உலகின் நம்பர் ஒன் பணக்கார நாடானது சீனா!

By காமதேனு டீம்

’டாலர் தேசம்’, ’சூப்பர் பவர்’ என்றெல்லாம் பெயர்பெற்ற அமெரிக்காவை முந்திக்கொண்டு, உலகின் முதல் பணக்கார நாடானது சீனா.

மொத்தம் 120 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்பை ஈட்டி, உலகின் நம்பர் 1 பணக்கார நாடானது சீனா. இந்தச் செய்தியை, மெக்கன்ஸி குளோபல் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

உலக நாடுகளின் மொத்த வருவாயில், 60 சதவீதத்துக்கும் அதிகமாக ஈட்டும் முதல் 10 நாடுகளின் பட்டியலை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2000 முதல் 2020-ம் ஆண்டு வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி 2000-ல் 156 டிரில்லியன் டாலராக இருந்த உலகின் பொருளாதார நிகர மதிப்பு, 2020-ல் 514 டிரில்லியன் டாலராக உயர்ந்தது. இதில் 3-ல் ஒரு பங்கை சீனா ஈட்டியுள்ளது.

சீனாவின் நிகர மதிப்பு 2000-ல் வெறும் 7 டிரில்லியன் டாலராக இருந்துள்ளது. பிறகு உலக வர்த்தக மையத்தில் சீனாவும் இணைந்தது. அதன் பிறகு அபரிமிதமான வளர்ச்சி அடைந்து, தற்போது 120 டிரில்லியன் டாலராக நிகர மதிப்பு உயர்ந்துள்ளது. 2-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அமெரிக்காவின் நிகர மதிப்போ 50 டிரில்லியன் டாலராக தற்போது உள்ளது. அதை அடுத்து ஜெர்மனி, பிரான்சு, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மெக்சிகோ, ஸ்வீடன் ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.

சீனா மற்றும் அமெரிக்காவில் அந்நாடுகளின் மொத்த வளத்தில் 3-ல் 2 பங்கை 10 சதவீத பணக்காரர்கள் மட்டுமே கையகப்படுத்தியிருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக அளவில் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில்தான் 68 சதவீத நிகர மதிப்பு குவிந்துள்ளதை இந்த ஆய்வு முடிவு சுட்டிக்காட்டியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE