அனல் மின்சாரத்தின் இடத்தைப் பிடிக்குமா அணு மின்சாரம்?

By ஆர்.என்.சர்மா

கிளாஸ்கோவில் நடந்த பருவநிலை மாறுதல் தொடர்பான மாநாடு திட்டவட்டமான முடிவுகளையோ, இலக்குகளையோ அறிவிக்கத் தவறியது என்றே கூறிவிடலாம். பருவநிலை மாற்றம் குறித்து இளைய தலைமுறையினர் கவலைப்படுவதைப் போல, உலக நாடுகளின் தலைவர்கள் கவலைப்படவில்லை என்பது உண்மையே. அதேநேரம், அவர்களுடைய உண்மையான கவலை என்னவென்பது இளைய தலைமுறைக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

ஒரேநாளில், அனல் மின்நிலையங்கள் அனைத்தையும் மூடிவிடுவது என்ற முடிவுக்கு உலகம் வந்துவிட முடியாது. ஆண்டுக்கணக்கில்கூட அப்படி முடிவெடுப்பது சாத்தியமில்லாதது. உணவும் நீரும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மின்சாரம். மின்சாரத்தைக் காற்றிலிருந்து, கடல் அலையிலிருந்து, சூரிய ஒளியிலிருந்து தயாரிக்கலாம் என்பதெல்லாம் நிரூபணமாகிவிட்டது. ஆனால், இந்தத் தயாரிப்பு முறைகள் சிறிய வீடுகள், தொழில் நிறுவனங்கள், கடைகள் போன்றவற்றுக்கு நிச்சயம் பயன்படும். பெருமளவில் மின்சாரத்தைத் தொடர்ச்சியாகத் தயாரித்து அளிக்க இப்போதைக்கு அனல் மின் நிலையங்களைப்போல கைகொடுப்பது எதுவுமில்லை. புனல் மின் நிலையங்கள் (நீர் மின்நிலையங்கள்), அணைகளில் போதிய நீர் இருப்பு இருக்கும்போது மட்டுமே சாத்தியம். இப்போது ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்துவருவதால் மிகச் சில மாநிலங்களில்தான் நீர்மின்சாரம் கைகொடுக்கிறது.

நுகர்பொருட்களை லட்சக்கணக்கில் தயாரிக்கும் நிறுவனங்களின் மின்சாரத் தேவையை எப்படி ஈடு செய்வது என்பது, விடை காணப்பட வேண்டிய கேள்வி. புதைபடிமங்கள் மூலம் கிடைக்கும் மின்சார ஆற்றல் இப்போதைக்கு மலிவானது. நிலத்தடியிலிருந்து கிடைக்கும் பெட்ரோலிய எண்ணெய்யைவிட நிலக்கரி மலிவானது. நிலக்கரியின் அளவும் பல பத்தாண்டுகளுக்குப் போதுமானது. இந்நிலையில், கையிலிருக்கும் பலாக்காயை விட்டுவிட்டு புதரில் இருக்கும் களாக்காய்க்கு உலகத் தலைவர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதில் வியப்பில்லை. (பழமொழியைத் தலைகீழாக எழுதவில்லை, யதார்த்தம் இதுதான்!)

ஆபத்(து)’ பாந்தவன் அணு மின்சாரம்

நிலக்கரி மூலமான அனல் மின்சாரத்துக்குப் பதிலாக அணுசக்தியின் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம். ஆனால், அதில் நிறைய ஆபத்துகள் இருக்கின்றன. ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு அடையும் மரணத்தை, அணு மின் நிலையங்களில் உலகில் எங்காவது, யாராவது கவனக்குறைவாகச் செயல்பட்டால் ஏற்படக்கூடிய மரணம் விரைவானது, அளவிட முடியாதது. விபத்து மட்டுமில்லை, போரில் எந்த நாடாவது தாக்கிவிட்டாலோ, மக்களுடைய உயிரைக் குடிப்பது குறித்து கவலையேபடாத பயங்கரவாதிகளோ அணு மின்சார நிலையங்களைத் தகர்த்துவிட்டாலோ எல்லோருடைய நிலையும் அதோ கதிதான்.

அணு மின்சார நிலையங்களை நிறுவுவதற்குப் பல மடங்கு செலவாகும். அவற்றை விரைவாக நிறுவி உடனே மின்சாரம் தயாரித்துவிட முடியாது. அப்படிக் கிடைக்கும் அணு மின்சாரம் தயாரிப்புச் செலவு காரணமாக, பல மடங்கு விலை அதிகமாக வைத்துத்தான் விற்கப்பட நேரும். அணு மின் நிலையத் தொழில்நுட்பம் உலகின் முன்னணி நாடுகளுக்குக்கூட இன்னமும் பழக்கமாகவில்லை. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னால் சிந்தித்து உருவாக்கப்பட்ட அணு உலைகள்தான், இன்னமும் உற்பத்தியில் இருக்கின்றன. அவற்றை மேம்படுத்த மேற்கொண்ட ஆராய்ச்சிகளுக்கெல்லாம் வெற்றி கிட்டிவிடவில்லை. அணு மின் நிலையங்களை மிகப் பெரிதாக நிறுவாமல், சிறியதாகவோ நடுத்தர அளவுள்ளதாகவோ ஏராளமாக நிறுவலாம் என்ற யோசனை இப்போது கூறப்படுகிறது. இதுவுமே யோசனைதான் - இதற்கு வடிவம் கொடுப்பது எளிதல்ல.

தொழில்நுட்பம் எளிதல்ல!

இவையெல்லாவற்றையும்விட அணு மின்சாரத் தயாரிப்புக்கான இடுபொருட்களையும் கருவிகளையும் ஒருசில நாடுகள்தான் இன்று வைத்துள்ளன. அவற்றின் அனுமதி பெறாமல் புதிய நாடுகள் பெறமுடியாது. யாராவது உடந்தையாக இருந்தால் திருடிக்கொள்ளலாம். திருடுகிறவர்களுடைய ஆலைகளில் பிரச்சினைகள் அல்லது பழுதுகள் வந்தால் வெளியாட்களைக் கூப்பிட்டு சரி செய்ய முடியாது. எங்கு திருடப்பட்டது, யார் உதவினார்கள் என்ற குட்டு அம்பலமாகிவிடும். அப்படி வெளியே தெரியாமல் மூடி மறைத்தாலோ, சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதையாகிவிடும். எந்த உலகத்தின் சுற்றுச்சூழலைக் காக்க நிலக்கரிப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று போராடுகிறோமோ, அந்த உலகத்துக்கே பெரிய எமன் அணு மின்சாரம். எனவே, கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்துகொள்வதற்கு சற்றே துணிச்சல் வேண்டும்.

70 ஆண்டுகளாக...

1950-ம் ஆண்டுகளில் அணுத் தொழில்நுட்பம் மின்னுற்பத்திக்கு பயன்படுத்தத் தொடங்கப்பட்டது. அணுவைப் பிளப்பதன் மூலம் கிடைக்கும் உயர் அளவிலான வெப்பத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து நீராவி மூலம் ஜெனரேட்டர்களை இயக்கி மின்சாரம் தயாரிக்கிறார்கள். இதைப் படிக்கும்போது டீக்கடையில் பாய்லரைச் சூடேற்றி தண்ணீரைப் பெறுவதைப் போல சுலபமாகத் தோன்றும். கடுமையான வெப்பத்தைத் தாங்கும் உலைகளையும் உலைக் கருவிகளையும் தயாரிப்பதும், பராமரிப்பதும் லேசான செயல் அல்ல. அணு மின்நிலையங்களில் சகலப் பாதுகாப்பு வசதிகளுடன் பணியாற்றும்போதே, கதிர்வீச்சுக்குத் தங்களையும் அறியாமல் விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப உதவியாளர்களும் இதரப் பணியாளர்களும் ஆளாகிவிடுகிறார்கள்.

ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது 2-வது உலகப் போரின்போது வீசிய அணுகுண்டுகளால் ஏற்பட்ட பாதிப்பின் முழு வரலாறுமே மக்களுக்கு இன்னமும் சொல்லப்படவில்லை. கதிரியக்கம் மோசமானது என்பது மட்டுமே தெரியும். அது மனிதர்களை மட்டுமல்ல தாவரங்களை, பிராணிகளை, பூச்சிகளை பாதிப்பதோடு அடுத்தடுத்த தலைமுறைகளின் மரபணுக்களையும் சேதப்படுத்தும் வலிமை கொண்டது.

மனிதத் தவறுகளால் விபத்து

அணு நிலையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள், உண்மையிலேயே பாதுகாப்பானவை அல்ல என்பதையே செர்னோபில், ஃபுகுஷிமா, திரிமைல் ஐலண்ட் அணு நிலையங்களில் மனிதத் தவறுகளால் நேர்ந்த விபத்துகள் சுட்டிக்காட்டுகின்றன. எண்ணூரிலும் மேட்டூரிலும், தூத்துக்குடியிலும் அனல் மின் நிலையங்களில் கன்வேயர் பெல்ட்டில் தீப்பிடித்து எரிந்துபோவதை அடிக்கடி பத்திரிகைகளில் படிக்கிறோம். அணு மின்நிலையத்தின் பாதுகாப்பில் நாம் இதே அலட்சியத்தைக் காட்டினால் என்னாவது? எனவே, அணு மின்சாரத் தயாரிப்பை நினைத்தவுடன், அதிக அளவில் தொடங்குவதும் ஆபத்துதான். இந்தக் காரணங்களால்தான் உலகத் தலைவர்கள் அனல்மின்நிலையப் பயன்பாட்டை நிறுத்துவதற்குத் தயங்குகின்றனர்.

சூரிய ஒளி மின்சாரம்

இந்தியா போன்ற நாடுகளுக்கு சூரிய ஒளி மின்சாரம் நல்லது. எல்லோரும் அவரவர் வீட்டுக் கூரைகளில் சூரியஒளி மின்சாரத்தைத் தயாரிக்கத் தொடங்கினாலே, பொதுத் தேவை கணிசமாகக் குறையும். மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றே, எல்லா அரசுகளும் சமீபகாலமாகக் கூற ஆரம்பித்துள்ளன. எனவே, மின்கட்டணச் செலவு அதிகமாகாமல் இருக்க, அரசின் மானிய உதவி போதாவிட்டாலும் கூட எல்லோரும் சுயமாக சூரிய ஒளி மின்சார தயாரிப்புப் பிரிவை அமைப்பதே நல்லது. இப்போது போட்டோவோல்டிக் தகடுகள் தயாரிப்பில் போட்டி ஏற்பட்டு வருகிறது. பெருமளவு சீனத் தயாரிப்புகளைத்தான் விலை மலிவு என்பதற்காக வாங்குகிறார்கள் என்றாலும், அவற்றின் தரத்தைக் கூட்டுவதற்கான ஆராய்ச்சிகளும் கூடவே நடக்கின்றன. எனவே, விரைவில் நல்ல செய்தியைக் கேட்போம் என்று நம்பிக்கையுடன் இருப்போம்.

அணு மின்சாரத்துக்கு ஆதரவு

அதேவேளையில், அணு மின்சாரத்துக்கு ஆதரவாகப் பேசுவோரும் அதிகமாக இருக்கின்றனர். அணு மின்சாரம் தயாரிக்கப்படும்போது, காற்றில் கரியுமில வாயு சிறிதளவுகூட வெளிப்படாது என்பது அவர்களுடைய வாதம். பெரிய நாடுகளில் இன்னும் சில நாட்களில் இதற்கு ஆதரவான குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் வியப்பதற்கு ஏதுமில்லை. காரணம், இந்தத் தொழில்நுட்பம் தெரிந்த நிறுவனங்கள் உலக அளவில் மிகச் சிலதான். மின்சார நிலையத்தை நிறுவுவதற்கே வெளிநாட்டுத் தொழில்நுட்ப உதவியும் ஆலோசனைகளும் சாதனங்களும் அவசியம். இவற்றுக்கெல்லாம் அந்த நிறுவனங்கள் வைத்ததுதான் விலை. அதில் பராமரிப்பு, பழுதுபார்ப்பு எல்லாமும்கூட அந்நிறுவன நிபுணர்களால்தான் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும். நம் நாட்டுப் பொறியாளர்கள் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கலாம்.

அணு மின்நிலையங்களை நிறுவிவிட்டால் தொடர்ந்து இயக்கிவிட முடியும் என்பது நிச்சயமில்லை. அதே சமயம் சும்மா மூடிவைக்கவும் முடியாது. எல்லாவற்றையும்விட பெரிய பிரச்சினை அணுக்கழிவுகளை எப்படி பத்திரமாக வெளியே எடுப்பது, எந்த வகையில் வெளியில் எடுத்துச் செல்வது, எங்கே கொட்டுவது என்பதுதான். கழிவுகளை ஆழக் குழிதோண்டி புதைக்க ஆகும் செலவு மேலும் பல கோடிகள். எனவே விவேகமுள்ள எந்த நாடும் அணு மின்சாரத்தை அனல் மின்சாரத்துக்குப் பதிலாகப் புகுத்த ஆயிரம் முறை யோசிக்கும். காற்று தொடர்ந்து வீசாது, குறிப்பிட்ட பருவத்தில் மட்டும்தான் கைகொடுக்கும். கடல் அலை நிரந்தரம் என்றாலும் தயாரிப்பில் பிரச்சினைகள் ஏராளம். சூரிய ஒளியுமே வெப்ப மண்டல நாடுகளில் மட்டுமே அதிக நேரம் இருக்கும்.

நாட்ரிம்

அணு மின்சாரத்துக்கு ஆதரவாகக் கட்டுரைகள், செய்திகள், புத்தகங்கள், பிரசுரங்கள் வெளியிடுவது மட்டுமல்ல, உலக அளவில் உச்சி மாநாடுகளுக்குக்கூட ஏற்பாடு செய்யும் அளவுக்கு செல்வ வளம் மிக்கவை அணு ஆற்றல் நிறுவனங்கள். இப்போதே, விரைவாக அணு மின்சாரம் தயாரிக்கும் ‘நாட்ரியம்’ (Natrium) அணு உலை குறித்துப் பேசத் தொடங்கிவிட்டார்கள். இது நவீன – நடுத்தர அளவிலான அணு உலையாம். ஐக்கிய நாடுகள் சபைகூட இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவில் இப்போது தயாராகும் மின்சாரத்தில் 19 சதவீதம் அணு மின்சாரமாக இருக்கிறது.

உலகில் அணு மின் தயாரிப்பில் முன்னணியில் உள்ள 15 நாடுகளில் இந்தியா 13-வது இடத்தில் இருக்கிறது.

அணு மின்நிலையங்களை அமைப்பதில் வேறு சிக்கல்களும் உள்ளன. அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் வோக்டில் என்ற இடத்தில் அணு மின்நிலையம் அமைப்பதில் தோல்வி ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக அதை நிறுவினாலும், திட்டமிட்ட வகையில் இல்லாமல் அதைத் தவறாக நிறுவிவிட்டார்கள். அணு உலை தயாரிப்புப் பிரிவில் அதை மீண்டும் பிரித்து வெல்டு செய்ய வேண்டி வந்தது. அந்த அணுமின் நிலையத்தைக் கட்டிய வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் இதற்காக 1,400 கோடி டாலர்கள் செலவழிக்க வேண்டியிருந்ததால் கிட்டத்தட்ட திவால் நிலைக்கு வந்துவிட்டது. ஆலை உற்பத்தியைத் தொடங்கியிருந்தால் 1,000 கிகாவாட் மின்சாரத்தை வழங்கியிருக்க முடியும். இத்தனை கோடி ரூபாயை முதலீடு செய்து மின்சாரம் தயாரிக்க உற்பத்திச் செலவு ஒரு பக்கம் இருக்கட்டும், இவ்வளவு ரூபாயை வட்டிக்குக் கடன் வாங்கினால் அந்தத் தொழிலதிபர் வட்டி சுமையாலேயே திவால் நிலைக்குத்தான் செல்வார். எனவேதான் உலகத் தலைவர்கள், சூழலியலாளர்கள் விரும்பியபடி அனல் மின்நிலையங்களை அடுத்த ஆண்டுக்குள் காயலாங்கடைக்குத் தள்ளும் முடிவு எதையும் எடுக்காமல் தள்ளிப் போடுகின்றனர்.

உலக அரங்கில் இந்தியாவின் நிலை

இந்தியா இப்போது ஆண்டுக்கு 6,780 மெகாவாட் மின்சாரத்தை அணுசக்தி மூலம் தயாரிக்கிறது. 2031-ல் இதை 22,480 மெகாவாட்டாக உயர்த்திவிட நினைக்கிறது. இந்தியா தனது முழு நிறுவுதிறன் அளவுக்கு மின்சாரம் தயாரிப்பதில்லை. உலகில் அணு மின் தயாரிப்பில் முன்னணியில் உள்ள 15 நாடுகளில் இந்தியா 13-வது இடத்தில் இருக்கிறது. மணிக்கு 40,374 கிகாவாட் தயாரிக்கிறது. அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷியா, தென் கொரியா, கனடா, உக்ரைன், ஜெர்மனி, ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன், ஜப்பான் ஆகியவை முதல் 12 இடங்களில் உள்ளன. பெல்ஜியமும் தைவானும் அடுத்து வருகின்றன.

இந்தியாவில் 22 அணு உலைகள் மூலம் 6,780 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மகாராஷ்டிரத்தின் தாராப்பூரில் 4 பிரிவுகள், ராஜஸ்தானில் ஆறு பிரிவுகள், சென்னை (கல்பாக்கம்) அணு மின்நிலையத்தில் 2 பிரிவுகள், கர்நாடகத்தின் கைகாவில் 4 பிரிவுகள், கூடங்குளத்தில் 2 பிரிவுகள், உத்தர பிரதேசத்தின் நரோராவில் 2 பிரிவுகள், குஜராத்தின் காக்ரபாரில் 2 பிரிவுகள் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள அணு நிலையங்களிலேய கூடங்குளம்தான் அதிக மின்னுற்பத்தி நிறுவு திறன் உள்ளது. அணு ஆலையின் பாதுகாப்பு, சிறு விபத்துகள், பழுதுகள் குறித்து மக்களுக்கு எதையும் அரசு தெரிவிப்பதில்லை. விபத்து நேர்ந்தால் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்வார்கள் என்பது மட்டுமே மக்களுக்குத் தெரிந்திருக்கிறது.

ஆக, இன்றைக்கு இருக்கும் சூழலைப் பார்க்கும்போது அனல் மின்சாரத்தை அணு மின்சாரம் அத்தனை எளிதில் பதிலீடு செய்ய முடியாது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE