் ஏற்படக்கூடிய மனச்சிதைவு உள்ளிட்ட நோய்களால், உலகில் 28 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிகாரர்களில் 6 சதவீதம் பேருக்குத்தான் குடி நோயைக் குறைக்கவும் பாதிப்புகளிலிருந்து விடுபடவும் மருத்துவ உதவிகளைப் பெற முடிகிறது.

மற்றவர்கள் அப்படிப்பட்ட மருத்துவ மையங்களுக்குத் தொலைவில் இருப்பதாலும், குடியால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தெரிவிக்க கூச்சப்பட்டும் உதவிகளைப் பெறாமலேயே சிக்கலில் ஆழ்கின்றனர். அமெரிக்காவில் குடித்துவிட்டு கார் ஓட்டிச் சென்று விபத்தில் இறப்போர் எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்துவிட்டது. இதில் விநோதம் என்னவென்றால், பெருந்தொற்றுக் காலத்தில் வீதிகளில் ஓடின கார்களின் எண்ணிக்கையே மிகச் சிலதான்!

2010-ல் குடிப்பழக்கத்தால் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட இழப்பு மதிப்பு மட்டும் 2,500 கோடி டாலர்கள் (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் ரூ.74). வேலையிழப்பு, உற்பத்தித் திறன் பாதிப்பு போன்றவற்றால் 327 லட்சம் முழுநேரத் தொழிலாளர்கள் உழைப்பு வீணானது. குடிப்பழக்கமானது கோவிட் பெருந்தொற்றைவிட ஒரு வகையில் மோசமானது. எப்படியென்றால் குடிக்காமலிருக்க யாருக்கும் தடுப்பூசி எதுவும் போட முடியாது. குடியை மறக்கவோ, குடியைத் தடுக்கவோ மருந்து – மாத்திரைகளும் கிடையாது. குடி போதை போதாமல் போதை மருந்துகளையும் சேர்ந்து உட்கொள்ளும் கடுமையான நிலைக்குத்தான் குடி நோயாளிகள் செல்கின்றனர். ஆனாலும் தகுந்த வகையில் எடுத்துச் சொல்லி குடிப்பழக்கத்தைக் குறைக்க, உளவியல்ரீதியாக முயன்று பார்க்கின்றனர். குடி வேட்கையைத் தடுக்க புதிய முறையில் முயல்கின்றனர்.

இப்போது செயற்கை நுண்ணறிவு, புதிய வகை கணினித் தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டு குடி நோயிலிருந்து விடுபடுவோருக்கான ஆலோசனை, வழிகாட்டு சிகிச்சைகளைத் தொடங்கியுள்ளனர். குடி நோயாளிகள் குடியை விட்டுவிடுவதென்று முடிவு செய்தாலும் எந்தக் காரணத்தால் மீண்டும் குடிக்கத் தொடங்குகின்றனர், குடிக்கக் கூடாது என்ற அவர்களுடைய வைராக்கியம் எந்த இடத்தில் முறிகிறது என்றெல்லாம் கணினிகள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றோடு கண்டுபிடிக்கிறார்கள். இப்போதைக்கு இந்த சிகிச்சை, ஆலோசனை போன்ற சேவைகளை எல்லோரும் பெற முடியவில்லை. ஆண்டுகள் செல்லச் செல்ல இது அனைவருக்கும் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். இப்போதைக்கு இதற்குச் செலவு அதிகம் பிடிக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

இணையவழியில், குடி நோயாளிகள் தங்களைப் போன்ற பிற நோயாளிகளுடன் மெய்நிகர் சந்திப்பில் இணைந்து மீள வழிகாணவும் ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. மதுப்பழக்கம், சிகரெட் உள்ளிட்ட புகைப்பழக்கம் ஆகியவற்றை நிறுத்த அளிக்கும் சிகிச்சைகளுக்கு இப்போது உலக அளவில் பெரிய சந்தை ஏற்பட்டிருக்கிறது. 2020-ல் இச்சந்தையின் மதிப்பு 470 கோடி டாலர்கள். 2021-ல் 510 கோடி டாலர்கள், 2026-ல் இது 790 கோடி டாலர்களாகிவிடும் என்று கணித்திருக்கிறார்கள்.

குடிப்பழக்கத்தால் சிந்தனை தடுமாறும். நினைவிழத்தல் அதிகரிக்கும். எந்த வேலையிலும் கவனத்தைக் குவிக்க முடியாமல் போய்விடும். பிறகு கை நடுக்கம் உள்ளிட்ட நிரந்தர நோய்களுக்கு இட்டுச் செல்லும். குடிப்பழக்கம் தனி மனிதனையும் அவருடைய குடும்பத்தையும் சீரழித்துவிடும். மகிழ்ச்சியைக் கொண்டாட குடிக்கத் தொடங்கும் பழக்கம், பிறகு மகிழ்ச்சியற்ற வாழ்க்கையையே ஒருவருக்கு அளிக்கும். எனவே உலக சுகாதார நிறுவனம் குடிப்பழக்கம் அதிகரிப்பது குறித்து கவலை கொள்வதில் அர்த்தம் இருக்கிறது. குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்களும் தங்கள் குடும்பங்களை நினைத்துக் கவலைகொள்ள வேண்டும். குடிப்பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE