நாடு திரும்பும் நவாஸ்: இக்கட்டில் இம்ரான்!

By எஸ்.எஸ்.லெனின்

பொருளாதாரம், தீவிரவாதம் என பூதாகர நடைமுறை பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், புதிதாய் அரசியல் பூகம்பத்துக்கும் தயாராகி வருகிறது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் நாடு திரும்புவதும், அதன் பொருட்டு ராணுவம் தரும் நெருக்கடிகளும், பிரதமர் இம்ரான் கானை நாற்காலியிலிருந்து நகர்த்துவது வரை அவை நீள இருக்கின்றன.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலைவரை தீர்மானிப்பதில், பிரதமருக்கும் ராணுவத்துக்கும் இடையே எழுந்த கசப்பு இன்னமும் தணிந்தபாடில்லை. அவற்றைத் தீர்ப்பதில் பிரதமர் இம்ரான்கானும் தீவிரம் காட்டவில்லை. தனது விருப்பத்துக்கு மாறான ஐஎஸ்ஐ தலைவர் நியமிக்கப்பட்டிருப்பதில், இம்ரான் தனித்து விடப்பட்டதாக உணர்கிறார்.

மகள் மரியமுடன் நவாஸ் ஷெரிஃப்

ராணுவத்துடன் நெருக்கம் காட்டும் பிஎம்எல் கட்சியும், அதற்கு பொறுப்பு வகிக்கும் மரியம் நவாஸும், இம்ரானுக்கு சிம்ம சொப்பனமாகிறார்கள். மரியமின் தந்தையும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரிஃப் ஊழல் வழக்குகளில் சிக்கி நீதிமன்ற தண்டனை தீர்ப்புக்கு ஆளாகி இருக்கிறார். 2019 இறுதியில் உடல் நிலை காரணமாக நவாஸின் வெளிநாட்டு பயணத்துக்கு, நீதிமன்றம் 4 வார அனுமதி வழங்கியது. ஆனால், கரோனா பரவலை காரணமாக்கி பாகிஸ்தான் திரும்புவதை நவாஸ் தாழ்த்தி வந்தார். தற்போது தந்தை நவாஸ் நாடு திரும்பலுக்கான நேரம் நெருங்கிவிட்டதாக, மகள் மரியம் கருதுகிறார்.

இம்ரானுடன் பூசலில் இருக்கும் ராணுவம், நவாஸை வரவேற்க தயாராகிறது. மகள் மரியமும் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். நிலுவையிலிருக்கும் நவாஸின் வழக்குகளை நீர்த்துப்போகும் ஏற்பாடுகள் செய்யப்படலாம். நவாஸ் ஷெரிஃப் பாகிஸ்தானில் இறங்கும் தருணம், இம்ரானுக்கான நெருக்கடி உச்சத்தில் இருக்கும். எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, இம்ரானின் கூட்டணிக் கட்சிகளே அவரை இக்கட்டில் தள்ளக் காத்திருக்கின்றன.

இம்ரானுடன் மனைவி பஸ்ரா பிபி

இம்ரான்கானுக்கு தற்போதைய ஒரே ஆறுதல் அவரது மனைவியும், சூஃபி குருவுமான பஸ்ரா பிபி மட்டுமே. இம்ரானின் நகர்வுகள் அனைத்திலும் அண்மைக் காலமாக இந்தக் கிச்சன் கேபினட் கையே ஓங்கியிருக்கிறது. 70 வயதை நெருங்கும் இம்ரானுக்கும் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரித்து வருவதால், ராணுவம் நெட்டித் தள்ளும் முன்னரே ராஜினாமா செய்துவிடவும் வாய்ப்பிருக்கிறது.

அனுமானங்கள் அனைத்தும் நவாஸ் ஷெரிஃபின் வருகை மற்றும் அதைத் தீர்மானிக்கும் அவரது உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்தே தெளிவுக்கு வர இருக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE