குறுகிய நேரமே அதிகாரம் தகைந்தாலும், அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற சிறப்பைப் பெற்றார், துணை அதிபரான கமலா ஹாரிஸ்!
முதல் பெண், முதல் கறுப்பினப் பெண், முதல் தெற்காசியர் எனப் பல்வேறு சிறப்புகளுடன் அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸ், சுமார் 85 நிமிடங்களுக்கு அமெரிக்காவின் அதிபராகவும் அதிகாரத்திலும் நீடித்தார்.
அமெரிக்காவின் 46-வது அதிபராக வீற்றிருக்கும் ஜோ பைடனுக்கு, இன்று(நவ.20) பிறந்தநாள். 79 வயதாகும் ஜோ பைடனுக்கு, வயது மூப்பின் காரணமாக சில உடல்நலக் கோளாறுகள் தென்பட்டன. அவை தொடர்பாக முழு உடல் பரிசோதனையும், பெருங்குடல் சார்ந்த சிகிச்சையும் அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. இதில் 85 நிமிடங்களுக்கு அவர் மயக்க நிலையில் இருக்க வேண்டும் என்பதால், அந்த நேரத்துக்கான அதிபர் அதிகாரங்கள் அனைத்தும் துணை அதிபரான கமலா ஹாரிஸுக்கு மாற்றப்பட்டன.
வெள்ளியன்று நீடித்த அதிகார மாற்றம் குறித்து வெள்ளை மாளிகை பின்னர் விளக்கமளித்தது. வயதில் முதியவர் என்ற போதும், அதிபர் ஜோ பைடன் ஆரோக்கியமாகவே இருப்பதாக அவரது பிரத்யேக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புகை, குடி பழக்கம் ஏதும் இல்லாத பைடன், வாரத்துக்கு 5 முறையேனும் உடற்பயிற்சிகள் மேற்கொள்கிறார். அதிபருக்கான அலுவல்களை மேற்கொள்வதற்கான அனைத்து உடலநலத் தகுதிகளையும் அவர் பெற்றுள்ளார் எனவும் விளக்கமளித்துள்ளனர்.
வயது காரணமாக ஜோ பைடன் 2-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால், தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸுக்கு அந்த வாய்ப்பு செல்லக் கூடும். அப்படி அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வென்றால், அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்பது உட்பட பல்வேறு பெருமைகள் அவருக்குச் சேரும்.