ஆப்கனுக்கு கோதுமை எடுத்துச் செல்ல இந்தியாவுக்கு பாக். அனுமதி!

By காமதேனு டீம்

பெற்ற குழந்தையைக்கூட விற்று உணவு வாங்கும் அவலத்தில், ஆப்கான் மக்கள் உள்ளனர். உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையின்படி ஆப்கானிஸ்தான் மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமானோர் கடும் உணவு தட்டுப்பாட்டினால் தவித்து வருகின்றனர். 4 கோடிக்கும் அதிகமானோருக்கு போதுமான உணவு இல்லாதபோது கிட்டத்தட்ட 90 லட்சம் மக்கள் பட்டினிச்சாவு என்ற விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தாலிபான் ஆட்சிக்கு வந்த பிறகு ஆப்கானில் நிலவும் கடும் பஞ்சத்திலிருந்து அம்மக்களை மீட்கும் மனிதநேய செயலாக இந்தியா உணவுப் பொருட்களை வழங்க முன்வந்துள்ளது. பாகிஸ்தான் வழியாகத்தான் உணவுப் பொருட்களை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் வழியாக 50 ஆயிரம் டன்கள் கோதுமைவரை இந்தியா ஆப்கானிஸ்தானுக்குக் கொண்டு செல்லலாம் என்று பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாக்-இந்தியா வாகா எல்லைப் பகுதி வழியாக இந்தியா அனுமதிக்க பாகிஸ்தான் ஒப்புதல் அளித்திருப்பதாக ஆப்கானிஸ்தான் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சுலைமான் ஷா ஜாகீர் தெரிவித்துள்ளார்.

தாலிபான் ஆட்சிக்கு வந்தப் பிறகு ஆப்கானுக்கு இந்தியா நீட்டும் முதல் உதவிக்கரம் இதுவாகத்தான் இருக்கும். ஏற்கெனவே பாகிஸ்தான், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் உணவுப் பொருட்களையும் மருத்துவ உதவிகளையும் ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில், ஆப்கான் சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்று பாகிஸ்தான் வழியாக கோதுமை எடுத்துசெல்ல இந்தியாவுக்கு அனுமதி வழங்கு முடிவெடுத்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த நவம்பர் 12 அன்று அறிவித்தார். இதே வேண்டுகோளை கடந்த மாதம் இந்தியா முன்வைத்தபோது அப்போது பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE